full screen background image

உத்ரா – சினிமா விமர்சனம்

உத்ரா – சினிமா விமர்சனம்

பேண்டஸி கதைகளுக்கு எப்போதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் பேய்ப் பட ரசிகர்களின் மனதை கவருவதற்காக உருவாகியிருக்கிறது இந்த ‘உத்ரா’ என்ற புதிய படம். 

இந்தப் படத்தை ரேகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கதையின் நாயகியான உத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரக்‌ஷா ராஜ் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அம்மன் வேடத்தில்  நடிகை கெளசல்யா நடித்திருக்கிறார். மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – எம்.சக்கரவர்த்தி, திரைக்கதை, இயக்கம் – நவீன் கிருஷ்ணா, இசை – சாய்தேவ், ஒளிப்பதிவு – ரமேஷ், வசனம் – குமார், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, சண்டை இயக்கம் – கில்லி சேகர், நடன இயக்கம் – ராதிகா.

வட்டப்பாறை என்ற மலைப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு தங்களது பிராஜெக்ட் வொர்க்கிற்காக வருகிறார்கள் மூன்று மாணவர்களும், மூன்று மாணவிகளும்.

அந்தக் கிராமத்தில் மின்சாரம் இல்லை. அவ்வளவு ஏன்..?  அந்தக் கிராமத்தில் திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.  அப்படியே அந்த ஊரில் மீறி திருமணம் நடந்தாலும்  அந்த புதுமணத் தம்பதிகள் அன்றிரவே மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள்.

ஆக, அந்த ஊர் மக்களுக்கு வாரிசு உருவாகும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அந்த ஊர் ஆண்கள் இரவில் தங்களது வீட்டில் தங்காமல் ஊர் எல்லையில் வந்து படுத்துக் கொள்கிறார்கள்.

இதைக் கேள்விப்படும் அந்தக் கல்லூரி மாணவர்கள் இதுவொரு மூட நம்பிக்கை என்கிறார்கள். இதனை நிரூபிக்க தங்களுக்குள் ஒரு ஜோடியை தேர்வு செய்து திருமணம் செய்வது போல் நாடகமாடுகிறார்கள். அதன் மூலம் தங்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று அந்த ஊர் மக்களை நம்ப வைக்கிறார்கள்.

அதை நம்பும் கிராம மக்கள் தங்கள் ஊர் ஜோடி ஒன்றுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், திருமணமான புதுமண தம்பதிகள் அன்றிரவே  கொலை செய்யப்படுகிறார்கள்.

கொலை எப்படி, ஏன் நடக்கிறது, கொலையாளி யார்?  என்பதை கல்லூரி மாணவர்கள்  கண்டுபிடித்தார்களா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தில் அனைவரையும் விடவும் நடிப்பில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் நாயகியாக நடித்திருக்கும் ரக்‌ஷா ராஜ்தான். தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும்வகையில் அளவான உடலமைப்புடன் அழகாகக் காட்சியளிக்கிறார். நடிப்பிலும் துடிப்பினைக் காட்டியிருக்கிறார்.

அம்மனுடன் அவர் பேசும் வீர ஆவேச வசனக் காட்சிகளில் தன்னை மறந்து ஸ்கிரீனை பார்க்க வைத்திருக்கிறார். காதல் காட்சிகளில் நளினத்தைக் காட்டியும், ஊர்க்காரர்களிடத்தில் கோபத்தைக் காட்டியும், பாட்டியிடம் பாசத்தைக் காட்டியும், காதலனிடம் செல்லக் கோபத்தைக் காட்டியும் பல்வேறுவிதமாகவும் சிறப்பாக நடித்து படத்தை பார்க்க வைக்கிறார் நாயகி.

இரண்டாவது இடத்தைத் ஊர்ப் பெரிய மனிதராக நடித்திருக்கும் தவசி பிடித்திருக்கிறார். பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவரைப் போல ஒரு நிமிடம்கூட அதிலிருந்து விலகாமல் நடித்திருக்கிறார்.

மேலும், நாயகியின் பாட்டி மற்றும் நாயகியின் உறவுக்காரரான நிக்கோலஸ், வில்லன் மாசி போன்றோரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு நடிப்புக்கென்று தனி ஸ்கோப் இல்லாததால் அவர்களின் நடிப்பு பெரிதாகத் தென்படவில்லை. அம்மனாக நடித்திருந்த கெளசல்யா தனது மென்மையான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பின்புதான் படமே என்று சொல்வதைப் போல படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, நடிப்பு என்று அனைத்துமே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு சிறப்போ சிறப்பு. நாயகியையும், அந்தப் பகுதியையும் அவ்வளவு அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இசை ஸ்ரீசாய் தேவ். பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையில்தான் வழமையான பேய்ப் படங்களின் சூறாவளி இசையை நிமிடத்திற்கு நிமிடம் போட்டிருக்கிறார்.

இடைவேளைக்கு முன்பு சற்று மந்தமாக இருக்கும் திரைக்கதை இடைவேளைக்குப் பின்பு தெறிக்க விட்டிருக்கிறது.

குறைந்த பட்ஜெட் படம் என்பது தெரிந்தாலும் காட்சிப்படுத்தலில் கிராபிக்ஸில் ஓரளவு ஜிகினா வேலையைச் செய்து படமாக்கியிருக்கிறார்.

கதையில் சில குழப்பங்களும் உண்டு. எத்தனையாண்டுகளாக அந்த ஊரில் கல்யாணம் நடக்கவில்லை. நாயகி-மாசி மோதல் எத்தனையாண்டுகளுக்கு முன்பாக அந்த ஊரில் நடந்தது என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.

பிளாஷ்பேக் காட்சிகளிலும் பாட்டியும், மாசியும், நிக்கோலஸும் ஒன்று போலவேதான் இருக்கிறார்கள். வருட வித்தியாசங்கள் அவர்களிடத்தில் காட்டப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

பேய்ப் படங்களில் லாஜிக் பார்க்கவே கூடாது என்பதால் இந்தப் படத்தை விட்டுவிடுவோம். வித்தியாசமான கதை, திரைக்கதையில்தான் இந்த உத்ரா உருவாகியிருக்கிறது என்றாலும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் படம் ‘சிறப்பு’ என்றே சொல்லியிருக்கலாம்..!

RATING : 2.5 / 5

Our Score