full screen background image

“கேள்வி கேட்க உனக்கென்னடா யோக்கியதை இருக்கு..?..” – விஷாலை வறுத்தெடுத்த சிம்பு..!

“கேள்வி கேட்க உனக்கென்னடா யோக்கியதை இருக்கு..?..” – விஷாலை வறுத்தெடுத்த சிம்பு..!

நேற்று மாலை தேனாம்பேட்டை ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் நடிகை ராதிகா, சிம்பு, பாக்யராஜ், மோகன்ராம், ஊர்வசி கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் சிம்பு இதுவரையிலும் இல்லாத அளவிற்கு ஆக்ரோஷமாகவும், கோபமாகவும் பேசித் தீர்த்துவிட்டார். நடிகர் விஷாலை ‘அவன்’, ‘இவன்’ , ‘வாடா’, ‘போடா’ என்று ஏக வசனத்தில் திட்டித் தீர்த்தார். இவருடைய பேச்சை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், ‘இவருக்கு ராதாரவியே பரவாயில்லை போலிருக்கே’ என்று வருத்தப்பட்டார்.

நடிகர் சிம்பு பேசியதிலிருந்து சில பகுதிகள் இங்கே :

simbu-team-press-meet-stills-019

“நடிகர் சங்கம் என்பது சுமார் 3500 உறுப்பினர்கள் உள்ள ஒரு அமைப்பு.. இங்க ஏதாவது பிரச்சினைன்னா நமக்குள்ள நாமளே பேசித் தீத்துக்கணும். இப்போ நான் துணைத் தலைவர் பதவிக்கு நிக்குறேன். எனக்கு போட்டியிடணும்னு ஆசையே இல்லை. மத்தவங்க சொன்னதுக்காகத்தான் நிக்குறேன். எனக்கு பதவி ஆசையும் இல்லை. போட்டியே இல்லாமல் இருக்கணும்னுதான் நான் நினைக்கிறேன்.

என் சக நடிகர்களே இப்போது என்னை விரோதியாக பார்க்கிறார்கள். என் குடும்பமே இப்போது பிரிந்துவிட்டது. இந்த நிலைமைக்கு யார் காரணம்..? நடிகர் சங்கத்தை அரசியல் ஆக்கியது யார்.? இதற்கான அவசியம் என்ன..? எங்களுக்கு எந்த அணியும் வேண்டாம். நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. வாபஸ் வாங்கிக்கிறோம். இது பயத்துக்காக இல்லை. சங்கத்துக்கு ஒற்றுமை முக்கியம்.

நாகரீகம் தெரியாத பண்பாடு இல்லாதவர்களிடம் நடிகர் சங்கத்தை கொண்டு போய் கொடுக்கலாமா..? இத்தனை ஆண்டுகள் நடந்த தேர்தலில் இதுபோல நடந்தது உண்டா..? நாளைக்கு படங்களில் நடிக்கும்போது அவர்களுடனேயே நான் நடிக்க வேண்டி வரும். அப்போ எப்படி அவர்களிடம் நான் பேசுவேன்.. பழகுவேன்..? என் குடும்பத்தில் இருந்து என்னை பிரித்துவிட்டனர்.

சரத்குமார் மீது உனக்கு ‘பர்சனலா’ பகை. அதற்காக நடிகர் சங்க ஒற்றுமையை உடைக்க முயற்சிக்கிற.. புதிய கட்டிடம் கட்டுவதற்காக, பழைய கட்டிடத்தை இடிக்கப் போவதா ஆறு மாதமா சொல்லிக் கொண்டிருந்தபோது, நீ எங்க போன..? அன்னைக்கே சங்கத்துக்கு வந்து கேள்வி கேட்டிருக்கலாம்ல..?

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டக்கூடாது என்று பூச்சி முருகன் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கவிடாமல் வைத்திருப்பது யார்..? அந்த வழக்கை வாபஸ் வாங்கியிருந்தால் இந்நேரம் கட்டிடமே கட்டியிருக்கலாமே..?  இன்னிக்கு இவர் சொல்றாரு.. நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தியேட்டர் வரக் கூடாது. பக்கத்தில் பள்ளிக்கூடம் இருக்குன்னு.  அப்போ ‘பார்’ வரணும்னு நினைக்கிறியா..? அப்படியானால் நடிகர் சங்கம் என்ன ‘டாஸ்மாக்’கா?

நான் பிறந்த ஒன்பது மாசத்துல இருந்து சினிமாவுல நடிக்கிறவன்டா. எத்தனையோ வருஷமா நடிகர் சங்கத்துல கமிட்டி மெம்பரா இருக்கேன்.   எத்தனையோ நடிகர் சங்க மீட்டிங்ல கலந்துக்கிட்டு இருக்கேன்டா. நீ அதுக்கெல்லாம் ஒழுங்கா வந்தியா..?

கேள்வி கேட்க உனக்கு என்னடா  யோக்கியதை இருக்கு..? என் குடும்பத்துல ஏண்டா குழப்பம் உருவாக்கப் பாக்குற..? நம்ம குடும்பப் பிரச்னையை நீ ஏன்டா ஏழு கோடி மக்கள்கிட்ட கொண்டு போற..? நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா..?  நீ பண்ணது எல்லாம் போதும். உன் உள்நோக்கம்தான் என்ன..? 

இப்படியெல்லாம் பேச எனக்கே கேவலமாத்தான் இருக்கு. அசிங்கமாத்தான் இருக்கு. என் மூஞ்சில நானே எச்சில் துப்பிக்கிற மாதிரிதான் இருக்கு. அவனோட சூழ்ச்சி வலையில்  நாசர், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், சந்தானம் போன்ற என்னுடைய நல்ல நண்பர்களும், அண்ணன்களும் சிக்கியிருக்காங்க. சந்தானம் எனக்கு போன் பண்ணி ‘இப்படியொரு கூட்டம் நடக்குது. போறேன்’னு சொன்னார். ‘சரி. போயிட்டு வாங்க’ண்ணு சொன்னேன். எனக்குப் போட்டியாளராக இருக்குற தனுஷ்கூட எனக்கு போன் செஞ்சு ‘என்ன இப்படி அசிங்கமா இருக்கு..? சங்கத்துல ஒற்றுமை இல்லையே’ன்னு பீல் செஞ்சாரு.. இப்படி நல்லாயிருந்த எங்க குடும்பத்தையே பிரிச்சுட்டியேடா..?

நடிகர்கள் கிரிக்கெட் போட்டி முதன்முதல்லா துவங்கியபோது அப்பாஸ்தான் கேப்டனா இருந்தார். அப்போ ஏதோ பிரச்சினை பண்ணி அப்பாஸை கேப்டன் பதவில இருந்து தூக்கிட்டு விஷால் கேப்டனா வந்தாரு. அதுக்குப் பின்னாடி நான் அந்த டீம்லயே இல்லை. அந்த கிரவுண்ட் பக்கமே போகலை. கிரிக்கெட் அணியின் கேப்டன்றதால ‘நான்தான் கேப்டன்’,, ‘நான்தான் கேப்டன்’னு சொல்லிக்கிறதா..? ‘கேப்டன்’னு சொல்றதால நீயும் விஜயகாந்தும் ஒண்ணா..? இதைச் சொல்ல உனக்கென்ன தகுதி இருக்கு..?  

நடிகர் ராதாரவி ஒரு மூத்த கலைஞர்.. அவர் எல்லாரையும்தான் திட்டியிருக்காரு. என்னையும்தான் திட்டியிருக்காரு. அதையெல்லாம் ஒரு மூத்த கலைஞர் நம்ம வளர்ச்சிக்காக சொல்றாங்கன்னு எடுத்துக்கணும். ஆனா நீ அவரை ஏதோ ரோட்டுல போற ஆளுன்னு நினைச்சு பேசிட்ட. அதான் பிரச்சினையாயிருச்சு. அவர் ‘நாய்’ன்னு திட்டிட்டாருன்னு சொல்றாங்க. அது தப்புதான். ‘நரி’ன்னுதான் சொல்லியிருக்கணும். நீ நரி. உன்னைப் போய் நாயுன்னு சொல்லிட்டாரு பாரு. அதாச்சும் நன்றியுள்ளது..

உன் சொத்துன்னு சொல்லி அன்னிக்கு ஒரு கூட்டத்தைக் காண்பிச்ச.. இப்போ நான் காண்பிக்கிறேன். 11-ம் தேதி அதே ராகவேந்திரா மண்டபத்துல. அத்தனை கலைஞர்களுக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். நம்ம பிரச்சினையை நாமளே பேசித் தீர்த்துக்கலாம். 11-ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கும் கூட்டத்திற்கு எல்லாரும் வாங்க. அவனை விட்டுட்டு வந்திருங்க. நாமளே உக்காந்து பேசி அமைதியா தீர்த்துக்கலாம். நம்ம குடும்பம் நல்லாயிருக்கணும்னு நினைச்சீங்கன்னா எல்லாரும் அன்னிக்கு மறக்காமல் வந்திருங்க..” என்று சீறி முடித்தார்.

இப்படி எல்லாவற்றையும் பேசிவிட்டு கடைசியில் செம காமெடியாக, ‘நான் ஏதாவது தப்பா பேசியிருந்தால் மன்னிச்சுக்குங்க’ என்றும் சொல்லிவிட்டுத்தான் ஓய்ந்தார்..!

இன்னும் என்னென்ன காமெடியை பார்க்க வேண்டியிருக்கோ தெரியலை..!

Our Score