full screen background image

ஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள  ‘களிறு’ திரைப்படம்

ஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள  ‘களிறு’ திரைப்படம்

கொஞ்சமும் சினிமாத்தனமே இல்லாமல் ‘களிறு’  என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது.

சி.பி.எஸ். பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோ சார்பில் விஷ்வக், அ.இனியவன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். 

இப்படத்தில் வழக்கமான சினிமா வந்துவிடக் கூடாது என்று நினைத்து முற்றிலும் புதுமுகங்களை வைத்தே உருவாக்கியுள்ளார்கள்.

இந்தப் படத்தில் விஷ்வக், அனு கிருஷ்ணா, நீரஜா, தீபா ஜெயன், சிவநேசன்,  துரை சுதாகர், ஜீவா, உமா ரவிச்சந்திரன், தீப்பெட்டி கணேசன், ‘காதல்’ அருண், ‘வெளுத்துக் கட்டு’ அப்பு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – D.J. பாலா.  இவர் ஒளிப்பதிவாளர் சுகுமாரின் மாணவர். இசை – புதுமுகம் என்.எல்.ஜி.சிபி, பாடல்கள் – தமிழ் ஆனந்த், ப.முகிலன், ராஜ் செளந்தர், கலை – மார்ட்டின் டைட்டஸ், படத் தொகுப்பு – நிர்மல், நடனம் – ராதிகா, சண்டை பயிற்சி -த்ரில்லர் முகேஷ், புதுமுக இயக்குநர்  ஜி.ஜெ.சத்யா இயக்கியுள்ளார்.

நாட்டில் நடைபெற்ற பல்வேறு உண்மைச் சம்பவங்களைத் தழுவி அதன் கோர்வையாக ஆணவக் கொலைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குநர் சத்யா பேசும்போது, “இந்தப் படம்  நாட்டில் இன்று நிலவுகிற சமுதாயச் சூழலை முடிந்தவரை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது.

ஆணவக் கொலைகள் என்றும்  கெளரவக் கொலைகள்  என்றும் நடைபெறும் படுகொலைகளால் இழப்பும், வலியும் இரண்டு குடும்பங்களுக்கும் பொதுவானது என்பதை காலம் கடந்து உணர்ந்த பெற்றோர்களை நானே சந்தித்திருக்கிறேன்.

ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் காதலித்து கலப்புத் திருமணம் செய்தால், அது மிகப் பெரிய சமூகக் குற்றம் என்பதுபோல் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இரண்டு குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் உட்கார்ந்து பேசினால் அந்தக் காதலர்களின் உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்ள முடியும்.

வீட்டோடு முடிய வேண்டிய பிரச்சினைகளை போலி அரசியல்வாதிகள், ஊதிப் பெரிதாக்கி, இதனை நாட்டுப் பிரச்சினையாக்கி அதில் எப்படி அவர்கள் குளிர் காய்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறோம்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்கு எந்த இழிவான செயல்களைச்  செய்யவும் அஞ்ச மாட்டார்கள். மக்களிடம் இப்படி உணர்ச்சியைத் தூண்டி பிளவுபடுத்திக் காரியம் சாதிக்கும் அவர்களைப் புரிந்து அவர்களுக்கெதிராகப் பாதிக்கப்பட்டவர்கள்   திரும்பினால்  என்ன ஆகும் என்று இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன்.

வணிக ரீதியிலான எந்த சமரசங்களுக்கும்  இடம் தராமல்  யதார்த்தம் ஒன்றை நோக்கமாகக் கொண்டு சினிமாத்தனம் இல்லாமல் ‘களிறு’ உருவாகியிருக்கிறது .

சினிமாத்தனம் இல்லையென்றால்  ஆவணத் தன்மை இருக்குமோ என்கிற தயக்கம் யாருக்கும் வேண்டாம்.  விறுவிறுப்புக்குப்  பஞ்சம் இல்லாத வகையில்    உருவாகியிருக்கும் பரபரப்பான திரைக்கதை படம் பார்ப்பவரின் கவனத்தை ஈர்க்கும்…” என்றார் இயக்குநர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் அமீர் இன்று வெளியிட்டார்.

Our Score