ஊமைச் செந்நாய் – சினிமா விமர்சனம்

ஊமைச் செந்நாய் – சினிமா விமர்சனம்

LIFE GOES ON PICTURES என்ற பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடித்திருக்கிறார். ‘கனா காணும் காலங்கள் சீரியல்’ மூலம் புகழ் பெற்ற இவர் ‘பர்மா’, ‘நளனும் நந்தினியும்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர்.

கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் வெளியாகும் இவரது முதல் படம் இது.

மேலும், ‘குற்றம் கடிதல்’ படத்தில் நடித்த சாய் ராஜ்குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், ‘தெகிடி’, ‘தலைவி’ படங்களில் கவனம் ஈர்த்த ஜெயக்குமார், ‘எமன்’ படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை கல்யாண் வெங்கட்ராமன் கவனித்துள்ளார். இவர் சிபிராஜ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ‘ரேஞ்சர்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைப் பள்ளி மாணவரான சிவா இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அதுல் விஜய் படத் தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கார்த்திக் இந்தப் படத்தில். சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். அறிமுக இயக்குநரான அர்ஜுன் ஏகலைவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஊமைச் செந்நாய்’ என்கிற தலைப்புக்கு ஏற்றபடி இந்தப் படம் ஒரு க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

வித்தியாசமான கதைகளைவிட வித்தியாசமான திரைக்கதைகள் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும். மிகச் சாதாரணமான ஒன்லைனை வைத்துக்கூட அசாதாரணமான படங்களைத் தந்துவிட முடியும். அதை காலம் போற்றும் படைப்பாகவும் மாற்ற முடியும்.

தமிழில் நிறைய படங்கள் அப்படியான உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. உச்சம் தொட்ட படங்கள் எல்லாமே அழகழகான திரைக்கதையோடுதான் இருக்கும்.

இந்தப் படமும் அதேபோல் திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் சில வித்தியாசங்களை செய்திருக்கிறது. அது எந்தளவிற்கு வொர்க்கவுட் ஆகியிருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

நாயகன் மைக்கேல் தங்கதுரை ஒரு டிடெக்டிவ்வாக வேலை செய்பவர். ஒரு அரசியல் புள்ளியை உளவு பார்க்கும் அசைன்மென்ட் அவருக்கு வருகிறது. அவரும் அதைச் செவ்வனே செய்கிறார்.

ஆனால் அவர் வேவு பார்க்கும் அரசியல் புள்ளிக்குப் பின்னால் மிகப் பெரிய க்ரைம் இருப்பது ஹீரோவிற்கு தெரிய வரும்போது அவர் பல விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. 

இதற்கிடையில் மெடிக்கலில் வேலை செய்யும் சனம் ஷெட்டியை காதலித்து கைப்பிடிக்கிறார். ஹீரோ செய்யும் வேலையே சனம் ஷெட்டிக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்தப் பாதிப்புக்கு பழி தீர்க்கப் புறப்படும் ஹீரோ எப்படி அந்தத் தீயச் செந்நாய்களை வேட்டையாடினார் என்பதுதான் இந்த ஊமைச் செந்நாய் படத்தின் கதை.

படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை செட்டிலான நடிப்பை கொடுத்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் சீக்வென்ஸ்களிலும் நன்றாக ஸ்கோர் செய்கிறார். ஒரு நல்ல ஹீரோ மெட்டிரியல் அவர்.

அவருக்கு எதிர் கேரக்டரில் வரும் சாய் ராஜ்குமார் மிகவும் சரியான தேர்வு. வில்லனிஷத்தை அழகாக கண்களிலும், உடல் மொழியிலும் கொண்டு வந்து மிரட்டுகிறார். க்ளைமாக்ஸில் அவர் போடும் ப்ளான் அசத்தல் ரகம்.

நாயகி சனம் ஷெட்டி பிக்பாஸில் போலவே நல்ல பிள்ளையாக வந்து போகிறார். படத்தில் அவரது கேரக்டரை வைத்துதான் பெரும் திருப்பம் இருக்கிறது. ஆனாலும் அவரது பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. நடிப்பிலும் சனம் ஷெட்டி பெரிதாக சோபிக்கவில்லை.

மெட்ரோ ஜெயக்குமார் கவனிக்க வைக்கிறார். குறிப்பாக இக்கட்டான சூழலில் போன் பேசும் காட்சியில் தன் முகபாவத்தால் சிரிக்க வைக்கிறார்.

படத்தின் மேக்கிங்கில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் காட்சிகளின்  ஸ்டேஜிங்கில் நிறைய தடுமாற்றம் இருக்கிறது. பட்ஜெட் காரணமாக இருந்தாலும் ஒரு காட்சிக்கான நம்பகத் தன்மையை ஆடியன்ஸுக்கு வர வைத்தே ஆகவேண்டும் அல்லவா?

திரைக்கதையில் சில, பல புது முயற்சிகள் தெரிந்தாலும் அவை நமக்குள் எமோஷ்னலாக கனெட்க் ஆக காட்சியமைப்பின் வீரியம் முக்கியம். அது இங்கே மிஸ்ஸிங்..!

இயக்குநர் வசனம் விசயத்திலும் கோட்டை விட்டிருக்கிறார். தேவையான வார்த்தைகளைத்தான் கதாப்பாத்திரங்கள் பேசவேண்டும். வசனங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். அதோடு இப்படத்தில் நிறைய இடங்களில் வசனங்கள் புரியவே இல்லை. அது டப்பிங் பிழையோ என்னவோ?

கல்யாண் வெங்கட்ராமின் ஒளிப்பதிவு தனிப்பதிவு. சோளக்காட்டில் நடக்கும் க்ளைமாக்ஸ் சீக்வென்ஸை மிகவும் காத்திரமாக படம் பிடித்துள்ளார். இசை அமைப்பாளர் சிவா க்ரைம் திரில்லர் படம் என்பதை பின்னணி இசையில் உணர்த்திக் கொண்டே இருக்கிறார். நல்ல உழைப்பு.

மொத்தத்தில் ஊமைச் செந்நாய் முன் பாதியில் கொஞ்சம் சோர்வைக் கொடுத்தாலும் பின் பாதியில் தேறி விடுகிறது.

Our Score