full screen background image

இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதைக்குப் பதில் கவிதை எழுதிய நடிகர் கமல்ஹாசன்!

இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதைக்குப் பதில் கவிதை எழுதிய நடிகர் கமல்ஹாசன்!

இயக்குநர் சீனு ராமசாமியின் ‘குரு சங்கரன்’ என்ற கவிதையை இணையத்தில் படித்துவிட்டு, நடிகர் கமல்ஹாசன் கீழ்க்காணும் பதில் கவிதையை எழுதியுள்ளார்.

சீனு ராமசாமியின் கவிதைகளில் இருக்கும் அன்பு அம்சம் அவரை வெகுவாக ஈர்த்திருக்கிறது என நெகிழ்ந்து இக்கவிதையை அவருக்கு அனுப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கமல் ஹாசன் அவர்களின் பதில் கவிதை:

இக்குருட்டுத் தாத்தாவின்
கண்ணுடைப் பேரன்
கல்வியாளன் அல்ல.
கவியை ஊன்றி நடக்கும்
என்னிளம் பேரா
என்றேனும் பள்ளி செல்ல மறக்காதே
அல்லேல்
என்போலே அலைவாய்.

 – கமல்ஹாசன்.

இப்படி கமல்ஹாசன் அவர்களின் பதில் கவிதை எழுதத் தூண்டிய சீனு ராமசாமியின் கவிதை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

குரு சங்கரன்
………………………
இன்னும் வராது
பள்ளிக்கு போன
சங்கரனை தேடுகிறார்
சங்கரன் தாத்தா.

வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மாலை வெயிலில் அலைகிறார்.
விரல் தடுக்காமல்
பாதங்களை ஊன்றிப் பார்க்கிறார்.

நடக்க முடியாது

“சங்கரா சங்கரா
இருட்டுதுடா
தாத்தாவுக்கு
கண் தெரியலடா”.

இருள் கவியும்
ஓசைக்கிடையில்
எங்கிருந்தோ
ஓடி வந்தான் சங்கரன்.

“தாத்தா சேவல் சுருட்டு வாங்கிட்டு வர்றேன்.
நீ எதுக்கு வந்த” என்றான்.

“இதுக்கா பெரிய ரோட்ட தாண்டிப் போன ஏய்யா?

“நீ போவியே..
அப்புறம் நா தேடுவனே”

“நீ தேடுவியா..
அப்பாடி..
வேணாம்பா
வா..”

தேடி வருபவரிடம்
தேடி வருவது போலொரு அன்பு

சங்கரன் விரல் பற்றி நடந்த சங்கரன் தாத்தா அவனின் வாத்தியார் போல முழுப் பெயர் சொன்னார்.

“அலைய விட்டுட்டியே
குரு சங்கரசாமி
பாத்து வா”

“நீ பாத்து வா தாத்தா”
என்றான்
சங்கர தாத்தாவின்
பேரன்
சங்கரன்.

சீனு ராமசாமி.

Our Score