துஷாரா விஜயன் – ஜான்சி
அதிதி பாலன் – மரமல்லி
அப்பாஸ் – ஜெயச்சந்திரன்
வசுந்தரா. சி – சரண்யா
நரேன் மணி – குமரேசன்
தொழில் நுட்ப குழு:
எழுத்து & இயக்கம் : ஏ. சற்குணம்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் : புஷ்கர் & காயத்ரி
வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்து வழங்கியுள்ளது
தயாரிப்பாளர்கள்: கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, எஸ் நந்தகுமார்
ஒளிப்பதிவு : அருண் அமரேந்திரன்
இசையமைப்பாளர்: சாம் சி எஸ்
எடிட்டர் : ரிச்சர்ட் கெவின். ஏ
நிர்வாக தயாரிப்பாளர்: கனிஷ் பிரபு. சி
தயாரிப்பு வடிவமைப்பு: விஜு விஜயன் வி.வி
ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன்
போஸ்ட் & VFX மேற்பார்வையாளர்: ஓ.கே. விஜய்
ஆடை வடிவமைப்பாளர்: காயத்ரி ஸ்ரீனிவாசன்
ஒலி வடிவமைப்பு: பிரபாகரன் கே, தினேஷ் குமார் பி
பத்திரிரக்கை தொடர்பு : யுவராஜ்
இன்றைக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைவிடவும் அதிகமாக மக்களை பாதித்திருப்பது நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் புதிய தேர்வு நடத்தப்படும் என்று அந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருப்பதுதான்.
போட்டித் தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் எங்கேயோ ஒரு இடத்தில் பணத்துக்காக லீக் செய்யப்பட்டு மோசடி நடப்பது இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது.
மற்ற தேர்வுகளில் எல்லாம் இதுபோன்று நடந்திருக்க, இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் இப்படி ஒரு கொடுமை நடந்திருப்பது இதுதான் முதல் முறை. இப்போது இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு புதிய தேர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதும் இதுதான் முதல் முறை. இது போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் மோசடியை வெளிப்படுத்துவதுதான் இந்த எக்ஸாம் படத்தின் கதை.
நீலகிரி அருகில் இருக்கும் ஒரு போலீஸ் சரகத்திற்கு டிஎஸ்பியான மரவல்லி என்ற அதிதி பாலன் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுகிறார். இன்னும் சில நாட்களில் போட்டித் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவர் அந்த போலீஸ் சரகத்திற்கு டிஎஸ்பியாக வருவது ஏதோ ஒரு காரணத்தோடு சொல்லப்படுகிறது.
பணியில் சேர்வதற்காக நள்ளிரவில் காரில் வரும் அதிதி பாலனை ஜான்ஸி என்ற துஷாரா விஜயன் கடத்திச் செல்கிறார். அந்த ஊரின் டிஎஸ்பி பங்களாவிலேயே அதிதி பலனை கட்டிப்போட்டு சிறை வைத்துவிட்டு.. நான்தான் டி.எஸ்.பி. மரவல்லி என்று பொய் சொல்லி பணியில் சேர்கிறார் துஷாரா விஜயன்.
அதிதி பாலன் இங்கே டிஎஸ்பியாக பதவியேற்க வருவதுதான் போட்டித் தேர்வில் நடக்கும் முறைகேடுகளின் முதல் புள்ளி என்பதை கண்டறியும் துஷாரா விஜயன், அந்தப் பணியில் இருந்து கொண்டு ஏற்கனவே நடந்த போட்டி தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை வெளிக் கொண்டு வர தீவிரமாக முயற்சி செய்கிறார்.
ஆனால், பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு போக போக அதிதி பாலன் இந்த முறைகேட்டில் சாதாரணமான ஒரு கருவிதான் என்பதை கண்டறிகிறார். அப்படியானால் இந்தப் போட்டித் தேர்வில் நடக்கும் ஊழல் முறைகேடுகளுக்கு யார் பொறுப்பாளர் என்று தேட துவங்குகிறார் துஷாரா விஜயன்.
இந்த விஷயத்தில் துஷாராவுடன் இணைந்து வேறு சிலரும் செயல்படுகிறார்கள். அவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்தப் போட்டி தேர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் வரும் கதைகள் மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது.
இவர்கள் ஏன் ஒரு டிஎஸ்பியை கடத்தி வைத்து மாற்று ஆளை அனுப்ப வேண்டும்? அந்தப் போட்டித் தேர்வில் என்னென்ன முறைகேடுகள் நடந்திருக்கின்றன.? துஷாரா விஜயன் எதற்காக இந்த ப்ராஜெக்ட்டில் ஈடுபட்டார்.? அவருடன் இருப்பவர்களுக்கு என்னை இழப்பு ஏற்பட்டது.? இந்த மோசடியை கடைசியாக துஷாரா விஜயன் கண்டுபிடித்தாரா..? இல்லையா..? இதன் பின்னணியில் இருந்த மூலவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்த 10 எபிசோடுகள் கொண்ட ‘எக்ஸாம்’ என்ற வெப் சீரிஸ்.
துஷாரா விஜயனும், அதிதி பாலனும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரின் நடிப்புதான் கடைசிவரையிலும் இந்த எக்ஸாம் சீரிசை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது. அதிலும் துஷாரா விஜயன் ஒரு படி மேலே சென்று இந்த தேர்வு எழுதுவதற்காக அவர் படுகின்ற கஷ்டம், அவர் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை.. இதையெல்லாம் ஒரு செகண்டில் உடைத்தெறியும் அந்த முறைகேடுகள்.. இதனால் துஷாரா களம் இறங்கியதை பார்க்கும்பொழுது தப்பே இல்லை என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் அதிதி பாலன் எப்படி இருந்தாலும் பணம் சம்பாதிக்க வேண்டும். யார் எக்கேடுகெட்டுப் போனால் நமக்கென்ன என்கின்ற மாதிரியான மன நிலையில் இருக்கும் உயர் போலிஸ் அதிகாரி. அதே சமயம் தன் மகள் மீது அவர் வைத்திருக்கும் பாசம்.. கணவருடனான மன வாழ்க்கை முறிவு.. இதையும் படத்தில் சேர்த்து கொடுத்திருக்கிறார்கள்.
கடைசியாக இவரும் துஷாரா விஜயனின் உணர்வைப் புரிந்து கொண்டு இறுதியில் இருவரும் ஒற்றுமையாக இதன் பின்னணியில் இருக்கும் கயவர்களை தேடும் பணியில் ஒன்றிணைவது மிகவும் சிறப்பு.
இருவருக்கும் ஒளிப்பதிவாளர் வைத்திருக்கும் குளோசப் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் அசத்தலாக தங்களது திறமையை காட்டி இருக்கிறார்கள். இருவருக்கும் நடக்கும் சண்டை காட்சிதான் இதுவரையில் நாம் பார்த்த வெப் சீரிஸ்களிலேயே மிகச் சிறப்பானது என்று சொல்லலாம்.
துஷாரா விஜயனுக்கு உதவி செய்யும் கேரக்டரில் அப்பாஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் செழியன் கதாபாத்திரத்தில் துரை சுதாகரும் தன்னுடைய நடிப்பை பதிவு செய்திருக்கிறார். டிஎஸ்பியின் கார் டிரைவராக நடித்திருக்கும் நடிகரும், ஒரு குணசித்திர நடிப்பை காண்பித்து இருக்கிறார். இவருடைய மகளாக நடித்த பெண்ணும் ஒரு இனம் புரியாத வேட்கையில் இந்த தேர்வில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று அவர் காட்டுகின்ற முனைப்பு பாராட்ட வைக்கிறது.
படத்தில் நடித்திருக்கும் நிறைய கிராமத்து கதாபாத்திரங்களும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் வேடங்களில் நடித்தவர்களும் அந்த வட்டார மக்களாகவே பார்த்து தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். இதற்காகவே இயக்குநருக்கு நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
படத்தின் தொழில் நுட்பத்திலும் இந்த வெப் சீரிஸ் மிகச் சிறப்பாகவே உருவாகியிருக்கிறது. ஒளிப்பதிவு, இசை, படத் தொகுப்பு, கலை இயக்கம், காஸ்ட்யூம் டிசைனிங் என்று அத்தனையிலும் இந்த வெப் சீரீஸ் ஒரு தனி சிறப்பினைப் பெற்றிருக்கிறது.
இந்தத் தொடர் முழுவதுமே மலைப் பிரதேசத்திலேயே நடந்திருப்பதால் கண்ணுக்கு குளிர்ச்சியான வகையிலும், இயற்கை அழகை பிரமாண்டமாக காட்டுவதிலும் படத்தின் ஒளிப்பதிவாளர் நிறையவே உழைத்திருக்கிறார்.
அதேபோல் அதிதி பாலன், துஷாரா விஜயன் இருவரின் சண்டைக் காட்சியை எப்படி இவ்வளவு அழகாக படமாக்கினார் என்று தெரியவில்லை. இதற்காக சண்டை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
அதேபோல் படத் தொகுப்பாளரும் இந்த சண்டை காட்சியை அவ்வளவு கச்சிதமாக நமக்கு நறுக்கித் தந்திருக்கிறார். பின்னணி இசையிலும் இந்த படம் ஒரு சிறப்பான ஆக்கத்தைத்தான் தந்திருக்கிறது.
‘களவாணி’ படத்தின் இயக்குநரான சற்குணம் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்தியாவில் இப்போதைக்கு நடுத்தர வர்க்க மக்களின் மிகப் பெரிய கனவே தங்களுடைய பிள்ளைகள் இந்தப் போட்டித் தேர்வில் பங்கு கொண்டு பைசா செலவில்லாமல் அரசு பணியில் அமர வேண்டும் என்பதுதான்.
அதில்கூட திருடர்கள் உள்ளே நுழைந்து அதையும் காசாக்கும் அந்த திருட்டு வேலையைத்தான் இந்த வெப் சீரீஸில் அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சற்குணம்.
பொதுவாக வெப் சீரிஸ் என்பது சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்காகவே அமைக்கப்பட்ட ஒரு ஒளிக்காட்சியாக நமக்கு தெரிகிறது.
இந்த சீரீஸிலும் அந்த சஸ்பென்ஸ் திரில்லர் தொடர்ந்து வருவதைப்போல ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும், அடுத்த எபிசோடின் துவக்கத்திலும் காட்சிகளை அமைத்து நம்மை கவர்ந்து இழுத்திருக்கிறார் சற்குணம்.
கதை, திரைக்கதையை அழகாக வடிவமைத்து அதன் போக்கிலேயே கொண்டு சென்று மிகச் சிறப்பான இயக்கத்தையும் அழுத்தமாக கொடுத்திருக்கிறார். இந்த வெப் சீரிஸின் முதல் பாகத்தைத் தொட்டுவிட்டால் கடைசி வரையில் உடனே பார்த்து முடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை நமக்கு விதைப்பது போல இந்த சீரீஸை அழகாக இயக்கி தந்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
சில வெப் சீரியஸ்களை இப்போது பார்க்கும்போது இது படமாக வந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசனை நமக்கு வரும். அப்படி நினைக்க வைத்த கதைதான் இந்த எக்ஸாம் வெப் சீரிஸ்.
உண்மையில் இந்தக் கதையை ஒரு திரைப்படமாகவே அவர் கொடுத்திருந்தால் நிச்சயம் இப்போதைய நிலைமையில் தமிழ்நாட்டில் இந்தப் படம் மிகப் பெரிய அளவுக்கு வெற்றியை பெற்றிருக்கும்.
எக்ஸாம் – ஒரே அட்டெம்ட்டில் அனைத்து பாடங்களிலும் பாஸ்தான்!
RATING : 4 / 5









