full screen background image

“அந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லை…” – நடிகர் பாபி சிம்ஹா மறுப்பு..!

“அந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லை…” – நடிகர் பாபி சிம்ஹா மறுப்பு..!

புதுமையான ஒரு குற்றச்சாட்டு சினிமாவுலகத்தில் வெடித்திருக்கிறது.

பாபி சிம்ஹா, மோனிஷா, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மீரா ஜாக்கிரதை’. இந்தப் படத்தின் போஸ்டர்களில் பாபி சிம்ஹாவின் புகைப்படங்களும் இருக்கின்றன. படத்தின் டிரெயிலரிலும் பாபி சிம்ஹாவே வலம் வருகிறார். அப்படியிருந்தும் “நான் அந்தப் படத்தில் நடிக்கவே இல்லை..” என்கிறார் நடிகர் பாபி சிம்ஹா.

meera jaakirathai-2

இந்தப் படத்தை எழுபது வயதான முன்னாள் ராணுவ வீரரான R.G.கேசவன் இயக்கியிருக்கிறார். அவருடைய மகன் மகேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தினை M.அந்தோணி எட்வர்ட் தயாரித்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு 2011-ம் ஆண்டில் நடந்தது. பல்வேறு சிக்கல்களினால் படம் வெளியாக தாமதமாகி இப்போதுதான் தணிக்கை முடிந்து வரும் மே 27-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.

இந்த படத்தின் விளம்பரங்கள் கடந்த சில நாட்களாக நாளேடுகளில் வந்துகொண்டிருக்கும் சூழலில், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் பாபி சிம்ஹா, “நான் இந்தப் படத்தில் நடிக்கவே இல்லை..” என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

“அந்த படக் குழுவில் எனக்கு யாரையுமே தெரியாது. என்னுடைய முந்தைய படமான ‘உறுமீன்’ படத்தின் புகைப்படங்களையே காப்பி செய்து, போலித்தனமாக இந்தப் படத்தின் விளம்பரங்களில் உபயோகித்துள்ளார்கள்..” என்று படக் குழுவினர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

bobby simha-letter-actors union-1

இந்த புகார் சம்பந்தமாக ‘மீரா ஜாக்கிரதை’ திரைப்படத்தின் இணை இயக்குநரும், இயக்குநர் கேசவனின் மகனுமான மகேஷ் பேசும்போது, “பாபி சிம்ஹா தான் இப்படத்தில் நடிக்கவில்லை என்று சொல்வது மிகப் பெரிய பொய். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா சிவநேசன் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கான சம்பளமாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய்  வழங்கப்பட்டது. படத்தின் இரண்டாவது ரீல் முதல் க்ளைமாக்ஸ் உள்ள ஆறாவது ரீல்வரை அவர் நடித்திருக்கும் கட்சிகள் இருக்கின்றன.

meera jaakirathai-1

பாபி சிம்ஹாவின் இந்த பொய்யான புகாரினால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலுக்கு அவர்தான் பொறுப்பு. இந்தப் படத்தில்தான் என்னுடைய வாழ்க்கையும், படக் குழுவில் உள்ள மற்றவர்களின் வாழ்க்கையும் அடங்கியுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்புக்காக தயாரிப்பாளர் பலரிடமும் கடன்பட்டுள்ளார். இந்தப் படம் வெளியாகவில்லை என்றால் அவரது வாழ்க்கை நாசமாகிவிடும். இந்தப் படம் வெளிவராமல் போனால் தயாரிப்பாளர் தரப்பினர் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை..” என்றார் இணை இயக்குநர் மகேஷ்.

நாம் விசாரித்தவரையில் பாபி சிம்ஹா பிரபலம் ஆவதற்கு முன்பாக 2001-ம் ஆண்டில் இந்தப் படம் உருவானதால் இதில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் தினச் சம்பளத்தையும் இந்தப் படத்திற்காகப் பெற்றிருக்கிறார். இப்போது அவருக்கென்று தனியாக மார்க்கெட் உருவாகிவிட்டதால் இதைத் தக்க வைக்கவும், இந்தப் படம் வெளியாகி தோல்வியடைந்தால் தனது மார்க்கெட் சிதறுமே என்கிற எண்ணத்திலும்தான் பாபி சிம்ஹா இப்படியொரு உல்டா புகாரை அளித்திருக்கிறார் என்றும் தெரிகிறது.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’ என்னும் திரைப்படத்திலும் அதிக சம்பளம் கேட்டு கொடுக்காததால் அதற்கு டப்பிங் பேசாமல் தவிர்த்தார் பாபி சிம்ஹா. பின்னர் வேறு ஒருவர் அவருடைய கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து அந்தப் படம் வெளியானது.

ஒரு பொறுப்பான நடிகருக்கு இது அழகல்ல. ஏற்கெனவே தமிழ்ச் சினிமாவின் நிலை பரமபதம் போலத்தான் இருக்கிறது. தயாரிப்பாளர்களின் நிலைமை அதலபாதளத்தில் இருக்கிறது. ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுப்பதே பெரிய விஷயம். வாய்ப்பு தேடும்போது அவர் தெய்வமாகத் தெரிவார். ஆனால் இதே ஹீரோக்கள் வளர்ந்துவிட்ட பின்பு அதே தயாரிப்பாளரை கொசுவாக பாவிப்பதெல்லாம் நல்ல மனிதப் பண்பல்ல..!

பாபி சிம்ஹாவின் நடிப்பு கேரியரில் ஒரு படம் கூடியிருக்கிறதே என்று அவர் சந்தோஷப்பட வேண்டுமே தவிர.. இப்படியெல்லாம் பொய் சொல்லி படத்தை வெளியிடவிடாமல் தடுக்கக் கூடாது.  இது அவருக்கு பெருமையளிக்கும் செயல் அல்ல..!

Our Score