full screen background image

சிவி-2 – சினிமா விமர்சனம்

சிவி-2 – சினிமா விமர்சனம்

கடந்த 2007-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட திகில் திரைப்படமான ‘சிவி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்த ‘சிவி-2’ திரைப்படம்.

முதல் பாகம் தாய்லாந்து மொழியில் வெளியான ஷட்டர்’ என்ற படத்தின் தமிழ் உருவாக்கமாகும். இந்த 2-ம் பாகம் Gonjiam: Haunted Asylum’ என்னும் தென்கொரிய தொலைக்காட்சி தொடரில் இருந்து உருவாகியுள்ளது.

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலிதா கஸ்தூரி கண்ணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேரன் யோகி, மற்றும் நடிகர் சரண் ராஜின் மகனான தேஜா சரண்ராஜ் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்ரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பி.எல்.சஞ்சய், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, இசை – எஃப்.எஸ்.பைசல், பாடல்கள் – அரவிந்த், பாடகி – சின்மயி, நடன இயக்கம் – டயானா, சண்டை பயிற்சி இயக்கம் – பில்லா ஜெகன், கலை இயக்கம் – சூர்யா,  கிராபிக்ஸ் – El Studios, ஒலிப்பதிவு – வி.ஜி.சுகவேந்தன், பத்திரிகை தொடர்பு – எஸ்.குமரேசன்.

முதல் பாகத்தை இயக்கிய கே.ஆர் செந்தில்நாதன்தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார்.

ஆர் மாஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் ஆனந்த் பாபு இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

முதல் பாகத்தில் இதுவரையிலுமான பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக ஒருவரின் கழுத்தின் மேல் பேய் உட்கார்ந்து பழி வாங்குவது போன்று திரைக்கதை அமைத்திருந்தார்கள். ஆனால் இதில்..?

ஒரு கல்லூரியில் சில விஷுவல் கம்யூனிகேசன் படிக்கும் மாணவர்களும், மாணவிகளும்  திடீரென காணாமல் போகிறார்கள். இதனையடுத்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கின்றனர்.

காவல் துறையின் விசாரணையில் காணாமல் போனவர்களின் செல்போன் கடைசியாக செயல்பாட்டில் இருந்த இடத்தில் இருந்து, சில வீடியோ கேமராக்களும், செல்போன்களும் கிடைக்கின்றன.

டிஜிட்டல் பொருட்கள் விஷயத்தில் அண்டர் கவர் ஆப்ரேஷன் செய்து போலீஸுக்கு உதவி செய்து வரும் சாம்ஸிடம், இந்த வீடியோக்களை கொடுத்து “இதில் இருப்பவைகள் என்ன?” என்பதை பார்த்து வைக்கச் சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.

சாம்ஸ் அந்த வீடியோக்களை பார்க்க, பார்க்க.. அதில் பல அதிர்ச்சியான.. மர்மமான கொலைகள் மற்றும் அமானுஷ்ய சக்திகளின் லீலைகள் தெரிகின்றன.

மாணவர்களான யோகியும், தேஜாவும் youtube-ல் பிரபலமாக வேண்டி ஒரு அபார்ட்மெண்ட்டில் பேய் இருப்பதாக அங்கேயிருக்கும் செக்யூரிட்டியிடம் பணம் கொடுத்து பொய் சொல்லச் சொல்லி அந்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது பற்றி அறிந்த சந்தோஷ் இவர்களை மடக்கி வேறொரு திட்டத்தை அவர்கள் முன் வைக்கிறார். “தற்போது பேய் மாளிகை’ என்று பெயர் எடுத்திருக்கும் ஒரு பாழடைந்த ஆஸ்பத்திரிக்குள் போய் வீடியோ எடுத்து அந்தக் கட்டிடத்தில் பேய் இருக்கா.. இல்லையா.. என்பதை நேரடியாக பார்வையாளர்களிடத்தில் கொண்டு போகலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் நமக்குக் கிடைப்பார்கள். இதன் மூலமாக நாம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்…” என்று ஆசை தூபம் போடுகிறார்.

இதில் சிக்கும் யோகியும், தேஜாவும் தங்களின் நண்பர்களையும், நண்பிகளையும் அழைத்துக் கொண்டு அந்த பாழடைந்த மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள். இதை சந்தோஷ் தனது யுடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் சந்தோஷ் செட்டப் செய்ததையும் தாண்டி அங்கே பேய்கள் இருப்பதை உணர்ந்த மாணவர்கள், அந்தப் பேய்களிடமிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அது முடிந்ததா, இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கிருஷ்ணா கேரக்டரில் யோகியும், க்ரிஷ் கேரக்டரில் தேஜ் சரண்ராஜூம் நடித்துள்ளனர். நடிப்புக்கேற்ற ஸ்கோப் இருந்தாலும் கேமிரா கோணங்கள் அதைப் படமாக்கவில்லை என்பதால் நம்மால் இவர்களின் நடிப்பை ரசிக்க முடியவில்லை.

ஒன் வேர்டு ஜோக் என்பதை போல பலரும் ஆளாளுக்கு பேசிக் கொண்டே போகிறார்களே ஒழிய.. யாரும் கஷ்டப்பட்டு நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது.

நடித்திருப்பவர் சாம்ஸ் மட்டும்தான். அவரும் வீடியோ பார்க்கும்போது கையில் மது, சிகரெட்டோடு முதல் பாதியை ஒப்பேற்றிவிட்டு கிளைமாக்ஸில் மட்டுமே பேயிடம் மாட்டுக் கொண்ட அப்பாவியாய் நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் இருட்டிலேயே, மொபைல் போன் வெளிச்சத்திலேயே படமாக்கியிருக்கிறார்கள். இதனாலேயே படம் முழுமையாக உருவாகவில்லை.

மருத்துவமனைக்குள் இருக்கும் பேய்களின் பூர்வாசிரம கதையையாவது சொல்லியிருக்கலாம். அதையும் சொல்லாமல் குறிப்பால் உணர்ந்து கொள்ளுங்கள் என்று அலட்சியமாக ஜம்ப் ஆகியிருக்கிறார் இயக்குநர். அப்புறம் எப்படி கதையுடன் நாம் ஒன்றிணைவது..? பேய்கள் வந்து பயமுறுத்தும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. பின்னணி இசை காதைக் கிழித்ததுதான் மிச்சம்..!

இப்படி பல ‘இல்லை’களை வைத்து நம்மை சோதித்துவிட்டார் இயக்குநர்.

மேற்கொண்டு சொல்வதற்கும் ஒன்றுமில்லை..! ஸாரி இயக்குநரே..!

RATINGS : 2 / 5

Our Score