இப்படத்தை நாயகனான சாம் ஜோன்ஸ் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மாஸ் சினிமாஸ்’ நிறுவனத்தின் முதல் படமாக தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் சாம் ஜோன்ஸ் நாயகனாக நடித்துள்ளார்.
‘கயல்’ ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகை சுரேகா வாணி, முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, A.வெங்கடேஷ், நளினிகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக M.S.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக ‘கனா’ படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர். வசனத்தை லஷ்மி சரவணக்குமார் எழுதியுள்ளார். இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் தாமரைச்செல்வன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை மையமாக்கியும், சில காட்சிகள் தேனி உள்ளிட்ட இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த ‘நதி’ படம் மதுரையை களமாகக் கொண்டு ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தியும் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மதுரை என்றாலே வன்முறை, சாதி, அரசியல் என்ற பார்வைகளே மக்கள் முன் எடுத்து வைக்கப்படுகிறது. இந்தப் படமும் அதையேதான் சொல்கிறது. ஆனால் ரசிக்கும்படி எடுத்திகுக்கிறார்கள்.
மதுரையை ஆட்டிப் படைக்கும் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேல.ராமூர்த்தி. இவருக்கு தற்போது நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட்டும் கொடுத்துள்ளனர்.
இவருடைய தம்பியான ஏ.வெங்கடேஷ், அண்ணன் சொல் தட்டாதவர். இவருடைய மகள்தான் ‘பாரதி’ என்ற ஆனந்தி. இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கிறார். ஆனந்தியின் சொந்தத் தாய் மாமனான கரு.பழனியப்பனும், வேல.ராமமூர்த்தி இருக்கும் அதே கட்சியில் ஒரு பிரமுகராக இருக்கிறார். தனது உறவினர்களான வேல.ராமமூர்த்தியையும், ஏ.வெங்கடேஷையும் கட்சியில் ஓரங்கட்ட துடித்துக் கொண்டிருக்கிறார் கரு.பழனியப்பன்.
ஆனந்தியுடன் அதே வகுப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முனீஸ்காந்தின் மகனான நாயகன் ‘புகழ்’ என்ற சாம் ஜோன்ஸும் சேர்கிறார். பேட்மிண்டன் விளையாட்டு வீரரான சாம் ஜோன்ஸ், இந்தத் திறமையை வைத்தே வெகு சீக்கிரமாக அரசு வேலையில் அமர்ந்து தன் குடும்பத்தைத் தானே தோளில் சுமக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்.
தமிழும், பாரதியும் ஒருவருக்கொருவர் பழகி நட்புடன் இருக்கின்றனர். இவர்களின் பழக்கத்தை ‘காதல்’ என்று நினைத்த வேல.ராமமூர்த்தி அண்ட் கோ ஒரு பொய்யான கொலை வழக்கில் சாம் ஜோன்ஸை சிக்க வைக்கின்றனர். இந்த வழக்கை கரு.பழனியப்பன் நல்லவர் போல நடித்து மேலும் சிக்கலாக்குகிறார்.
இந்தச் சிக்கல் தமிழ், பாரதியை என்னவெல்லாம் செய்கிறது..? இதன் விளைவுகள் என்ன என்பதுதான் இந்த ‘நதி’ படத்தின் திரைக்கதை.
சாம் ஜோன்ஸ் தன்னால் முடிந்த அளவுக்கு, தனக்கு வரும் நடிப்பைக் காண்பித்திருக்கிறார். காதல் போர்ஷன்களில் தடுமாறினாலும் குடும்பப் பாசம், கோபம், வீரம், காதலியை இழந்த துயரம் போன்ற காட்சிகளில் கவனத்தை ஈர்க்கும்வகையில் நடித்திருக்கிறார்.
தனது காதலனைக் காப்பாற்றப் போராடும் ‘பாரதி’ என்ற பாத்திரத்தில் ஆனந்தியை மிகச் சிறப்பாகவே நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இவர் நடித்திருந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்திலும் இதே போன்ற கதாபாத்திரம்தான்.
ஆனாலும் அந்தச் சாயல் இல்லாமல் தனது அப்பா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன், தாய் மாமன் என்று தனக்கு துரோகம் செய்யும் அனைவரையும் எதிர்த்துப் போராடும் ஒரு 19 வயது இளம் பெண் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார் ஆனந்தி.
முதல் சில காட்சிகளில் நாயகனின் அமைதியான குணத்தைக் கிண்டல் செய்துவிட்டு பின்பு மெல்ல, மெல்ல அவன் மீது காதல் கொள்ளும் காட்சிகளில் இயல்பான பாரதியாகத் தெரிகிறார். நீதிமன்ற வளாகத்தில் ஆனந்தி, நாயகனிடம் தன் காதலை சொல்லும் காட்சி ஒரு கவித்துவமானது.
அதிகார வெறியையும், ஆதிக்க வன்மையையும், சாதி வெறியையும் ஒரு சேர வெளிப்படுத்தும் வேல.ராமமூர்த்தியைவிட்டால் இந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு ஆளே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தனது மூர்க்கத்னத்தைக் காட்டியிருக்கிறார் வேல.ராமமூர்த்தி. இவருடைய தம்பியான ஏ.வெங்கடேஷ் தனது அடக்கமான குணத்திற்கேற்ப நடித்திருக்கிறார்.
துரை பாண்டியாக நடித்திருக்கும் கரு.பழனியப்பன்தான் ‘டாக் ஆஃப் தி டவுன்’ என்பதைப் போல இந்தப் படத்தில் பேசப்பட்டிருப்பவர். இன்றைய சம கால அரசியலையும், அரசியல்வியாதிகளின் செயல்பாட்டையும், சாதிப் பித்துப் பிடித்தவர்களின் மன நிலையையும் ஒன்று சேர காண்பித்திருக்கிறார் கரு.பழனியப்பன்.
இதற்கு இவருக்குத் துணையாய் இருந்திருப்பது படத்தின் வசனங்கள்தான். வசனகர்த்தாவான எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் அழுத்தமான வசனங்கள்தான் கரு.பழனியப்பனை கடைசிவரையிலும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தொண்டனாக.. பஞ்ச் வசனம் பேசியே வாழ்க்கையை எளிதாக ஓட்டும் நாயகனின் தந்தையான முனீஸ்காந்த் இடைவேளைக்குப் பின்பு தனது குணச்சித்திர நடிப்பையும் காண்பித்திருக்கிறார். இவருடைய மனைவியான சுரேகா வாணிக்கும் சில காட்சிகளில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் இன்றைய மதுரை மாநகரம் அழகாகத் தெரிகிறது என்றாலும் இன்னும் பல இடங்களை விஸ்தாரமாகக் காட்டியிருக்கலாம். நிபுவின் இசையமைப்பில் பாடல் வரிகள் கேட்கும்விதத்தில் இருப்பதே மகிழ்ச்சிதான். காதல் காட்சிகளில் வரும் மாண்டேஜ் ஷாட்டுகளை அழகாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
சிறைக்குள் நாயகன் போடும் சண்டை காட்சி தத்ரூபம். மிக அழகு. இதேபோல் படத் தொகுப்பாளரையும் இந்தக் காட்சிக்காகவே நாம் பாராட்டலாம்.
மதுரையில் நடக்கும் கதை என்பதால் சாதிப் பிரச்சினை.. உறவுகளுக்குள் மோதல்.. கட்சிக்குள் நடைபெறும் உள்ளடி அரசியல், பண பலம் விளையாடும் அதிகார வர்க்கம் என்று பல விஷயங்களையும் திரைக்கதையில் சரியான விகிதத்தில் கலந்து கட்டி வழங்கியிருக்கிறார் இயக்குநர் தாமரைச்செல்வன்.
19 வயதில் காதல் தேவையா என்ற ஒரு கேள்வியை புறந்தள்ளிவிட்டு அதையும் தாண்டி சாதி வெறி, அரசியல் என்று வேறு கோணத்தில் படத்தைத் திசை திருப்பி ஜெயித்திருக்கிறார் இயக்குநர்.
கதாபாத்திரங்களை அவரவரின் கேரக்டர் ஸ்கெட்சுக்கேற்ப நடிக்க வைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று நான்கிலுமே தனி கவனத்தை ஈர்க்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்..!
படத்தின் துவக்கத்தில் மதுரை மண்ணையும், அம்மண்ணில் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய அடக்குமுறைகள், போராட்டங்களைப் பற்றி சொல்லும் வசனங்கள் மிகச் சிறப்பானவை. கூடவே படம் நெடுகிலும் பல இடங்களில்தான் வசனங்கள்தான் படத்தை நகர்த்தியிருக்கின்றன. வசனகர்த்தா லஷ்மி சரவணக்குமாருக்கு நமது பாராட்டுக்கள்.
படத்தின் இறுதிக் காட்சி சரியா.. தவறா என்ற பட்டிமன்றத்தை நமக்குள் ஏற்படுத்தும் அளவுக்கு அழுத்தமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
ஒரு சாதாரண காதல் கதைக்குள் சாதி, அரசியல், அதிகாரப் போட்டி இதையெல்லாம் வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இந்த ‘நதி’யிலும் நிச்சயமாக நீராடலாம்தான்..!
RATINGS : 3.5 / 5