யோட்லீ பிலிம்ஸ், சன்னி வாய்ன் புரொடெக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளன.
படத்தில் நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன், இந்திரன்ஸ், ஷினே டாம் சாக்கோ, விஜயராகவன், மனோஜ் ஓமன், ரம்யா சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – தீபக் டி.மேனன், இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பு – ஷாபிக் முகமது அலி, இயக்குநர் லீஜு கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மல்லூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நிவின் பாலி. அம்மா, அப்பா இல்லாத நிலையில், தனது சித்தியுடன் பழமையான தனது வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
பள்ளிப் பருவத்தில் சிறந்த ஓட்டப் பந்தய வீரனாக இருந்த நிவின் பாலி, ஒரு விபத்தின் காரணமாக காலில் அடிபட்டு எந்த வேலைக்கும் போக முடியாமல் வீட்டிலேயே இருக்கிறார்.
அந்த ஊரில் திடீர் பணக்காரனாக இருக்கும் ஷம்மி திலகன் அருகில் இருக்கும் பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறார். கூடவே ஒரு கட்சியும். மல்லூரில் இப்போது இருக்கும் பஞ்சாயத்து நிர்வாகத்தை வரும் தேர்தலில் தோற்கடிக்க நினைக்கும் ஷம்மி திலகன் இதற்காக நிவின் பாலி குடும்பத்தின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
ஓட்டை உடைசலாக இருக்கும் நிவின் பாலியின் வீட்டை ஒரே நாளில் புதுப்பித்து தருகிறார் ஷம்மி திலகன். கூடவே அந்த வீட்டின் முன்பாக அந்தக் கட்சியால் புனரகமைக்கப்பட்ட இல்லம் என்ற நினைவுச் சின்னத்தையும் வைத்துவிட்டுப் போகின்றனர் ஷம்மி திலகனின் கட்சியினர்.
இதன் பின்பு ஊர் மக்கள் நிவின் பாலியை ‘ஸ்பான்ஸர் பேமிலிக்காரன்’ என்று கிண்டல் செய்கின்றனர். நிஜத்தில் கோபக்காரரான நிவின் பாலி இந்தக் கிண்டலை பொறுக்க முடியாமல் அந்தப் பலகையை உடைத்தெறிகிறார். இதனால் ஷம்மி திலகனின் கட்சிக்காரர்களுடன் அவருக்கு மோதல் ஏற்படுகிறது.
மேலும் ஷம்மி திலகன் ஊர் மக்களிடம் விதை, உரம், பணத்தைக் கொடுத்து விவசாயம் செய்யச் சொல்லிவிட்டு விளைந்தவைகளை தானே வாங்கிக் கொள்வதாகச் சொல்லி ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறார். ஆனால் இதுவொரு ஏமாற்று வேலை என்று சொல்லி நிவின் பாலி தன் வீட்டின் முன்பான நிலத்தில் தானே பயிரிட்டு விளைவித்த காய்கறிகளைக் கொண்டு தனி கடையே அமைத்து தொழில் செய்யத் துவங்குகிறார்.
இதனால் ஆத்திரமடையும் ஷம்மி திலகனின் கட்சிக்காரர்கள் நிவின் பாலியுடன் நேரடியாகவே மோதுகின்றனர். முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
நிவின் பாலி இப்படியொரு கதையைத் தேர்ந்தெடுப்பார் என்று யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அப்படியொரு கதை இது..!
ஹீரோவுக்காக கதையை கண்டபடி வளைக்காமல், கதைக்கேற்ப ஹீரோவை பயணிக்க வைக்கிற மலையாள சினிமாவுக்கேயுரிய திரைக்கதையோட்டத்துக்கு மிகமிக சரியாகப் பொருந்தியிருக்கிறார் நிவின் பாலி..!
தன் மண்ணுரிமையை நிலைநாட்ட அவ்வளவு பெரிய கூட்டத்துக்குள் தனி மனிதனாய் நிவின் பாலி களமிறங்கும்போது, கையில் ஈட்டியுடன் தன் அப்பாவின் தோளில் அமர்ந்திருக்கும் காட்சியை இடை நிற்றல் காட்சியாய் காட்டும்போது நமக்கு சிலிர்ப்பாய் இருக்கிறது.
தொப்பையும், தொந்தியுமாய் இருப்பதோடு, எப்போதும் சோம்பேறித்தனமாக, எடுத்தெறிந்து பேசுவதாகவும், யாரையும் மதிக்காமலும் நடந்து கொள்ளும் நிவின், படத்தின் பிற்பாதியில் ஒரு புது மனிதனாக உருவெடுக்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் விஸ்வரூப தரிசனம் நடிப்பரசியலை தவிடுபொடியாக்குகிறது. அமைதியாக அதேசமயம் ஆழமான அவருடைய நடிப்பு, படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.
நாயகி அதிதி பாலன் தன் கண்களிலேயே சோகத்தையும், காதலையும் காண்பித்து நிவின் பாலியை மட்டுமல்ல நம்மையும் கவர்ந்திழுக்கிறார். அவருக்குள் இருக்கும் சோகத்தை அழுகையுணர்ச்சியே இல்லாமல் அமைதியாய் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு ரசிக்கத்தக்கது.
அரசியல் கட்சித் தலைவராக கர்ஜிக்கிறார் ஷம்மி திலகன். அவருடைய அப்பா திலகனை திரையில் பார்த்ததுபோல இருக்கிறது.
நிவின் பாலியின் சித்தி புஷ்பாவாக நடித்திருக்கும் ரம்யாவின் நடிப்பு காட்டாற்று வெள்ளம். படபடவென பொரிந்து தள்ளி வேலை செய்து கொண்டே வசனம் பேசி நடித்திருக்கும் அவரது நடிப்பு அழகோ அழகு.
இந்திரனின் அமைதியான அப்பா நடிப்பும், விஜயராகவனின் ஆசிரியருக்கான பக்குவப்பட்ட நடிப்பும் அவர்களது கதாபாத்திரத்தை உயர்த்தியிருக்கின்றன. இன்னொரு பக்கம் சாக்கோவின் புரிதல் இல்லாத நண்பன் கேரக்டரும் படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாக கிடைத்திருக்கிறது.
கண்ணூர் பகுதியின் அழகை ஒளிப்பதிவாளர் தீபக்கின் கேமிரா அழகுற படமாக்கியிருக்கிறது. கொட்டும் மழையில்கூட அந்தக் கிராமத்தை ரசிக்க முடிகிறது. கோவில் திருவிழாவில் நடைபெறும் சண்டை காட்சியைப் படம் பிடித்தவிதத்தில் ஒரு போர்க்களத்தையே கண்ணில் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இதேபோல் நிவின் பாலியின் வீட்டை ஷம்மி திலகனின் கட்சிக்காரர்கள் சீர்குலைப்பதும், பதிலுக்கு நிவின் பாலி காட்டும் ஆவேச சண்டை காட்சிகளும் படத்தின் ஹைலைட்ஸ் என்றே சொல்லலாம்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்தை ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. சண்டை பயிற்சியாளரையும், படத் தொகுப்பாளரையும் அவர்களின் சிறந்த பணிக்காகப் பாராட்டியே ஆக வேண்டும்.
இயக்குநர் லிஜு கிருஷ்ணா இந்தப் படத்தை தைரியமாக எழுதி இயக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்.
‘படவெட்டு’ என்றால் ‘போர்’ என்று பொருளாம். அதிகார சக்திகளுக்கும், மக்களை அடிமையாக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக ஒரு சாமான்யன் நிகழ்த்தும் போர்தான் இந்தப் படம்.
தற்போது நாட்டை ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கும் விவசாய நலத் திட்டங்கள் மறைமுகமாக விவசாயத்தை எப்படி அழிக்கிறது என்பதை வெளிப்படையாகவும், நேர்த்தியாகவும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது கேரளாவில் ஆண்டு கொண்டிருக்கும் பொதுவுடைமைக் கட்சிக்கு மாற்றாக தங்களது கட்சியை வளர்த்து அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் புதிய பணக்காரரின் ஒரு அரசியல் கட்சி செய்யும் தகிடுதத்தங்கள், சூழ்ச்சிகள் ஆகியவைகளை இயக்குநர் தன் எண்ணத்தில் இருந்து படைத்திருந்தாலும் அது, அப்படியே இப்போதைய மத்திய அரசை ஆளும் பாரதீய ஜனதா கட்சியை ஞாபகப்படுத்துகிறது.
விவசாயிகளுக்கான வேளாண் திட்டம். வயலுக்கு வேலி போடும் திட்டம். மண் வளம் மற்றும் உரம் வழங்கும் திட்டம். விளைந்து வரும் பயிர்கள் மற்றும் காய்கறிகளுக்கான விலையை நிர்ணயிக்கும் திட்டம் என்பது போன்ற பல திட்டங்களின் பின்னணியில் இருக்கும் மோசடியை இந்தப் ‘படவேட்டு’ படம் பேசியுள்ளது.
இப்படி நேரடியாகக் குற்றம்சாட்டும் அளவுக்குப் படத்தை எடுத்திருக்கும் இயக்குநரின் துணிவையும் இதற்குத் துணை நின்றிருக்கும் நாயகன் நிவின் பாலியையும் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எப்படி தங்களது பணத்தையும், பெயரையும், புகழையும், வைத்து மக்களை மடைமாற்றி இயற்கை வளத்தையும், மண் வளத்தையும் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை ஷம்மி திலகனின் கதாபாத்திரத்தை வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
அதேபோல் தங்களை எதிர்க்கும் அரசியல் கட்சிகளை சமாளிக்க பொதுவுடமை கட்சியினர் என்ன செய்வார்கள் என்பதையும், அரசியல்வாதிகள் தங்கள் மீது பரிதாபம் ஏற்பட ஏழை எளிய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி சீன் போடுகிறார்கள் என்பதையும் சில காட்சிகளில் வெளிப்படையாக சுட்டிக் காட்டி மலையாள திரைக் கலைஞர்களின் தைரியத்தை பறை சாற்றியிருக்கிறார் இயக்குநர்.
இந்த மண் நம்முடையது.. நீர் நம்முடையது.. இதை அனுபவிக்கும் உரிமையும் நம்முடையது. நம் உரிமையை நம்மிடமிருந்து தட்டிப் பறிக்க நினைப்பவர்களை நாம் எட்டி உதைத்தாக வேண்டும் என்பதை வெளிப்படையாக சொன்னவிதத்தில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று என்ற பட்டியலில் சேர்ந்திருக்கிறது இந்தப் ‘படவெட்டு’ திரைப்படம்..!
படத்தின் இறுதி காட்சியில் வரும் “என் வீடு, என் உரிமை”, “என் நிலம், என் உரிமை”, “என் நாடு, என் உரிமை” என்ற வசனங்கள் இந்தியா முழுமைக்கும் தற்போது தேவைப்படும் முழக்கமாகும்..!
மலையாளப் படங்களுக்கே உரித்தான வகையில் மெதுவாக நகரும் திரைக்கதையும், சற்றே நீளமான திரைக்கதையாலும் நமக்கு அயர்ச்சியை கொடுத்தாலும் சொல்ல வந்த கருத்து அடுத்தத் தலைமுறையினருக்கும் சேர்த்துதான் என்பதால் நாம் அதைப் பொறுத்துக் கொள்ளலாம்தான்.
இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதைத் தன் நடிப்பால் பன் மடங்கு உயர்த்தியிருக்கும் நிவின் பாலிக்கு நமது வாழ்த்துகள்.
பா.ஜ.க.வின் சதிகளை அப்பட்டமாகத் தோலுரிக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைத் தமிழில் மொழி மாற்றம் செய்தால் தமிழ் சினிமாவுக்கு பெருமைதான்.
ஆனால் அந்த அளவுக்குத் தைரியமுள்ள ஹீரோக்கள் இங்கே யார் இருக்கிறார்கள்..?
RATING : 4 / 5