நடிகர் ராஜ்கிரண் யாரிடம் பேசினாலும் பாசமாகவும், அன்பாகவும்தான் பேசுவார்.. அவருடைய இயல்பே அதுதான். இத்தனையாண்டுகள் நடித்திருந்தாலும், அவரது நடிப்பு நேரில் தெரியவே தெரியாது.. கையில் வைத்திருக்கும் சிகரெட் பாக்கெட்டைகூட கேமிராவுக்கு மறைக்கத் தெரியாதவர்.. எதையும் வெளிப்படையாகப் பேசுவார்.. ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் பார்த்த அந்த அப்பா கேரக்டர், நிசமான ராஜ்கிரண்தான் என்று சொல்வார்கள் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள்..
‘சிவப்பு’ படத்தில் முக்கியமான ‘கோனார்’ என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் ராஜ்கிரண். இப்படத்தி்ல் அவருடன் நடித்த அனைவருமே ராஜ்கிரணை ‘அப்பா, அப்பா’ என்று உருகித் தள்ளிவிட்டார்கள் பிரஸ் மீட்டில்..
இயக்குநர் சத்யசிவா பேசும்போது, “ராஜ்கிரண் ஸார் எனக்கு அப்பா மாதிரி.. ஷூட்டிங்கில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் யூனிட்டை பத்திரமாக பார்த்துக் கொண்டார்” என்றார்.. பாடல்களை எழுதிய கபிலன் வைரமுத்து, “சத்யம் தியேட்டரில் குடும்பத்தோடு ‘தவமாய் தவமிருந்து’ படத்தைப் பார்த்தபோது கவிப்பேரரசு வைரமுத்து அழுது கொண்டேயிருந்தாராம்.. ராஜ்கிரணின் நடிப்புதான் அவரை அப்படி அழ வைத்தது…” என்றார்.. “அந்த அப்பா கேரக்டரை இப்பவும் மறக்க முடியல ஸார்..” என்றார் கபிலன்.. படத்தின் நாயகி ரூபா மஞ்சரியோ.. “ராஜ்கிரண் ஸார் எனக்கு நெசமாவே அப்பா மாதிரிதான்.. ரொம்ப அன்பா, பாசமா இப்படியொரு அப்பாவை நான் பார்த்ததே இல்லை.. என்னை நல்லா பார்த்துக்கிட்டாரு..” என்றார்..
இத்தனையையும் ஒரு அப்பாவைப் போலவே நெகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் ராஜ்கிரண்..!