சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபத்தை அமைத்துள்ளது.
அந்த மணி மண்டப திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகுமார், சத்யராஜ், நாசர், விஷால், கார்த்தி மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது, “ஓ.பி.எஸ். ரொம்பவே அதிர்ஷ்டசாலி. அது ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது. இப்போது காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்கும் இந்த மணி மண்டபத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் அவருக்குக் கிடைச்சிருக்கு. இதனால் இன்னமும் அதிர்ஷ்டசாலியாகியிருக்கிறார்.
சிவாஜி ஸார் நடிப்பு சக்கரவர்த்தி. இப்படித்தான் நடிக்கணும். இப்படித்தான் நடக்கணும்.. இப்படித்தான் பேசணும்ன்னு இருந்த காலக்கட்டத்துல நடிப்புல, பாவனைல, வசன உச்சரிப்புல எல்லாத்துலேயும் ஒரு புரட்சியை உண்டாக்கி இந்தியால இருக்குற அத்தனை மாநிலத்திலும் உள்ள ஹீரோக்களெல்லாம் இந்த மாதிரியொரு நடிகரை போல நாம நடிக்கவே முடியாது என்று பாராட்டப்பட்ட மகா நடிகன் அவர்.
அதுக்காகத்தான் இந்த மணி மண்டபம் கட்டுனாங்களா..? சிலை வைச்சாங்களா..? சாதாரணமா ஒரு நடிகனா இருந்திருந்தால் மட்டுமே அவருக்கு இது போன்ற மணி மண்டபம் கட்டியிருக்க மாட்டாங்க.. அது எவ்ளோ பெரிய நடிகனா இருந்திருந்தாலும் சரி.
ஏன் சிவாஜி ஸாருக்கு மணி மண்டபம் கட்டினார்கள்..? சிலை அமைத்தார்கள் என்றால்.. அவருடைய நடிப்புத் துறையில் இருந்து.. நடிப்பாற்றலில் இருந்து.. அவர் நடித்த.. அவர் படங்களில் நமது சுதந்திர போராட்ட வீரர்களின், வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையை படமாக்கி.. அவர்களின் வீரத்தை தமிழகத்தின் கடைக்கோடி மக்கள் வரையிலும் கொண்டு போய் சொன்னார். சிவ புராணம், கந்த புராணம் இப்படி பல புராணக் கதைகளையும் மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்தாரு. அதனால்தான் அவருக்கு இந்த மணி மண்டபம்.
கடவுள் மறுப்புக் கொள்கை தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்திலேயே, நெத்தில விபூதியை போட்டுட்டு தனது நடிப்பாற்றலில் உச்சத்தைத் தொட்டவர் சிவாஜி ஸார். அதுக்குத்தான் இந்த மணி மண்டபம்.
நாம மண்ணோடு மண்ணா போறவங்க்கூட பழகுறோம்.. சாம்பலா போகப் போறவங்ககூட பழகுறோம்.. ஆனால் இந்த மாதிரி சிலையா வாழப் போறவங்ககூட பழகணும். லட்சத்துல ஒருத்தருக்குத்தான் இது மாதிரி சிலையாய் நிக்குற வாய்ப்பு கிடைக்கும். அதுலேயும் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தால் வைக்கப்பட்ட சிலை இது. இப்படிப்பட்ட மகானோட பழகியிருக்கோம்ன்றது நமக்கெல்லாம் மிகப் பெரிய பெருமை.
இது வந்து அரசியல், சினிமா துறை இரண்டும் சேர்ந்து, கலந்த ஒரு விழா. சிவாஜி ஸார் சினிமால மட்டுமில்ல.. அரசியலுக்கும் வந்தார். தனிக்கட்சி ஆரம்பிச்சு அவர் சொந்தத் தொகுதியிலேயே நின்னு தோத்துப் போயிட்டார். அது அவருக்குக் கிடைத்த அவமானமல்ல. அந்தத் தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம்.
இதன் மூலமா ஒரு செய்தியை சொல்லிட்டுப் போயிருக்காருன்னுதான் சொல்லணும். அரசியல்ல ஜெயிக்கணும்ன்னா சினிமா வெற்றி, புகழ், பெயர் மட்டுமே பத்தாது. அதையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கணும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு சத்தியமா தெரியாது.
கமல்ஹாசனுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன். தெரிஞ்சாலும் அவர் எனக்குச் சொல்ல மாட்டாரு. ஒருவேளை இரண்டு மாசத்துக்கு முன்பு கேட்டிருந்தால் கமல் சொல்லியிருப்பாரோ என்னவோ..? ‘நீங்க திரையுலகத்தில் எனது மூத்த அண்ணன். நீங்க எனக்குச் சொல்லணும்’னு கேட்டால், ‘நீ என்கூட வா.. சொல்றேன்’னு சொல்றாரு..
இதுவொரு அற்புதமான விழா. நடிகர் திலகத்திற்கு இப்படியொரு மணிமண்டபம் கட்டிக் கொடுத்த புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலையை அமைத்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள், மணி மண்டபத்தை உருவாக்கிய அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றி. இது உருவாக சிவாஜி குடும்பத்தினர் குறிப்பாக பிரபு, ராம்குமாரின் விடா முயற்சிதான் காரணம். அதற்காக அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.