நடிகர்கள் ரஜினிக்கும், விஜய்க்கும் இடையில் கடந்த சில மாதங்களாக சுற்றிக் கொண்டிருந்த காக்கா, கழுகு கதைக்கு இன்று நடைபெற்ற ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முற்றுபுள்ளி வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்த விழாவில் நடிகர் ரஜினி பேசும்போது, “காக்கா-கழுகு கதையை விஜய்யை தாக்கிப் பேசியதாக பலரும் எடுத்துக் கொண்டார்கள். அது என்னை ரொம்பவே வேதனையடைய செய்தது. நான் என்றைக்குமே அவருடைய நலம் விரும்பிதான்.
தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என்று வெளியில் பேசுவது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. விஜய் என் கண் முன்னால் வளர்ந்த பையன். அவரை அவரது சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன்.
தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் நான் இருந்தபோது விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து, “என்னுடைய பையன் படிச்சிக்கிட்டிருக்கான். ஆனால், அவனுக்கு நடிப்பின் மீதுதான் ஆர்வம் அதிகமாக உள்ளது. அவனை படிப்பெல்லாம் முடிச்சிட்டு வந்து நடின்னு நீங்களே சொல்லுங்களேன் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு விஜய் நடிக்க வந்து, தற்போது தனது உழைப்பால்தான் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்தும் வருகிறார். மேலும் அரசியலுக்கு வரும் முயற்சியிலும் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தற்போது விஜய்க்கும், எனக்கும் இடையில் போட்டி என கூறுவது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் ஒரு மேடையில் “எனக்கு போட்டி நான்தான்” என கூறியுள்ளார். நடிகர் விஜய்யை எனக்கு போட்டியாளராக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. என்னை விஜய் தனக்குப் போட்டியாளராக நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லை. ஆகவே, தயவு செய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் அனைவரும் அந்த காக்கா-கழுகு கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்..” என்றார் ரஜினி.