full screen background image

பத்திரிகையாளர்களை நக்கல் அடித்த நடிகர் சிம்பு..!

பத்திரிகையாளர்களை நக்கல் அடித்த நடிகர் சிம்பு..!

“நடிகர் சங்க தேர்தல் என்பது சங்கங்களின் விதிப்படி நடக்கும் ஒரு வழக்கமான நடைமுறைதான். நாங்கள் ஒரு அணியாகப் போட்டியிடுவது ஜனநாயக முறைப்படி நடக்கும் வாடிக்கையான நிகழ்வுதான்..”  என்று நாசர் தலைமையிலான அணி திட்டவட்டமாக அறிவித்துவிட்டு வாக்கு வேட்டைக்காக பேருந்தில் பயணப்பட்டுவிட்டது.

இந்த நேரத்தில் நேற்று மாலை ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்த்து ராதிகா அணி. இதில் ராதிகா, சிம்பு, ஊர்வசி, மோகன்ராம், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் அடங்கிய அணி.

simbu-team-press-meet-stills-007

அது பத்திரிகையாளர் சந்திப்பாக இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டது. பொதுவாக பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் பத்திரிகையாளர்களும், படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் இங்கே சிம்புவின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டமே உள்ளே நுழைந்திருந்தது. வாசலை அடைத்துக் கொண்டு நின்றார்கள். அவர்களை முதலிலேயே வெளியேறச் சொல்லி பி.ஆர்.ஓ.க்கள் முயற்சித்தும் அவர்கள் வெளியேற மறுத்து உள்ளேயே அமர்ந்தும்விட்டார்கள். இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில பத்திரிகையாளர்களுக்கு அமர்வதற்கு இருக்கைகூட கிடைக்கவில்லை.

சிம்புவின் ரசிகர்கள் அரங்கத்தில் இருப்பது மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் பேசிய சில பேச்சுக்களுக்கு வந்திருந்த ரசிகர்கள்தான் கை தட்டினார்கள். இதுவே எதிரணியினருக்கு இந்த டீம் எதையோ உணர்த்துவதை போலத்தான் தோன்றியது.

இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் சிம்பு தான் டி.ராஜேந்தரின் வாரிசு என்பதை நூறு சதவிகிதம் நிரூபித்துவிட்டார். அப்பாவை போலவே ஆவேசமாகப் பேசினார். பல விஷயங்களை குழப்பமாகவே பேசினார். முன்னுக்குப் பின் முரணாகவும் பேசினார்.

ஆரம்பத்தில் நிதானமாக பேசியவர் பின்பு போகப் போக தரம் தாழ்ந்து எதிரணியினரை ‘அவன்’, ‘இவன்’ என்றெல்லாம் ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தார். நடிகர் விஷாலை வார்த்தாகளைல் வறுத்தெடுத்தார். “நடிகர் சங்கத்தைப் பத்தி உனக்கென்னடா தெரியும்..? நீதான் என் குடும்பத்தைப் பிரிக்கப் பார்க்குற..? ஒண்ணுமே தெரியாதவன் பின்னாடி போகாதீங்க.. கிரிக்கெட் டீம்ல கேப்டன்னா நீயும் விஜயகாந்தும் ஒண்ணாடா..?  நீ பண்ணினது எல்லாம் போதும்டா.. இதைப் பத்தி பேச உனக்கென்ன தகுதியிருக்கு..?” என்றெல்லாம் ‘நீ’, ‘வா’, ‘போ’, ‘போடா’, ‘வாடா’ என்றெல்லாம் சரளமாக அள்ளிவிட்டார்.

simbu-team-press-meet-stills-019

இப்படியெல்லாம் பேசிவிட்டு கடைசியாக “சங்கம் ஒற்றுமையா இருக்கணும். என் குடும்பம் பிரியக் கூடாது. இதுதான் என்னோட ஆசை. யாரும் எந்த  அணியிலேயும் இருக்க வேண்டாம். எல்லாரும் ஒண்ணா இருக்கலாம். அவனை நம்பி யாரும் போகாதீங்க. வாங்க உக்காந்து பேசி நம்ம பிரச்சினையை நாமளே தீர்த்துக்கலாம்..” என்று விஷாலை ஓரங்கட்டிய நிலையிலேயே பேசி முடித்தார்.

இதையடுத்து அவரிடத்தில் பத்திரிகையாளர் தேனி கண்ணன் ஒரு கேள்வியை கேட்டார். “சமரசமா போலாம்னு கூப்புடுறீங்க.. ஆனா உங்களோட பேச்சு சமரசம் பேசுற மாதிரியே இல்லையே..?” என்றார். இதைக் கேட்டவுடன் நக்கலாக சிரித்த சிம்பு, “சூப்பர்.. சூப்பர்.. சூப்பரான கேள்விண்ணே.. நல்லா கேக்குறீங்கண்ணே..” என்றார். உடனேயே அரங்கத்தில் சூழ்ந்திருந்த அவரது ரசிகர்கள் கை தட்டி பத்திரிகையாளர்களை கேலி செய்தனர்.

உடனேயே பல பத்திரிகையாளர்கள் எழுந்து நின்று சிம்பவுடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர். “மொதல்ல உங்க ரசிகர்களை வெளில போகச் சொல்லுங்க..” என்றனர் பத்திரிகையாளர்கள். ஆனால் சிம்புவோ, “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க..” என்றார். பத்திரிகையாளர்கள் திரும்பத் திரும்ப ரசிகர்களை வெளியேறச் சொல்லும்படி கோபமாகக் கேட்க, அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், அதைப் பற்றி கண்டு கொள்ளாமலேயே அந்தக் கேள்விக்கு பதிலளிக்க முற்பட்டார் சிம்பு.

simbu-team-press-meet-stills-006

பத்திரிகையாளர்களும் விடாமல் அவரை எதிர்த்துக் குரல் எழுப்ப, நடுவில் மைக்கை வாங்கிய ராதிகா, “இப்ப என்ன அவங்க கை தட்டுனது தப்பு. அவ்ளோதான..?” என்று அலட்சியமாகக் கேட்டவர், சட்டென ரசிகர்கள் பக்கம் திரும்பி “யாரும் கை தட்டாதீங்கப்பா…” என்றார். மேலும் அவரே தொடர்ந்து, “நாங்க யாரும் அவங்களை வரச் சொல்லலை. கூட்டிட்டு வரலை. அவங்களாத்தான் வந்திருக்காங்க.  இது பொது இடம்.. யார் வேண்ணாலும் வரலாம். அதை யாரும் கேட்க முடியாதே..” என்றார்.

இதற்கு மேலும் கேள்விகள் வந்தால் பிரச்சினையாகிவிடும் என்பதை உணர்ந்து உடனேயே பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்..!

யார் வேண்டுமானாலும் வரலாமென்றால் இந்த நிகழ்ச்சிக்கு எதுக்கு மேடம், ‘பத்திரிகையாளர் சந்திப்பு’ன்னு பேரு..?  ரசிகர்களை மட்டும் அழைத்து கூ்டடத்தை நடத்தியிருக்கலாமே..? எதுக்கு பத்திரிகையாளர்களை கூப்பிடணும்..?

எல்லாம் தப்புத் தப்பாவே நடக்குது..!

Our Score