பட தயாரிப்பில் ஏற்படும் நஷ்டத்தில் பங்கெடுக்காத நடிகர்களைக் கண்டித்து மே-2-ம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மே 2-ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் அது தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
படத் தயாரிப்பில் ஏற்படும் நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ள முன் வராத நடிகர்களைக் கண்டித்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள், படத்தின் லாப நஷ்டங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அல்லது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
ஒரு படம் தோல்வியடையும்போது தயாரிப்பாளர்கள் பெரும் நிதிச் சிக்கலைச் சந்திக்கின்றனர்.
ஆனால் நடிகர்கள் தங்கள் முழுச் சம்பளத்தையும் பெறுவதால், இந்த சுமையைச் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
சமீபத்தில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (SIFPA) கூடி, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் OTT வெளியீட்டு காலக்கெடு போன்ற விவகாரங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கக் கூடாது எனத் தீர்மானித்தனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாகத் தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.









