கேள்விப்பட்டவுடனேயே மனசு ‘சதக்’ என்றானது. ‘கோக்கு மாக்கு’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சீரியஸும், காமெடியும் இணைவதுதான்.
‘அடுத்து என்னுடைய இயக்கத்தில் நடிக்கப் போவது உங்களது சந்தானம்’ என்று செல்வராகவனும், ‘நான் அடுத்து நடிக்கப் போவது இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில்’ என்று சந்தானமும் மாறி, மாறி டிவீட் செய்தபோது நமக்கும் இதுதான் தோன்றியது.
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் உருப்படியான கதையாக இருந்தால் தேறும்.. என்று பேச்சுக்கள் எழுந்திருக்கும் நிலையில் அவர்கள் தரப்பில் சொல்லப்படுவது என்ன..?
சந்தானம் நகைச்சுவை மட்டுமின்றி ஒரு வளர்ந்து வரும் வெற்றி கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான படங்கள் வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்று வகுவது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்று சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பயணத்தை மேற்கொண்டுவரும் சந்தானம், தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் கை கோர்த்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது.
ஒருபுறம் இப்போதைய நகைச்சுவை நடிப்புத் திலகமாக சந்தானம், மறுபுறம் தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளியாக கருதப்படும் இயக்குநர் செல்வராகவன். இப்படி ஒரு அற்புதமான கூட்டணியில் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்த ஆரம்பித்துவிட்டது.
“பொதுவாகவே செல்வராகவன், சீரியஸான மனிதர்தான். அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாகத்தான் இருக்கும்’ போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவனிடமும் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும்…” என்கிறார் நடிகர் சந்தானம்.
தமிழ் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளை பெற்ற செல்வராகவனின் ‘யாரடி நீ மோஹினி’ திரைப்படம், ஒரு சிறந்த காமெடி – எமோஷன் களஞ்சியமாகவே இன்றளவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஆடவரி மாட்டலாகு அர்த்தாளே வேருளே’ திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும் சந்தானம் – செல்வராகவன் கூட்டணியானது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









