full screen background image

ரஜினியின் வாழ்த்தோடு வெளியாகும் ‘மழையில் நனைகிறேன்’ திரைப்படம்!

ரஜினியின் வாழ்த்தோடு வெளியாகும் ‘மழையில் நனைகிறேன்’ திரைப்படம்!

ராஜ்ஸ்ரீ வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ராஜேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’.

இந்தப் படத்தில் நாயகனாக அன்சன் பால் நடிக்க, நாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் ‘சங்கர் குரு’ ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

இயக்குநர் விஜி மற்றும் கவின் பாண்டியன் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்ய, ஜி.பி.வெங்கடேஷ் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான பி.ராஜேஷ் குமார் தீவிர ரஜினி ரசிகர். முத்து படம் வெளியானபோது, ரஜினி முத்து படத்தில் போட்டிருந்த அதே கெட்டப்புடன், கையில் சாட்டையுடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்தாராம். அந்த அளவுக்கு ரஜினிகாந்தின் ரசிகராக இருக்கும் இவரைப் பற்றி ரஜினிகாந்திடம் நண்பர் ஒருவர் சொல்ல, உடனே அவர் தயாரித்திருக்கும் ‘மழையில் நனைகிறேன்’ படத்திற்கு வாழ்த்து கூறியதோடு, அந்த வீடியோவை படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் ரஜினிகாந்த் அனுமதி வழங்கியிருக்கிறார்.

ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகே அப்படம் குறித்து பாராட்டு தெரிவிக்கும் ரஜினிகாந்த், வெளியீட்டுக்கு முன்பே ஒரு படம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டிருப்பது திரையுலகினரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. அதிலும், அறிமுக தயாரிப்பாளர் மற்றும் அறிமுக கலைஞர்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்திருப்பது பெரும் ஆச்சரியம்தான்.

படம் குறித்து இயக்குநர் டி.சுரேஷ் குமார் கூறுகையில், “இது முழுக்க முழுக்க காதல் கதைதான். நாயகியை நாயகன் ஒருதலையாக காதலிக்கிறார். அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கும் நாயகி காதலை நிராகரித்து விடுகிறார். அவர் நிராகரித்தாலும், அவர் மனதில் என்றாவது ஒருநாள் காதல் மலரும். அதுவரையிலும் நான் காத்திருப்பேன் என்று சொல்லி நாயகன் காதலிக்காகக் காத்திருக்கிறார். அவரது காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா? அல்லது நாயகியின் அமெரிக்க கனவு பலித்ததா? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

காதல் கதை என்பதால், ஹீரோயினுக்கு நாயகன் காதல் தொல்லை கொடுப்பது போன்றோ அல்லது காதலிக்கு தொந்தரவு குடுப்பது போன்றோ காட்சிகள் இந்தப் படத்தில் இருக்காது. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு காதல் பீல் குட் மூவியாக இருக்கும்.” என்றார்.

தயாரிப்பாளர் பி.ராஜேஷ் குமார் படம் குறித்து பேசும்போது, “இயக்குநர் சுரேஷ் என் தம்பியுடன் படித்தவர் என்பதால் அவர் என்னிடம் கதை சொன்னார். நானும் அவருக்காக சில தயாரிப்பாளர்களை அணுகினேன். சில காரணங்களால் அவர்களால் படம் தயாரிக்க முடியாமல் போனதும், அப்போதுதான் நானே தயாரிக்க முன் வந்தேன்.

இது ஒரு அழகான காதல் கதையாக மட்டும் அல்லாமல் குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக இருக்கும். எந்த இடத்திலும், எந்தவித நெருடலும் இல்லாமல் படம் பயணிக்கும்.

ரஜினி சார் என் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருப்பது கடவுளின் ஆசி போன்றது. நான் அவருடைய வெறித்தனமான ரசிகன்.  நான் தயாரித்த படத்திற்கு அவரது வாழ்த்து கிடைத்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது…” என்றார்.

நாயகன் அன்சன் பால் கூறுகையில், “’ரெமோ’ படத்தின் மூலம்தான் நான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானேன். இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். என் கதாபாத்திரத்திற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அதை நன்றாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.” என்றார்.

நடிகை ரெபா மோனிகா ஜான் கூறுகையில், “இத்திரைப்படம் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும். படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக இருக்கிறது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி, அவரது வாழ்த்தோடு வெளியாக இருக்கும் இந்த ‘மழையில் நனைகிறேன்’ திரைப்படம், ரசிகர்களை நிச்சயம் காதல் மழையில் நனைய வைக்கும் என்று படக் குழு உறுதியளிக்கிறது.

Our Score