ஸ்மைல் ப்ளீஸ் – தமிழில் வெளிவரவிருக்கும் தமிழ் இசை வீடியோ ஆல்பம். தமிழில் வெளிவரும் இந்த பன்மொழி இசை வீடியோ தொகுப்பிற்கு இசையமைத்திருப்பவர் அறிமுக இசையமைப்பாளர் தயா சைரஸ். இயக்கியிருப்பவர் எஸ்.மகேஷ்.
இந்த இசை ஆல்பம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. மூன்று இசையமைப்பாளர் ஒரு வீடியோ ஆல்பத்தில் தோன்றியிருப்பது இதுதான் முதல் முறை. இவர்களோட மற்ற திரை பிரபலங்களும் பாடி, ஆடியிருக்கிறார்கள்.
ஓம் நமச்சிவாய என்று துவங்கும் மாணிக்கவாசகரின் பாடல் வரிகளை உள்ளடக்கியது இந்த ஆல்பத்தின் முதலாவதாக இருக்கும் பக்திப் பாடல். இதில் வேத மந்திர வரிகளுடன், ராக் இசையும் கலந்து ஒரு புதிய இசைக் கோர்ப்பை இதில் உலாவ விட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலின் காட்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் பல சிவ ஆலயங்களின் பின்னணியில் இயற்கை எழில் கொஞ்சம் இடங்களையும் சேர்த்து படமாக்கப்பட்டுள்ளது.
புன்னகை ஒன்றுதான் என்ற பாடலை கவிஞர் யுகபாரதி எழுதி, திரையில் பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா தோன்றி நடித்திருக்கிறார். இதற்கான ஷூட்டிங் மலேசியாவில் நடந்துள்ளது. அனைவரையும் புன்னகைக்கச் சொல்லும் இந்தப் பாடல் சிரிக்க வைக்கும் கோஷமாக இனிமேல் இருக்கும் என்கிறார் ஆல்பத்தின் இயக்குநர் மகேஷ்.
துள்ளலான ஒரு மேற்கத்திய இசையில் உருவாகியிருக்கும் நான்தான் காதல் ரோமியோ என்ற பாடலை பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி ஆடி, பாடியுள்ளார். கிளப் மியூஸிக் வடிவத்தில் இசைக்கப்பட்டிருக்கும் இப்பாடலின் வரிகள் இளைஞர்களின் ஆசைகளை வெளிப்படுத்தும்விதமாக எழுதப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் பிரேம்ஜியுடன் இணைந்து ஆடியிருக்கிறார் கலாபக் காதலன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த அக்சரா. இன்னொரு மும்பை மாடல் ஒருவரும் இந்தப் பாடலில் பிரேமிஜியுடன் செம ஆட்டம் போட்டிருக்கிறார். இந்தப் பாடல் காட்சி சென்னையில் உள்ள பின்னி மில்லிலும், பிரஸ் கிளப் வளாகத்திலும் ரெட் ஒன் கேமிராவால் படமாக்கப்பட்டுள்ளது. வாசுகி பாஸ்கர் இந்தப் பாடலின் காட்சிகளுக்கு உடைகளை வடிவமைத்துள்ளார்.
மூன்றாவதாக இசையமைப்பாளர் போபோ சசி பாடி நடிக்கும் ஒரு பாடல் மிக விரைவில் படமாக்கபடவுள்ளதாம். இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆடப் போகிறாராம்..
“இந்த இசை ஆல்பத்திற்கு இப்போது அப்படியென்ன மார்க்கெட்டிங் இருக்கிறது..?” என்று இதன் இயக்குநர் மகேஷிடம் கேட்டதற்கு.. “மார்க்கெட்டிற்காக நாங்கள் இதனைச் செய்யவில்லை. இது எங்களுக்கு ஒரு கனவு முயற்சி.. சினிமாவில் நுழைய விரும்பியே நாங்கள் இந்தத் துறைக்குள் வந்தோம். அங்கே கால் வைப்பதற்கு முன் எங்களுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கு ஒரு அடையாளமாக இந்த இசை ஆல்பத்தை பயன்படுத்திக் கொள்கிறோம்..” என்றார்.
டாக்குமெண்ட்டரி படங்கள்.. குறும் படங்கள்.. வரிசையில் இப்போது இசை ஆல்பங்களும் ஆரம்பித்துவிட்டன..!