full screen background image

“விஷால்-சரத்குமார் மோதலுக்குக் காரணம் என்ன..?” – நடிகை ராதிகா சொன்ன புதிய தகவல்..!

“விஷால்-சரத்குமார் மோதலுக்குக் காரணம் என்ன..?” – நடிகை ராதிகா சொன்ன புதிய தகவல்..!

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ராதிகா பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“நான் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நடிகர் சங்கப் பிரச்சினையில் நான் அதிகம் தலையிட்டது கிடையாது. இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை இதுவரையில் என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை. இப்போ எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. நான் ஒரு நடிகை என்று சொல்வதற்கே அசிங்கமாகவும் இருக்கு. இதுல ஏன் இவ்வளவு பிரச்சினைன்னு எனக்கு புரியலை.

முதல்ல இந்தப் பிரச்சினை எங்கேயிருந்தது ஆரம்பிச்சதுன்னு உங்களுக்கு சொல்லிடறேன். இதுவரைக்கும் எந்த மேடையிலேயும் இதை நான் சொன்னதில்லை.

நடிகர்கள் எல்லாம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் போட்டிகள் ஆரம்பமாச்சு. இது பின்னாடி CCL-ஆ மாறுச்சு. இதை நடிகர் சங்கம் இதை முன்னின்று பிஸினஸா நடத்த முடியாது என்பதால் என்னுடைய ராடன் மீடியா கம்பெனி அதை ஒருங்கிணைத்து நடத்தியது. அப்போது ஆரம்பித்ததுதான் இந்தப் பிரச்சினை.

துபாயில் கிரிக்கெட் விளையாட போயிருந்தபோது ஒரு நாள் சரத்குமாரிடம் தவறாக நடந்து கொண்டார் விஷால். நான் அப்போ விஷாலிடம் ‘இதெல்லாம் தப்புப்பா. இப்படியெல்லாம் பண்ணக் கூடாது’ என்றேன். அப்போது அதை கேட்டுகொள்ளும் நிலைமையில் விஷால் இல்லை. அன்றிலிருந்து விஷாலுக்கு சரத்குமார் மீது காழ்ப்புணர்ச்சி ஆரம்பமானது.

மறுநாள் சரத்குமாரிடம் ‘உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு இனிமேல் நீங்களும் வராதீர்கள்’ என்று கூறிவிட்டேன். அன்று முதல் இன்றுவரை சரத்குமார் அதில் பங்கேற்பதில்லை. ஆனால் அதை நடத்தும் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டர் என்ற முறையில் நான் மட்டும் சில நாட்கள் மைதானத்தில் தலையைக் காட்டினேன்.

அப்போதுதான் பூச்சி முருகன் கோர்ட்டில் வழக்கு போட்டு இந்தப் பிரச்சினையை ஆரம்பித்துவைத்திருந்தார். இதனால் இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்திருந்தது. வெளில எல்லாரும் கேள்வி கேட்டுக்கிட்டிருந்தாங்க. அந்த நேரத்தில் திடீரென்று எங்களுக்கு எதிராக யாரோ கையெழுத்து இயக்கம் நடத்துவதாக கேள்விப்பட்டேன். இது பற்றி கார்த்தி, நாசரிடம் பேசினேன். யாருமே சரியாக பதில் சொல்லவில்லை.

அப்போ துபாயில் ஒரு கலை நிகழ்ச்சியில் நான் கமலை சந்தித்தபோது இது பற்றி பேசினேன். பட்டும் படாமலும் பேசினார். ‘அது என்னன்னே எனக்குத் தெரியாது.. அவங்க உங்ககிட்ட ஏதோ பேசணும்னு நினைக்குறாங்க’ என்று மட்டும் சொன்னார். ஆனால் அந்த கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்து போட்டது கமல்ஹாசன்தான்.

இதன் பின்புதான் பிரச்சினை பெரிதானது. இப்போது எல்லாருமே வெட்கப்படுற அளவுக்கு பிரச்சினை பெரிசாயிருக்கு.

இன்றைக்கு என் குடும்பத்தை தாக்குகிறார்கள். என் மகள், மகனை தவறாக பேசுகிறார்கள். ‘ஏதோ பிகர் பேசுது’ன்னு என்னை கிண்டலா பேசுறாங்க. எனக்கு வேதனையாக இருக்கு. இப்படியெல்லாம் என்னைப் பேச நான் என்ன கவர்ச்சி நடிகையா..?

பாரதிராஜாகூட சமரசத்திற்கு முயன்றார். சிவக்குமாரிடம் பேசினார். முடியலை.  சில நாட்களுக்கு முன்பு விஷாலிடம் அரை மணி நேரம் பேசினேன். “உங்களுக்கு என்னப்பா வேண்டும்..?” என்று கேட்டேன். அப்போது அவரால் சரியா பதில் சொல்லக்கூட முடியலை. சிவக்குமார் அண்ணனுக்கும் இந்தப் பிரச்சினை பத்தி ஒண்ணுமே தெரியலை.

ஒரு நாள் அவர் வீட்டுக்கு நான் நேராவே போயிட்டேன். 40 நிமிஷம் அவர்கூட உக்காந்து பேசினேன். எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி.. ‘இது, இதெல்லாம் இப்படியிருக்கு. இப்படி செஞ்சா சரியாயிரும்’ என்று படித்துப் படித்துச் சொன்னேன். ‘எல்லாம் சரிம்மா.. பையன் ஏதோ ஆசைப்படுறான்’னு சொல்லி அவரும் சமாளிக்கிறாரு.

இப்போது கடைசியாக கமல் சாரிடமும் பேசினேன். அப்போது, ‘எனக்கும் விஷால் மேல பெரிய நம்பிக்கையில்லை..’ என்றார். ‘நீங்க நாசர்கிட்ட பேசுங்க. நான் சரத்தை கூட்டிட்டு வர்றேன். சமாதானம் பேசுவோம்’ என்றேன். ‘அந்த அசிங்கத்துக்குள் நான் வர விரும்பவில்லை’ என்றார் கமல். இதுதான் அவர் சொன்ன வார்த்தை. நடிகர் சங்க விவகாரமென்ன அசிங்கமா..?

என்னுடைய கணவர் சரத்குமார் கமலை குற்றம் சாட்டி பேசியுள்ளதாக சொன்னார்கள். அவர் எல்லா விஷயத்துக்கும் போய் நிற்பார். அவர் அப்படி போகும் சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. ‘உத்தமவில்லன்’, ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட படங்களின் பிரச்சினையின் போது சரத்குமார் போய் நின்றார்.

கமல் சாரிடம் ‘நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்று நான் கேட்கவில்லை. நீங்கள் ஒரு பெரிய நடிகர் என்று நாங்கள் உங்களை எல்லா இடங்களிலும் கெளவரப்படுத்துகிறோம் இல்லையா..? கமல் சார், ரஜினி சார் ஆகியோரிடம் ஒன்றை மட்டுமே கேட்கிறோம். இங்கே ஒரு பெரிய சண்டை நடக்கிறது, அதற்கு ஏன் நீங்கள் இருவரும் வர மாட்டேன் என்கிறீர்கள். அதுதான் எனக்கும் சரத்துக்கும் வருத்தம்.

விஷால் ரெட்டி தனது சுயநலத்திற்காக எல்லாரையும் தூண்டி விடுகிறார். ஏழைகளுக்காக நான் உதவப் போகிறேன் என்கிறார். இது மாதிரி நிறைய பார்த்துட்டேன் நான். நடிகர் சங்க கட்டிடத்தை நான் நடிச்சு அதுல வர்ற வருமானத்துல கட்டுவேன்னு சொல்றார் விஷால் ரெட்டி.

இது ரொம்ப காமெடியா இருக்கு.. இது பத்தி விஷாலிடமே நேரடியா கேட்டேன். ‘தம்பி… நீங்க இன்னும் ரஜினி, கமல், அஜித், விஜய் இடத்துக்கு வரவில்லை. உங்களது முந்தைய படமே தமிழ்நாட்டில் 5 கோடி மட்டுமே வசூல் செய்தது. உங்கள் படத்துக்கு 30 கோடி வசூல் வரும் என்று தயவு செய்து எங்கேயும் சொல்லாதீங்க. எல்லாரும் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்’ என்றேன். அவரால் பதில் பேச முடியவில்லை.

அதேபோல் கார்த்தியிடம், ‘நீங்க இப்போதுதான் மார்க்கெட்டை சரி செய்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்க எப்படி உங்க படத்துல இருந்து வர்ற வருமானத்துல நடிகர் சங்கத்துக்கு உதவி செய்வீர்கள்..?’ என்று கேட்டேன். இதெல்லாம் யாரை ஏமாற்றும் வேலை என்று தெரியவில்லை.

அன்னிக்கு நடந்த கூட்டத்துல சங்கத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தரை மேடையேத்தி.. அதுவும் ஒரு குற்றச் செயலுக்காக ஜெயிலுக்கு போய்விட்டு வந்தவரை பேச வைத்து அவர் மூலமாக எங்களை அவமானப்படுத்தியிருக்காங்க. எனக்கு ரொம்ப வேதனையாயிருக்கு.

இந்தத் தேர்தலில் சரத்குமாரும், ராதாரவியும் நிற்கவே விரும்பலை. வேற வழியில்லாமல் எல்லாருமா சேர்ந்து நிக்க வைச்சுட்டாங்க. ‘வெளில ரொம்ப சில்லியா பேசுறாங்க. அதனால நான் பேச விரும்பலை’ன்னு சொல்றார் சரத்குமார். அவரைப் பற்றி தவறாக பேசி வந்தார்கள். ரொம்பவும் பொறுக்க முடியாமல் 10 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு போட்ட பிறகு, அவரை விட்டுட்டு இப்போ மத்தவங்களை திட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

எனக்கு என்ன தோணுதுன்னா.. விஷால், கார்த்தி இவங்க ரெண்டு பேர் பின்னாடி இருந்தும் யாரோ சிலர் தூண்டி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முதலில் தெளிவாக சொல்லுங்கள். கட்டிடம் வேண்டுமா.. வாங்க. உக்காந்து பேசுவோம்.. ஒற்றுமையாக செயல்படுவோம். நாமளே கட்டி முடிப்போம்… இந்த பிரிவினை வேண்டாம். நாளைக்கு நாசர், கார்த்தி, விஷாலை நான் பார்க்க மாட்டேனா? கார்த்தியை அவர் வீட்ல பார்த்தேன். என்னைப் பார்த்தவுடனேயே அந்தப் பக்கமா ஓடுறார். இன்னும் எவ்வளவு நாளைக்கு தம்பி ஓடுவ..?

அவர் அமெரிக்கா போய் எம்.பி.ஏ. படிச்சிட்டு வந்தவரு. அவரு கேக்குறாரு.. அந்த இடத்துல 300 அடிகூட எங்களுக்கு இல்லைன்னு.. எவ்வளவு பெரிய பொய்.. அதுல 9 ஆயிரம் சதுர அடில்ல தியேட்டர் வரப் போகுது. கார் பார்க்கிங்கும் வரப் போகுது. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டுல்ல பேசணும்.

சிவக்குமார் அண்ணன் இப்போ கேட்குறார் ‘பில்டிங் எங்க’ன்னு..? நீங்க இதே தி.நகர்லதான குடியிருந்தீங்க..? துபாய்ல இல்லியே..? முறைப்படி நோட்டீஸ் கொடுத்திட்டுத்தான பில்டிங்கை இடிச்சோம். அப்போ கேக்காமல் இப்போ வந்து கேக்குறீங்க..?

விஷால் ரெட்டி காமெடியாவே பேசுறார். எம்.ஜி.ஆர். கட்டிய கட்டிடம் எங்கன்னு கேக்குறார். மொதல்ல வரலாறு தெரிஞ்சுக்கிட்டுல்ல பேசணும். அதை எம்.ஜி.ஆர். கட்டலை தம்பி.. சிவாஜிதான் கட்டினார். இதுவே அவருக்குத் தெரியலை.

பக்கத்து மாநிலத்துல இருக்கிற நடிகர்களெல்லாம் நம்மள பார்த்து சிரிக்கிறாங்க. கேக்குறதுக்கே வெட்கமா இருக்கு. வெற்றி, தோல்வியெல்லாம் அடுத்த பிரச்சினை. ஆனால் இந்தத் தேர்தலின் மூலமாக நடிகர் நடிகையரின் நட்பை உடைச்சுட்டாங்க.

இதுல ஒரேயொரு நல்ல விஷயம், இந்த மோதலை நிறுத்த வேண்டும் என்று திரைத்துறை கூட்டாக சொல்லியிருக்கிறது. நாம் அனைவருமே நண்பர்கள். நானும் ஒரு நாடக நடிகருக்குப் பிறந்தவள்தான். நாடக நடிகர்களை வேறுபட்டு பார்க்கக் கூடாது. இன்று தமிழ் சினிமா குடும்பத்தில் நடக்கும் சண்டைக்கு நீங்கள்தான் காரணம். இதுதான் உங்களுடைய நோக்கமா..? வேண்டாம். இத்தோட விட்ருங்க. தயவு செய்து அது பற்றி சிந்தித்து, எங்களுடன் வந்து கலந்து பேசுங்கள். அமைதியான முறையில் நம் பிரச்சினைகளை நாமளே பேசித் தீர்த்துக் கொள்வோம்…” என்றார்.

இதை சென்ற ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் பேசியிருந்தால்கூட இந்தப் பிரச்சினை சுமூகமாக தீர்ந்திருக்க வாய்ப்புண்டு..!

இப்போ கடைசி நேரத்தில் சமாதானத்திற்கு கை நீட்டினால் எப்படிங்கோ மேடம்..?

Our Score