full screen background image

சென்னை உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘மழையில் நனைகிறேன்’ தமிழ்த் திரைப்படம்

சென்னை உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘மழையில் நனைகிறேன்’ தமிழ்த் திரைப்படம்

ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார்,  ஸ்ரீவித்யா ராஜேஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் மழையில் நனைகிறேன்’.

இந்தப் படத்தில் அன்சன் பால், ‘பிகில்’ படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான், சங்கர் குரு’ ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

விஷ்ணு பிரசாத் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். இவர்  ஏ.ஆர்.ரகுமான் பள்ளியில் பயின்றவர். ஒளிப்பதிவு – கல்யாண்,   படத் தொகுப்பு -வெங்கடேஷ். இயக்குநர் விஜி, கவின் பாண்டியன் இருவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். இயக்குநர் டி.சுரேஷ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

எதார்த்தமான வாழ்வியலுடன் அழகான காதலை சொல்லும் இப்படம் தற்போது 2021 சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘மழையில் நனைகிறேன்’ படம் பற்றி இயக்குநர் டி.சுரேஷ்குமார் பேசும்போது, “எஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும், படித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும், ஒரு கிறிஸ்தவ இளைஞனுக்கும், ஏற்படும் காதலும் அதன் விளைவுகளுமே, இந்தப் படம்.

காதலில் ஒரு  பிரச்னை வரும்போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. அல்லது காதலர்களின் பெற்றோர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. அது பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. படத்தில் சண்டைக் காட்சி இருந்தாலும் வில்லன் என்று யாரும் இல்லை.

படத்தில் நாயகியின் அறிமுக காட்சியும், இறுதிக் காட்சியும் மழை பெய்யும் நேரத்தில் நடக்கும். அதனால்தான் படத்துக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்குமென வைத்தோம்.

தற்போது படம் உலகத் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நிச்சயமாக எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும்…” என்றார்.

தயாரிப்பாளர் பி.ராஜேஷ்குமார் பேசும்போது, “படத்தின் கதையை இயக்குனர்  என்னிடம் சொன்னவிதமும், குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியும் என்னை மிகவும் கவர்ந்தது. அதனால்தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன். இது குடும்பத்தோடு எல்லோரும் பார்க்க வேண்டிய படம்…” என்றார்.

Our Score