full screen background image

வந்தா ‘கிங்’காத்தான் வரணும் – வடிவேலுவின் நம்பிக்கை..!

வந்தா ‘கிங்’காத்தான் வரணும் – வடிவேலுவின் நம்பிக்கை..!

நேற்றைக்கு நிஜமாகவே பிரசாத் லேப்பில் தெனாலிராமன் போலவே காட்சியளித்தார் வைகைப் புயல் வடிவேலு. அவர் பேசுவதற்கு முன்பாக பேசிய நடிகர்கள் சந்தானபாரதி, பாலாசிங், சண்முகராஜ், கிருஷ்ணமூர்த்தி, மனோபாலா என்று ஐந்து பேருமே ஈகோ பார்க்காமல் வடிவேலுவை பாராட்டித் தள்ளிவிட்டார்கள்.

அதிலும் மனோபாலாவின் பாராட்டை கேட்டபோது நிசமாகவே பேசுவது மனோபாலாதானா என்ற சந்தேகமே வந்துவிட்டது.. “வடிவேலுவுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணுமே தெரியாது.. அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் சினிமா, சினிமாதான். அதைத் தவிர வேற எதையும் அவர் யோசிக்க மாட்டாரு. இந்தப் படத்துல அந்த அளவுக்கு பெர்பெக்ஷனோட வேலை பார்த்திருக்காரு.. தனிப்பட்ட முறைல எந்த ஹீரோவும் தன் படத்துல செய்யாத விஷயங்களையெல்லாம் வடிவேலு இந்தப் படத்துல செஞ்சிருக்காரு. அவரோட சினிமா ஆர்வம் எங்களையெல்லாம் ஆச்சரியப்பட வைக்குது..” என்றார்.

பலத்த கரகோஷத்தோடு எதிர்பார்ப்போடு மைக்கை பிடித்தார் வடிவேலு.

பத்திரிகையாளர்களை கூர்ந்து பார்த்தபடியே தன் பேச்சைத் துவக்கினார் வடிவேலு.. “ம்.. எல்லாரும் என்ன பார்க்கறீங்கன்னு தெரியுது எனக்கு…தேவையா உனக்கு…? ஏன்யா…? அதானே….? இது நானா எடுத்துக்கிட்ட முடிவு கிடையாது. காலத்தோட கட்டாயம். இந்த ரெண்டு, ரெண்டரை வருஷம் எனக்கு நல்ல ஓய்வு கிடைச்சது. ரொம்ப சந்தோஷமும்கூட.. அதுல எனக்கு எந்த வேதனையும் கிடையாது. அந்த நேரங்கள்ல எனக்கு நிறைய படங்களும் வந்துச்சி. அந்த படங்களையெல்லாம் நான்தான் வேண்டாம்னு சொன்னேன். காரணம் என்னன்னா, இனிமேல் நாம நடிச்சி வர்ற படம் சிறந்த படமா.. வந்தா கிங்கா வரணும்னு நினைச்சு எடுத்த படம்தான் இந்த ‘தெனாலிராமன்’.

பத்திரிகைக்காரங்க.. தெரிஞ்சவங்கன்னு நிறைய பேரு எனக்கு போன் பண்ணி ஏன்யா.. திரும்பவும் நடியேன்யான்னு சொன்னாங்க.. என் வீட்ல.. என் பிள்ளைக.. பேத்திக.. எல்லாரும் போனை கொடுத்து ‘பேசு.. பேசு’ன்னு சொன்னாங்க.. எல்லார் வீட்டுலயும் நான் ரேஷன் கார்டுலதான் இல்லன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். உங்க வீட்டுல நானும் ஒருத்தங்கறத, இந்த இரண்டு வருஷ கேப்புல உணர்ந்தேன்.

எனக்கு படம் நடிக்கக் கொடுக்கிறதுக்கு பாதி பேர் யோசிச்சாங்க. ஏதாவது பிரச்சனை ஆயிடுமோன்னு பயந்தாங்க. அதுவும் உண்மைதான். இவனை வைச்சு படமெடுத்தா ரிலீஸ் பண்ண முடியுமான்னு யோசிச்சாங்க.. இங்க இல்லாம, மலையாளம், தெலுங்கு படங்கள்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்படியே போய் நடிச்சிருந்தா இங்க வடிவேலுவுக்கு மார்க்கெட் முடிஞ்சி போச்சி.. அதான் ஊரை விட்டு காலி பண்ணிட்டு போயிட்டான்னு ஒரு வார்த்தை வந்துடும்.. அதனாலதான் அங்கலாம் போயி நடிக்கலை.

இந்த படத்தோட கதையை டைரக்டர் யுவராஜ் வந்து சொன்னாரு.. நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டிருந்த ஒரு கதை. ஒரு லைன் மட்டும் சொன்னாரு.. பிரமாதமா இருந்துச்சு.. யாரை வைச்சு பண்ணலாம்ன்னு யோசிச்சப்போ.. ஐயா அகோரம் ஐயா.. ‘வடிவேலுவை வைச்சு நான் பண்றேன்’னு சொல்லி அவராத்தான் ஒத்துக்கிட்டாரு. ஏன்னா, இதை இந்த சபைல சொல்லியாகணும்.

இருந்தாலும் அவர்கிட்ட கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க.. வேணாம்னு சொல்லியிருக்காங்க.. ஏன்யா.. அவரை வச்சு படம் எடுத்தா என்ன தப்பு..? முன்னாடி சொல்லாம பின்னாடி வந்து சொல்ற.. போய்யா போன்னு சொல்லிருக்காரு. மெசேஜ்லாம் போயிருக்கு… இன்னும் ஏன் வாடகை சைக்கிள்லாம் எடுத்துக்கிட்டு போய் அவர் வாசல் முன்னாடி கதறி அழுதிருக்காங்க. ‘மோசம் போயிட்டீங்களே ஐயா’ன்னு.. அவரோ, ‘அவரு என்னையா தப்பு பண்ணியிருக்காரு. என்ன பெரிய குத்தம் பண்ணாரு. என்னமோ போனாரு வந்தாரு. அங்கயும் போயி காமெடிதானயா பண்ணியிருக்காரு’ன்னு..!

நான் சினிமால பண்ண காமெடியத்தான் இப்ப வெளியில பண்ணிக்கிட்டிருக்காங்க. அகோரம் சார், அண்ணண் தம்பி மூணு பேரையும் நான் கடவுளாத்தான் பார்க்கிறேன். அவங்கள கையெடுத்து கும்புடறேன். அவங்க கொடுத்த ஊக்கத்துல.. உற்சாகத்துல.. உழைச்சு. உழைச்சு இந்தப் படத்தை எடுத்திருக்கோம். இந்த படத்துல சும்மாவே நடிக்கிறேன், பணமே வேணாம்னு சொல்ற அளவுக்கு போயிட்டேன். ரொம்ப கடுமையா உழைப்பு இதுல இருக்கு. காலைல 5 மணிக்கு ஷூட் முடிஞ்சு அடுத்த ஷூட்டிங் 7 மணிக்கே ஆரம்பிச்சிருக்கோம். அந்த அளவுக்கு உழைச்சிருக்கோம். ரொம்ப அற்புதமான படத்துல ஒரு கேப் விட்டு நடிச்சது எனக்கும் சந்தோஷமா இருக்கு.

இன்னொரு விஷயம் பார்த்தீங்கன்னா.. இந்தப் படத்துல மனோபாலா அண்ணன், பாலாசிங் அண்ணன், சண்முகராஜ் அண்ணன், கிருஷ்ணமூர்த்தின்னு அத்தனை பேருமே கடுமையா உழைச்சிருக்காங்க.. இன்னொரு பக்கம் பார்த்தீங்கன்னா இந்தப் படத்தோட சிஜி வொர்க், செட்டு இப்படி ரொம்ப அசத்தலா பண்ணியிருக்காங்க. அத்தனை உழைப்பை என் கண்ணால பார்த்திருக்கேன்..!

என் அருமை நண்பர், இமான் ஸாரை பத்தி நான் நிறைய சொல்லியாகணும். எந்தெந்த ஊர்ல எந்தெந்த பழைய இன்ஸ்ட்ருமென்ட்டுலாம் கிடைக்குதோ அதையெல்லாம் வாங்கிட்டு வந்து வாசிச்சிருக்காரு. இந்த மாதிரி படம் வந்தால்தான் பரண்ல கெடக்குற பழைய இன்ஸ்ட்ருமென்ட்க்குலாம் வேலை வருதுன்னு சொல்லி.. அப்படி எல்லாத்தையும் இழுத்து வைச்சு மியூஸிக் போட்டிருக்காரு. அதுலேயும் இந்தப் படத்துல வீட்ல சும்மா படுத்திருந்தவங்களையெல்லாம்.. ஏன் ரோட்ல படுத்திருந்தவங்களையெல்லாம் தூக்கிட்டு வந்து நிக்க வைச்சு ச்சும்மா ஒரூ சீன்ல அப்படியே நில்லுன்னு நி்க்க வைச்சு, குறுக்க நடக்க வைச்சு, ச்சும்மா ஓட வைச்சுல்லாம் படத்தை எடுத்திருக்கோம்… கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்கு அகோரம் ஸார் புண்ணியத்துல.. இந்த மாதிரி படம் எடுத்ததுனாலதான் இத்தனை பேருக்கு வேலை கிடைச்சிருக்கு.. புலவர் புலமைப்பித்தன் ஐயா அபாரமா பாட்டு எழுதியிரு்ககாரு. சகோதரர் விவேகாவும் நாலு பாடல்களை அற்புதமா எழுதிக் கொடுத்திருக்காரு..!

அந்தப் பொண்ணு மீனாட்சி தீட்சித்.. ஹீரோயினை பாருங்க. என் ஜோடி. அந்த பொண்ணு மேடைக்கு வந்ததும், நான் யார் தெரியுதான்னு கேட்டேன், இதாம்மா என் சொந்த உருவம்னு சொன்னேன். மீனாட்சி என் சொந்த உருவத்தை பார்த்ததே கிடையாது. ஷுட்டிங் நேரத்துல காட்டிரக் கூடாது. காட்டிராதீங்கடா.. கெடுத்து உட்டுடுவாங்கன்னு சொல்லிட்டிருந்தேன். முதல்ல அஞ்சாறு ஹீரோயினிய செலக்ட் பண்ணினோம். அவங்களுக்கு மெசேஜா அனுப்புறாங்க. வேண்டாம். வடிவேலு கூட நடிச்ச.. எந்த ஹீரோவும் உன்கூட நடிக்க மாட்டான்னு இவங்களா மெசேஜ் அனுப்பியிருக்காங்க.

டைரக்டர் ஒவ்வொரு பொண்ணா கூட்டிட்டு வருவாரு, அவங்களே டிக்கட் போட்டு அனுப்பி வச்சிருவாங்க. கடைசியில மீனாட்சி தீட்சித் நடிக்க ஒத்துக்கிட்டாங்க. இவங்ககிட்டேயும் சொல்லியிருக்காங்க.. இவங்க அதெல்லாம் வேணாம்.. நான் அவர்கூட நடிப்பேன்னு சொல்லிருச்சு. என்னைய பாருங்க- அவங்கள பாருங்க, தக்காளி பழத்துல தார் ஊத்தின மாதிரி இருக்கு. வந்தவுடனேயே கேட்டேன். நான் யாருன்னு தெரியுதான்னு.. இதுதான் ஒரிஜினல் கெட்டப்புண்ணேன்.. ஷுட்டிங்ல கெட்டப்போடதான் போய் அவங்க முன்னாடி நிக்கிறது. டேய், அந்த புள்ள வந்திருக்கா பாருன்னு கேட்டுட்டு, டக்குன்னு கேரவன் உள்ள போயிட்டு மேக்கப்பை போட்டுட்டு வந்து ஸ்டைலா நிக்கிறது. ஏன்னா கெடுத்து விட்டுருவாங்களே.. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுது… எந்த நேரம்னே தெரியாது. என்ன வேண்ணாலும் நடக்கும்.

ஷுட்டிங் நடந்துக்கிட்டிருக்கும் போதே, கலைஞ்சி போச்சின்னு எழுதறாங்க. செட்டை பிரிச்சால்.. யூனிட்டே பிரிஞ்சி போச்சின்னு எழுதறாங்க. அண்ணே போச்சாம்ணே… எல்லாம் போச்சாம்ணேன்னு சந்தோஷமா சொல்லிட்டு, நிம்மதியா தூங்கலாம்பான்றாங்க.. என்ன செய்யச் சொல்றீங்க.. வாடகை சைக்கிள் எடுத்திட்டுப் போய் போட்டுக் கொடுக்குறாய்ங்க.. ஆனா, புரொடியூசர் அசரலை.. செட்டுக்கே நேர்ல வந்து பார்த்தாரு. யார் யார் மந்திரிங்க.. யார் யார் நடிக்காறாங்கன்னு பார்த்து சந்தோஷப்பட்டாரு..

ஆரூர்தாஸ் ஐயாவை மறந்தி்ட்டேன்.. இதுவேற பஞ்சாயத்தாயிரப் போவுது.. இந்த படத்துல வசனங்களை அள்ளித் தீட்டியிருக்கிறாரு. எல்லாம் அருமையான வசனங்கள்தான்.. இந்த படத்துல அருடைய உழைப்பும் கடுமையான உழைப்பு. ஆக, ஒரு அருமையான படத்துல நடிச்சிருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்து மறுபடியும் நம்ம வண்டிய ஸ்டார்ட் பண்ணி விட்ட தயாரிப்பாளர் அகோரம் அவர்களுக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிச்சிக்கிறேன். இந்த படம் உங்க ஆசீர்வாதத்தால, அன்பால பெரிய வெற்றி பெறணும்னு கேட்டுக்கிறேன்…” என்றார்.

வெள்ளந்தியான வடிவேலுவின் பேச்சில் அவருக்கிருக்கும் சினிமா வெறியும், நடிப்பின் மீதா ஆர்வமும் தெரிந்தது.. இந்த அரசியலை ஓரங்கட்டிவிட்டு அதுபோல் எதுவுமே நடக்காதது போல மீண்டும் வைகைப்புயலாய் அவர் வலம் வர வேண்டும் என்றே திரையுலகமும் எதிர்பார்க்கிறது..!

Our Score