‘தனுசு ராசி நேயர்களே’ – சினிமா விமர்சனம்

‘தனுசு ராசி நேயர்களே’ – சினிமா விமர்சனம்

ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ‘கோகுலம்’ கோபாலன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகி பாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் முனீஸ்காந்த், பாண்டியராஜன், சார்லி, ரேணுகா, மயில்சாமி, சங்கிலி முருகன், டேனியல் ஆனி போப், டி.எஸ்.கே., கும்கி அஸ்வின், ஹரிதா, சம்யுக்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – குபேந்திரன், கலை இயக்கம் – உமேஷ், குமார், பாடல்கள் – விவேகா, மதன் கார்க்கி, விக்னேஷ் சிவன், கு.கார்த்திக், சந்துரு, வசனம் – எம்.ஆர்.பொன்.பார்த்திபன், ஆடியோகிராபி – டி.உதயக்குமார், நடன இயக்கம் – கல்யாண், எம்.ஷெரீப், ஆடை வடிவமைப்பு – ஜி.அனுஷா மீனாட்சி, நிர்வாகத் தயாரிப்பு – வி.மணிகண்டன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, கதை, திரைக்கதை, இயக்கம் – சஞ்சய் பாரதி. நேரம் – 2 மணி 1 நிமிடம்.

இந்தப் படத்தின் இயக்குநரான சஞ்சய் பாரதிக்கு இது முதல் திரைப்படமாகும். இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுசு ராசி, மூலம் நட்சத்திரத்தை ஜாதகமாகக் கொண்ட நாயகன், கன்னி ராசி உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் அவனது வாழ்க்கை ஓஹோவென இருக்கும் என்று ஜோதிடர் சொன்னதை நம்புகிறான். இதனால் கன்னி ராசி உள்ள பெண்களைத் தேடியலைகிறான்.

பெண் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழுகிறது. அப்படியே கன்னி ராசியில் கிடைத்தாலும் செவ்வாய் தோஷம் போன்று தோஷமுள்ள பெண்கள்தான் சிக்குகிறார்கள். இந்தக் குழப்பத்தில் யாரையாவது காதலித்தாவது கல்யாணத்தை முடிக்க நினைக்கிறார் நாயகன். இதன் பின் விளைவுகள் என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

சுருக்கமாக, காதலைவிடவும் அதி தீவிரமாக ராசியை மட்டுமே நம்பும் ஒரு இளைஞனின் வாழ்வில்… இதனால் ஏற்படும் பிரச்சினைகளையும், அதனைத் தொடர்ந்த அதிரடி  சம்பவங்களையும் காமெடியாக சொல்லியிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் பல இடங்களில் காமெடியைத்தான் காணவில்லை.

கும்பகோணத்தில் கணவரை இழந்த நிலையில் மெஸ் நடத்தி பிழைப்பை நடத்தி வருகிறார் பாண்டியம்மாள் என்னும் ரேணுகா. இவரது ஒரே தம்பி முனீஸ்காந்த். இன்னும் திருமணமாகவில்லை. பெரியார் பக்தர். ரேணுகாவின் ஒரே மகன் ஹரீஷ் கல்யாண்.

சின்ன வயதில் ஹரீஷின் அப்பா இறந்துபோக அந்த நேரத்தில் ஹரீஷின் தாத்தாவான சங்கிலிமுருகன் ஒரு ஜாதகப் பரிகாரம் செய்யாமல் போனதால்தான் அவனது தந்தை இறந்துபோய்விட்டதாக சொன்னது ஹரீஷின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது.

அன்றிலிருந்து தன்னை நம்புகிறாரோ இல்லையோ.. ஜாகதத்தையும், ஜோதிடர்களையும் அபாரமாக நம்புகிறார். இப்போது கல்யாண வயதுக்கு வந்த பின்பு அவரது முதல் காதல், குடிபோதையில் இவர் செய்யும் ஒரு ‘ஜொள்ளு’ வேலையால் காணாமல் போகிறது.

அடுத்தக் கல்யாணத்திற்கு ஜாதகம் பார்க்கும்போது கன்னி ராசியில் பிறந்த பெண்ணை மணந்தால்தான் ஹரீஷின் வாழ்க்கை ஓஹோவென இருக்கும் என்று நான்கைந்து ஜோதிடர்கள் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் பற்ற வைக்கிறார்கள்.

இதனை உண்மை என்று நம்பும் ஹரீஷ் தனது எதிர்கால மனைவியை கன்னி ராசியில் பிறந்த பெண்ணாக தேடத் துவங்குகிறார். யாரும் கிடைக்கவில்லை. அவர் வேலை பார்க்கும் இடத்திலேயே ஒரு பெண் ஹரீஷை தீவிரமாகக் காதலிக்கிறார். ஆனால் அந்தக் காதலைக்கூட தள்ளி வைத்துவிட்டு கன்னி ராசி பெண்ணைத் தேடுகிறார்.

இந்தத் தேடுதலின் இடையில் தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்காக பெங்களூர் செல்கிறார் ஹரீஷ். அந்தக் கல்யாணத்தின்போதுதான் நாயகி டிகங்கனா சூர்யவன்சியை சந்திக்கிறார். சந்தித்த அந்த இரவிலேயே இருவருக்குள்ளும் கசமுசா நடந்துவிடுகிறது. அவரும் கன்னி ராசி என்பதை அறிந்து மிகப் பெரிய சந்தோஷமாகிறார் ஹரீஷ். டிகங்கனாவைக் ஒரு தலையாய் காதலிக்கத் துவங்குறார் ஹரீஷ்.

ஆனால் டிகங்கனாவோ விண்வெளி ஆராய்ச்சி மாணவி. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதே எனது லட்சியம் என்று அடித்துச் சொல்கிறார். ஆனால் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் கன்னி ராசி பெண்ணைக் கைவிட ஹரீஷுக்கு மனமில்லை. கடைசியில் இவர்கள் இருவரில் யாருடைய ஆசை வென்றது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஹரீஷ் கல்யாணுக்கு முந்தைய படங்களைவிடவும் அதிகமாக நடிப்பதற்கான வாய்ப்புகள் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. நடிக்கவும் செய்திருக்கிறார். இல்லையென்று சொல்லவில்லை. ஆனாலும் ரசிகர்களைக் கவர்வதற்கு இது ஒன்று மட்டுமே போதவில்லை. ஏதோ ஒன்று குறைகிறது.

வேறு, வேறு கதாபாத்திரங்களில் நடித்து நடிப்புத் திறமையைக் காண்பிப்பதுதான் இந்தத் தமிழ்ச் சினிமாவில் நீடித்து நிலைத்து நிற்க இருக்கும் ஒரே வழி. ஆடல், பாடல், துள்ளல் எல்லாம் இருந்தாலும் பார்த்தவுடன் உற்சாகம் வரும் அளவுக்கு எதுவும் இல்லையேப்பா..!

நாயகி டிகங்கனா.. கேமிராவுக்கேற்ற முகம். அளவெடுத்தது போன்ற உடற்கட்டு. வாய்ப்புக் கிடைத்தால் ரவுண்டு வரலாம். நடிப்புத் திறமையும் இருக்கிறது.  கடைசியாக ஹரீஷை பார்த்து குட் பை சொல்லும் காட்சியில் தன் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். அதே காட்சியில் நாயகி அளவுக்குக்கூட தனது நடிப்பைக் காண்பிக்க முடியாமல் தோல்வியடைந்துவிட்டார் ஹரீஷ். இயக்குநர்தான் என்ன செய்வார்..?

முனீஸ்காந்தின் கேரக்டர் ஸ்கெட்ச்சை சொதப்பிவிட்டார் இயக்குநர். ‘அவர் தீவிர பெரியார் பக்தர்’ என்று சொல்லிவிட்டு பிரியாணிக்கு அலைபவர் என்று சொல்வதெல்லாம் உள்குத்தால்ல இருக்கு. அதோடு தாய் மாமா லெவலுக்கு அவர் யோசிக்காமல்.. கடைசி நேரத்தில் அட்வைஸ் மழை பொழிவதெல்லாம் லேட்டான அறிவுரை இயக்குநரே..!

இன்னொரு நாயகி ரெபா மோனிகாவும் படத்தில் இருக்கிறார். நடித்திருக்கிறார். அவ்வளவுதான். அம்மாவாக ரேணுகா.. சில காட்சிகளில் வந்து செல்கிறார்.

மயில்சாமி வரும் காட்சிகள் தேவையே இல்லாதது. ஏன் இயக்குநரே உங்க புத்தி இப்படி போகுது.. அந்த அசிங்கக் காமெடி தேவைதானா..? அதோடு பல இடங்களில் ஒலிக்கும் இரட்டை அர்த்த வசனங்களையும் நீக்கியிருக்க வேண்டும்.. குடி போதையில் தனது காதலி போலவே இருக்கிறார் என்றெண்ணி வேறொரு பெண்ணைக் கட்டிப் பிடிக்கும் காட்சியெல்லாம் அரதப் பழசு.

படத்தில் நாயகியின் பெயர் கே.ஆர்.விஜயா. நல்லவேளை நாயகியை மட்டும் சேதம் செய்யாமல் விட்டிருக்கிறார் இயக்குநர். இல்லையென்றால் இந்த ஒரு பெயருக்காகவே இந்நேரம் கூடுதல் குத்துக்களை வாங்கியிருப்பார் இயக்குநர்.

சார்லி வழக்கம்போல தனது இயல்பான நடிப்பினால் அந்தக் கேரக்டரை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார். “ஜாதகத்தை நம்பித்தான் கல்யாணம் செஞ்சு வைச்சேன். இப்போ இப்படி ஆகிப் போச்சே…” என்று அவர் கதறுவதுதான் நாயகினின் மனதை மாற்றுவதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ‘ஏதோ ஒரு அடி கிடைத்தால்தான் ஒரு பிடிமானம் நம்மிடமிருந்து கீழே விழும்’ என்பார்கள். அதற்கு இந்தத் திரைக்கதை சரியான காட்சிகள்தான்.

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த பம்பர் பரிசு. பாடல் காட்சிகளிலும், வெளிப்புறக் காட்சிகளிலும் பிரேம் பை பிரேம் அழகைக் கூட்டியிருக்கிறது. ஆடை அலங்காரத்தைக் கவனித்த ஜி.அனுஷா மீனாட்சிக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. நாயகன், நாயகி இருவரின் உடைகளும் ஜலீர் ரகம்..!

ஜிப்ரானின் இசையில் ஐந்து பாடல்களும் கேட்கும் ரகம். பாடல் வரிகள் மிக எளிமையாக கேட்பதுபோல இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். பாராட்டுக்கள். ஆனால் தொடர்ந்து கேட்பதுபோல இசையின் ராகம் அமையவில்லை என்பது வருத்தமானது.

ஜாகதத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. அது ஒரு நம்பிக்கைக்கான ஒரு படிக்கல் மட்டுமே என்னும் விஷயத்தை படத்தின் இறுதியில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.

அதேபோல் ஒரு பெண் ஆண்களே முன் வராத ஒரு விண்வெளித் திட்டத்திற்கு தயார் நிலையில் இருக்கும்போது அந்தப் பெண்ணை பாராட்டி, ஊக்குவிப்பதுதான் தற்போது நமது கடமை என்பதையும் இந்தப் படத்தின் திரைக்கதையில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே இந்த இயக்குநரை மனதாரப் பாராட்டலாம். சிறப்பான இயக்கம்தான் செய்திருக்கிறார். எந்த நடிகர், நடிகையரும் சோடை போகவில்லை. யாரும் நடிக்காமல் ச்சும்மா இல்லை. இயக்குநர் சந்தான பாரதியின் மகன் என்பதை நிரூபித்திருக்கிறார். பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!

ஆனால், நல்லாயிருந்த சீனி மிட்டாய்ல எறும்பு மொய்த்ததுபோல சில அநாகரீகமான காட்சிகளையும், வசனங்களையும் திணித்திருப்பதுதான் படத்தின் தன்மைக்கு சங்கு ஊதிவிட்டது..!

அடுத்தடுத்த படங்களில் இந்தக் குறைபாடுகளைக் களைந்து சிறந்த இயக்குநராக வர இயக்குநர் தம்பி சஞ்சய் பாரதியை மனதார வாழ்த்துகிறோம்..!

Our Score