‘மின்னல்’ படத்தை பத்திரிகையாளர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது..!
பொதுவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹீரோயின்கள் பேசுவது முக்காலே மூணு வீச செகண்ட்டுகளாகத்தான் இருக்கும். தமிழ் தெரிந்தால் அரைவீசம் அதிகமாகும். தெரியாவிட்டால் 60 செகண்ட்டுகளுக்குள் திரும்பவும் சீட்டுக்கு ஓடிவிடுவார்கள். ஆனால் இந்தப் படத்தின் ஹீரோயின் அங்கனா, மைக்கில் ஆரம்பித்த வேகத்தை கடைசிவரையிலும் நிறுத்தவில்லை. பேச்சு போதும் என்று பேப்பர் எழுதிக் கொடுத்து.. அருகில் போய் சொல்லி.. தோளைத் தொட்டுத் திருப்பி.. ம்ஹூம்.. எதுக்கும் மசியவில்லை ஹீரோயின்.. கடைசியில் வலுக்கட்டாயமாக மைக்கை கையால் மூடி “போதும்மா” என்று பி.ஆர்.ஓ. கெஞ்சிய பின்பும் கையை விலக்கிவிட்டு இன்னும் கொஞ்சம் கத்திவிட்டுத்தான் சீட்டுக்கு போய் அமர்ந்தார். இத்தனைக்கும் அம்மணி அன்றைக்கு பேசியது ஆங்கிலத்தில்தான்.. அதுக்கே இப்படி..?
இப்போது வேறொரு விஷயத்திலும் ‘மின்னல்’ திரைப்படம் முன்னிலைக்கு வந்திருக்கிறது. இதில் ஹீரோவாக நடித்த ஆதவன், படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சிராஜ் மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறாராம்.
தனது புகாரில், “மின்னல்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தனர். கதாநாயகன் வேடம் ஏற்று நடிப்பதற்கு நான் பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியிட பணமில்லை என்று இயக்குனர் சொன்னதால் மேலும் 70 லட்சம் ரூபாய் பைனான்ஸ் மூலமாக கடன் வாங்கியும், கூடுதலாக 10 லட்சம் ரூபாயும் கொடுத்தேன். ஆனால் இப்போது படம் முடிந்து வெளியிட தயார் நிலையில் இருந்தும் படத்தை வெளியிடாமல் இயக்குநர் இழுத்தடிக்கிறார். படத் தயாரிப்புக்கும், படத்தில் நடிப்பதற்கும் வாங்கிய பணத்தை மோசடி செய்துவிட்டனர். இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து படத்தை வெளியிட உதவி செய்ய வேண்டுகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவா படத்துல நடிக்கிற ஹீரோவுக்கு தயாரிப்பாளர்தான் பணம் கொடுப்பாங்க. ஆனா இதுல உல்டாவா இருக்கு..! சமீப காலமாகத்தான் இது போன்ற போக்கு சினிமாவி்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. நமக்கு யாருமே நடிக்க சான்ஸ் தரலையா..? நாமளே சான்ஸை உருவாக்கிக்குவோம். நம்ம பணத்தை முதலீடா போட்டு நாமளே நடிப்போம் என்று சொல்லி ஒரு சிலர் களமிறங்குகிறார்கள். வேறு சிலரோ இந்தப் படத்தின் ஹீரோவை போல ஒரு தயாரிப்பாளரிடம் தன்னை அறிமுகப்படுத்துமாறு சொல்லி பணத்தைக் கொடுப்பார். அத்தயாரிப்பாளர் ஹீரோயின், இயக்குநர் மற்றும் நடிப்பவர்களிடத்திலெல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு கூடுதலாக அவரும் கொஞ்சம் பணத்தைப் போட்டு படத்தை முடித்துக் கொடுப்பார்..
படம் ஓடினால்.. நடித்தவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கிடைத்தால் அவர்களுக்கு சந்தோஷம். இல்லாவிடில் தலைவிதியே என்று சொல்லி ஊர் திரும்பிவிடலாம். தயாரிப்பாளருக்கு இந்தப் படத்தின் முழு உரிமையும் கிடைப்பதால் ஏதாவது ஒரு வகையில் பணம் பார்த்துக் கொள்ளலாம். இப்படித்தான் லோ பட்ஜெட் படங்களில் 50 சதவிகிதப் படங்கள் தயாராகி வருகின்றன.. அதற்கு இந்த ‘மின்னலு’ம் ஒரு சாட்சி.
இந்தப் படத்தில் 6 பேக்கையெல்லாம் தாண்டி 8 பேக் வைத்தெல்லாம் நடித்திருக்கிறார் ஹீரோ ஆதவன்.. எப்படியும் படம் ரிலீஸானால்தான் தனக்கு வாழ்க்கை என்பதால் சென்ற வருட செப்டம்பர் மாதம் நடந்த இசை வெளியீட்டு விழாவில் அடுத்த மாதம் படம் ரிலீஸாகிவிடும் என்று உறுதியாகச் சொல்லியிருந்தார். ஏன் ரிலீஸாகிவில்லை என்று தெரியவில்லை. இப்போது காரணம் புரிகிறது..! தன்னுடைய சொந்தப் பணமான 90 லட்சம் ரூபாய் செலவில் இவர் ஹீரோவாகியிருக்கிறார் என்பதை நினைத்தால் கொஞ்சம் கோபமும் வருகிறது..!
தயாரிப்பாளரும், இயக்குநருமான சிராஜும் லேசுப்பட்டவரில்லை. சினிமாவுக்குள்ளேயே 30 வருட அனுபவம் உள்ளவர். கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர்.. ‘என்னைப் பெத்த ராசா’, ‘சுயம்வரம்’ போன்ற படங்களை இயக்கியவர்தான். இப்போது இவரைத்தான் குற்றம் சாட்டியிருக்கிறார் ஹீரோ ஆதவன்.. இவரது பதில் இன்னமும் வெளிவரவில்லை.. வந்தால் பிரசுரிப்போம்..!
கலைத்துறையில் உள்ள இயக்குநர்கள் தங்களது பணியைவிட்டுவிட்டு, வியாபாரியாக மாறினால் இப்படித்தான் அவமானப்பட வேண்டி வரும். .!