full screen background image

ரெட் லேபிள் – சினிமா விமர்சனம்

ரெட் லேபிள் – சினிமா விமர்சனம்

இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் RED LABEL(ரெட் லேபிள்).

REVGEN ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லெனின் இந்தப் படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக அஸ்மின் யாசர் நடிக்கிறார். மேலும் ஆர்.வி.உதயகுமார், முனீஸ்காந்த், அனுமோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

Banner: REVGEN FILM FACTORY, Written by: Pon Parthiban, Directed by: K.R. Vinoth, Produced by: Lenin, Music Director: Kailas Menon, Singers : Chinmayi sripada, Velmurugan, Kavitha gopi, Cinematographer : Sathish Maiappan, Editor: Lawrence Kishore, Art: Pragadheeswaran, Fight Choreographer: Phantom Pradheep, Publicity Design: Sri Aravind kesavan (SAK STUDIO), Pro: Sridhar Raju, Udaya Kumar, Hari Babu.

இதுவும் ஒரு கல்லூரி காலத்து கதைதான். ஆனால் காதல் மோதல் என்றில்லாமல் கூடவே ஒரு கொலையையும் காட்டி சஸ்பென்ஸ், திரில்லராக படமாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோவான லெனின் கோவையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பல சம்பவங்களை செய்திருக்கிறார்.

லெனின் அந்தக் கல்லூரியில் இருந்து படித்து, முடித்து வெளியில் வந்த பொழுது அவர் மேல் இரண்டு வழக்குகளும் போடப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளை இப்போதும் சந்தித்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ லெனின்.

இப்போது அதே கல்லூரியில் சட்டமன்ற உறுப்பினரான ஆர்.வி.உதயகுமாரின் மகன் அஜய் படித்து வருகிறார். ஆனால், அதிகம் படிக்காமல் தேர்வில்கூட புத்தகத்தை வைத்து காப்பியடிக்கும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். இதை எதிர்க்கும் பெண் பேராசிரியரை கட்டிப் பிடித்து அவமானப்படுத்துகிறார். இதை கண்டித்துதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவரான தருண், அஜய்யை எதிர்த்து பேசுகிறார். எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்.

இந்த நேரத்தில் அந்தக் கல்லூரியில் மாணவர் பேரவைக்கு தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் எம்.எல்.. மகனான அஜய்யை எதிர்த்து நிற்க தருணை தூண்டுகிறார்கள் அந்த கல்லூரியின் பேராசிரியர்கள்.

தருண் தன்னுடைய குடும்ப சூழ்நிலையையும், தன்னிடம் பணம் இல்லாத நிலையையும் சொல்லி தப்பிக்க பார்க்க, அதற்கு உதவி செய்வதற்காக இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான ஹீரோ லெனினை அழைத்து அவர் தலையில் தருணைக் கட்டுகிறார்கள்.

அஜய்யை திலாக எதிர்கொள்ளும் லெனின் தருண் ஜெயிப்பதற்கான அத்தனை வேலைகளையும் கல்லூரியில் இருந்து கொண்டே செய்கிறார்.

இன்னொரு பக்கம் அந்த எம்.எல்..வின் மகளான ஹீரோயின் அஸ்மினும் அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரை லெனின் காதலித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காதலுக்கு எம்.எல்.. அனுமதி கொடுக்காமல் தானும் மனைவியும் தற்கொலை செய்து கொள்ள கொள்வோம் என்று மகள் அஸ்மினை மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் அஸ்மின் அப்பா சொல்லும் மாப்பிள்ளையை மணந்து கொள்ள சம்மதிக்கிறார். இதையடுத்து ரவுடியிஸம் செய்து வரும் வில்லனுக்கு அஸ்மினை திருமணம் செய்து கொடுப்பதாகச் சொல்லி திருமண நிச்சயதார்த்தமும் முடிகிறது.

இந்த நேரத்தில் கல்லூரியின் ஆண்டு விழா அன்று நடந்த ஒரு குழப்பத்தில் அஸ்மினை திருமணம் செய்யவிருந்த அந்த ரவுடி லெனினால் கொலை செய்யப்படுகிறார். தேர்தல் முடிந்து தேர்தலில் லெனின் ஆதரித்த தருண் ஜெயித்துவிட்டாலும் இந்தக் கொலை சம்பவம் அவர்களின் சந்தோஷத்தை கெடுக்கிறது.

இதற்கு பின்பு என்ன நடக்கிறது? கொலை செய்ததால் லெனின் சிறைக்கு சென்றாரா? அல்லது தப்பித்தாரா..?

என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இடைவேளைக்கு பின்பு படத்தின் கதையை சஸ்பென்ஸ், திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.

அறிமுக நடிகரான லெனின் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும்கூட. கல்லூரி மாணவராகவும், அங்கிருந்து வெளியில் வந்திருக்கும் இளைஞராகவும் இருவித கேரக்டர்களையும் அழகாக செய்து இருக்கிறார். ஆனால், படத்தில் ஹீரோவின்  ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அவர் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் திரைக்கதையும் நகர்ந்து இருக்கிறது என்பது சற்று வருத்தமான ஒரு விஷயம்.

மாணவர்களுக்கிடையிலான போட்டி, பொறாமை.. அரசியல் வியாதிகள் தலையீடு, அரசியல் பிரமுகர்கள் எந்த இடத்திலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வார்கள் என்பது போன்ற சம்பவங்களை வைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குர்.

முதலில் இருந்து கடைசிவரையிலும் லெனின்தான் ஹீரோ என்பதை நிரூபிப்பது போலவே காட்சிகள் அமைக்கப்பட்டு அவர் பேசுகின்ற வசனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அவரே அதிக நேரம் திரையில் வந்திருக்கிறார்.

ஹீரோயினாக நடித்திருக்கும் அஸ்மின் ஒரு பக்கம் பார்த்தால் நடிகை பாயல் ராஜ்புத் போலவே தோற்றமளிக்கிறார். கொஞ்சம் அழகுதான். கேமராவுக்கு ஏற்ற முகம்தான். தன்னுடைய காதல் நடிப்பை கொஞ்சமாக வைத்துவிட்டு அப்பா, அம்மாவுக்கு காதல் தெரிந்தவுடன் அவர்களின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து ஒரு ரவுடியை திருமணம் செய்ய போகும் சூழலில் தன்னுடைய முகபாவத்திலேயே பலவித நடிப்பையும் காட்டி இருக்கிறார்.

முக்கியமான நேரத்தில் எம்.எல்..வின் மகள் என்கின்ற அந்த பெயரை வைத்து தன்னுடைய காதலனுக்கும் அவர் சார்ந்த நண்பர்களுக்கும் உதவி செய்யும் வகையில் இவருடைய கதாபாத்திரம் கச்சிதமாக அமைந்திருக்கிறது.

எம்.எல்..வாக நடித்திருக்கும் ஆர்.வி.உதயகுமார் சிரித்து சிரித்தே தன்னுடைய வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார். அதேபோல் நாயகியின் காதலை உடைப்பதற்காக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு குச்சித்திர நடிப்பை காண்பித்து காதலை கெடுக்கின்றபோது வில்லத்தனத்தை சரியாகச் செய்திருக்கிறார். எம்.எல்.ஏ கூடவே வரும் அவரது செகரட்டரி அனு மோகன், கொங்கு வட்டார பாஷையிலே பேசி கொஞ்சம் கலகலப்பாக்கி இருக்கிறார்.

மேலும் இன்ஸ்பெக்டராக நடித்தவரும், அடிக்கடி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சைக்காலஜி பேராசிரியரும் திரைக்கதையை நகர்த்த பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் சஸ்பென்ஸ் திரில்லராக போகக் கூடிய ந்தப் படத்தில் லஞ்சம் என்பது எங்கெல்லாம் செல்கிறது என்பதை காட்டுவதுபோல தயவியல் நிபுணர்களும் அந்த லஞ்சத்தில் திளைக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குர்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன் கல்லூரி காட்சிகளையும் மாணவர்களின் கூட்டம் கல்லூரியில் நடைபெறும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று அனைத்தையுமே கலர்ஃபுல்லாக பதிவாக்கி இருக்கிறார்.

ஹீரோ, ஹீரோயின், மற்ற அனைவரையும் வசன காட்சிகளில் மிக அழகாக வித்தியாசமான கோணத்தில் படமாக்கி காட்டியிருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

திடீர் திடீரென்று வரும் பாடல் காட்சிகள் நமக்கு திகைப்பைக் கொடுத்தாலும் பாடல் வரிகள் ஒரு முறை மட்டுமே கேட்பது போல அமைந்துவிட்டது. ஆனால் பின்னணி இசையில் இந்தப் படத்தின் கதைக்கு தேவையான அளவுக்கான இசையை வழங்கி இருக்கிறார் இசை அமைப்பாளர் கைலாஷ் மேனன்.

படத் தொகுப்பாளரான லாரன்ஸ் கிஷோர் படத்தின் இடைவேளைக்கு பின்பான காட்சிகளை சஸ்பென்ஸ் திரில்லராக நகருகின்ற வகையில் அழகாக படத் தொகுப்பு செய்து கொடுத்திருக்கிறார்.

ஒரு கல்லூரி, அதற்குள் இருக்கும் மாணவர்களின் மோதல், தேர்தல், வெளியில் இருந்து வரும் அரசியல் அழுத்தம், அரசியல் வியாதிகளின் தலையீடு என்ற அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மிகுந்த சுவாரசியத்துடன் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் எழுத்தாளர் பொன். பார்த்திபனை பாராட்டுகிறோம்

சஸ்பென்ஸ், திரில்லரை கடைசிவரையிலும் அப்படியே கொண்டு சென்று, இறுதியில் நமக்குக் கொஞ்சம் கோபத்தையும் உண்டாக்கிவிட்டார் பொன்.பார்த்திபன்.

இந்தப் படத்தின் கதை நிச்சயம் தவறான ஒரு கதைதான். தவறான ஒரு கதையில் நடிப்பு, இயக்கம் இரண்டுமே மிகச் சிறப்பாக இருக்க நாம் ஒரு கேள்வியோடுதான் எழுத்து வர வேண்டி இருக்கிறது.

எதிர்பாராமல் நடந்த சம்பவம் கொலையாகிவிட்டாலும் அதை நியாயப்படுத்துவது போல கொலையையே மூடி மறைக்கின்ற திரைக்கதையை கதாசிரியரும், இயக்குநரும் சேர்ந்து கொடுத்திருப்பது நிச்சயம் ஏற்கத்தக்கது அல்ல.

இப்போதைய இளைஞர் சமுதாயம் சினிமாவை இன்னொரு பள்ளிக்கூடமாகவும், கல்லூரி ஆகவும் பாவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எதிர்பாராமல் செய்தாலும் தவறு தவறுதான். கொலை கொலைதான். அதை மூடி மறைக்கும் திரைக்கதை நிச்சயம் தவறு என்பதை கதாசிரியர் சொல்லியிருக்க வேண்டும். சொல்லாமல் விட்டதினால் கதாசிரியருக்கும், இயக்குநருக்கும் நமது கண்டனங்கள்.

சஸ்பென்ஸ், திரில்லர் வகையில் இந்தப் படம் ஓகேதான் என்றாலும் நாம் முன்பே சொன்ன கதையின் மையக் கரு தவறாக இருந்தாலும். இயக்குர் கே.ஆர்.வினோத் நடிகர், நடிகைகளை மிக அழகாக நடிக்க வைத்து மற்றைய தொழில் நுட்பத்தின் உதவியோடு இந்தப் படத்தின் இரண்டாம் பகுதியை மிக அழகாக நகர்த்தி பெரிதும் ரசிக்கும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார்.

ரெட் லேபிள் – ஒரு முறை பார்க்கலாம்தான்!

RATING : 3 / 5

Our Score