என்னதான் சட்டத்திடங்கள் போட்டு.. ஊருக்கு ஊர் பறக்கும்படை அமைத்தாலும் இந்தத் திருட்டு டிவிடி பிரச்சினை ஓயவில்லை.. திரைத்துறையில் ஆள், ஆளுக்கு நீதான் காரணம்.. நீதான் காரணம்… என்று ஒருவர் மாற்றியொருவர் குற்றம் சாட்டிக் கொண்டேயிருக்கும் ‘கேப்’பில் நல்லாவே கல்லா கட்டுகிறது திருட்டு டிவிடி பிஸினஸ்..
சமீபத்தில் வெளிவந்த ‘நினைவில் நின்றவள்’ படத்தின் திருட்டு டிவிடிகளும் வெளிவந்துவிட்டனவாம். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அப்படத்தின் ஹீரோ அஸ்வின் சேகரின் அப்பாவான நடிகர் எஸ்.வி.சேகர், இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார்…
இப்படத்தின் டிவிடி உரிமையை யாருக்கும் கொடுத்திருக்காத நிலையில். இன்னமும் தமிழகத்தில் பல பகுதிகளில் படம் திரையிடப்படாத சூழல் இருக்கும்போது, இப்படி திருட்டுத்தனமாக டிவிடியை வெளியிடுவது படத்தின் வசூலை பாதிக்கும்.. தயாரிப்பாளர்களை நஷ்டமடைய வைக்கும் என்கிறார்..
30 ரூபாய் விலையுள்ள அந்தத் திருட்டு டிவிகளை தனக்கு அனுப்பி வைத்தால் தான் 100 ரூபாய் பரிசாகத் தருவதாகத் தெரிவித்துள்ளார்.. இதற்காக தனது வீட்டு முகவரியைக்கூட கொடுத்துள்ளார்.
எஸ்.வி.சேகர்
29, 5-வது டிரஸ்ட் கிராஸ் தெரு,
மந்தைவெளிப்பாக்கம்,
சென்னை-600028.
போன் : 98410 23545
தியேட்டர் கட்டண உயர்வு, பொதுமக்களுக்கு இருக்கும் சொந்தப் பிரச்சினைகள் ஆயிரம்.. போக்குவரத்துச் செலவுகள்.. நேரமின்மை.. இது போன்ற பல பிரச்சினைகள் இதில் அடங்கியிருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட சொத்து, இங்கே பகிரங்கப்படுத்தப்படுவதுதான் மிக முக்கிய பிரச்சினை. படத்தின் உரிமையாளரின் அனுமதியில்லாமல் டிவிடிகளை தயாரித்து வெளியிடுவது சட்டப்படி மட்டுமல்ல.. தார்மீக ரீதியாகவும் குற்றமாகும்.. இதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளல் வேண்டு்ம். திருட்டு டிவிடியில் தன் படத்தை பார்க்க வேண்டாம் என்று திரையுலகத்தினரே சொன்ன பின்பு.. அப்படித்தான் வெளியிடுவோம் என்று சொல்வதெல்லாம் மக்களுக்கும், திரைத்துறையினருக்கும் நடுவில் இருக்கும் திருட்டு வியாபாரிகள் செய்யும் கொடுஞ்செயல்..
இந்த ‘நினைவில் நின்றவள்’ படத்தின் தியேட்டர் பிரதிதான் இப்போது டிவிடியாக மாறியிருக்கிறது என்று சொல்லும்போது தியேட்டர்காரர்களின் ஒத்துழைப்பில்லாமல் இது எப்படி படமாக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. ஆக.. இங்கே குற்றவாளிகளாக திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது கொடுமை..!
இந்தப் படம் இன்னமும் மதுரையில்கூட ரிலீஸாகவில்லை என்கிறார்கள். அதற்குள்ளாகவே அதனை அஸ்தமிக்கச் செய்யும் இது போன்ற முயற்சிகள்தான் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளரை பெரிதும் நொடிக்க வைக்கிறது..! உறுதியான நடவடிக்கை எடுக்க அரசுகள் உத்தரவிட்டாலும் அதிகார வர்க்கம் காசுக்காக விட்டுக் கொடுக்கிறது.. மாட்டிக் கொண்டவர்கள் அப்பாவி தயாரிப்பாளர்கள்தான்..!