full screen background image

மழையில் நனைகிறேன் – சினிமா விமர்சனம்

மழையில் நனைகிறேன் – சினிமா விமர்சனம்

Rajsree Ventures  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் B.ராஜேஷ் குமார் மற்றும் வித்யா ஆகியோர்  இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் மழையில் நனைகிறேன்.’

இந்தப் படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளனர். மேலும், ஷங்கர் குருராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – J.கல்யாண், இசைவிஷ்ணு பிரசாத், படத் தொகுப்பு – G.B.வெங்கடேஷ், கலை இயக்கம் – N.மகேந்திரன், பாடல்கள்லலிதானந்த், முத்தமிழ், உடை வடிவமைப்புவித்யா ராஜேஷ், சண்டை இயக்கம் – T.ரமேஷ், புகைப்படங்கள் – P.M.கார்த்திக், வசனம்விஜி, கெவின் பாண்டியன், கதை, திரைக்கதை, இயக்கம்டி.சுரேஷ் குமார்.

இந்த ‘மழையில் நனைகிறேன்திரைப்படம் அதன் தலைப்பைப் போலவே கவிதை போன்ற காதலை சொல்லும் படைப்பாக உருவாகியிருக்கிறது.

உலக வரலாற்றில் தோல்வியடைந்த காதல் கதைகள்தான்  வெகு பிரபலம்.  காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக் கதைகளாக உலா வருகிறது. அதேபோல் இப்படத்திலும் ஒரு வித்தியாசமான சோக முடிவை வைத்திருக்கிறார் இயக்குநர்.

நாயகன் மிகப் பெரிய பணக்கார குடும்பத்தில் ஒரே பிள்ளை. அவருடைய அப்பா மிகப் பெரிய ஃபேக்டரியை நடத்தி வருகிறார். பணத்திற்கு பஞ்சமில்லை. ஆனால், நாயகன் தன்னுடைய கல்லூரி படிப்பையே இன்னும் முடிக்கவில்லை. அதைப் பற்றிய கவலையே இல்லாமல் அம்மா தினமும் கொடுக்கும் பணத்தை வைத்து ஜாலியாக பைக்கில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் ஒரு இடத்தில் நாயகியைப் பார்க்கிறார். பார்த்தவுடன் வழக்கம்போல காதல்..! நாயகியைப் பின் தொடந்து சென்னை அவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார் நாயகன். ஆனால் நாயகியோ தான் லண்டன் சென்று படிக்க இருப்பதாகச் சொல்கிறார். அவருக்கு நாயகன் மீது காதல் வரவில்லை.

ஆனாலும் நாயகன் விடவில்லை. விடாமல் அவரை பின் தொடர்ந்து வற்புறுத்தி கடைசியில் நாயகியை காதலுக்கு சம்மதிக்க வைக்கிறார்.

ஆனால் இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றோருமே சம்மதிக்கவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் இந்து, கிறிஸ்டின் கல்யாணம் என்பதால் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டு தனிக்குடித்தன வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

இதுவரையிலும் வேலைக்குப் போவது என்றால் என்னவென்றே தெரியாத நாயகன், இப்போது வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மா, அப்பா ஆதரவில் எந்த கவலையும் இல்லாமல் இருந்த நாயகிக்கு, தானே ஒரு குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும் என்ற நிலைமை. இப்போது இருவரும் இணைந்து குடும்பம் நடத்த துவங்குகிறார்கள்.

இதன் பின்பு என்ன நடக்கிறது?.. அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்தார்களா..? இரு தரப்புப் பெற்றோரும் சமாதானமானார்களா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஹீரோவாக நடித்திருக்கும் ஆன்சன் பால் பணக்கார தோற்றத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாத, ஜாலியான கேரக்டருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறார். எந்தக் கவலையும் இல்லாமல் அப்பாவின் சம்பாத்தியத்தில் சாப்பிடுகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல், அம்மாவின் அன்பில் திளைத்து வாழ்வதை தனது நடிப்பில் காண்பித்திருக்கிறார்.

காதலியை விரட்டி, விரட்டி காதலிக்கும் போதும் தன்னுடைய காதல் உணர்வுகளை காண்பித்திருக்கிறார் அதே சமயம் கல்யாணத்திற்கு பின்பு தான் மாற வேண்டிய கட்டாயம் வந்தவுடன் இயல்பு நிலைமைக்கு மாறி, ஒரு சாதாரண ஆர்டிஓ ஆபீஸ் வாசலில் அமர்ந்து வேலை பார்க்கும்போது நமக்கே பிடித்துப் போகிறது.

ரொம்பவும் தன்மையாகப் பேசி நடித்திருக்கிறார் நாயகன். அதிலும் அவருடைய அப்பாவை அந்த இடத்தில் சந்திக்கும்பொழுது அவர் பேசுகின்ற பேச்சும், நடிப்பும் மிக மிக சிறப்பு.

நாயகி ரெபா மோனிகாவும் மிக அழகாக தோற்றமளிக்கிறார். சில கோணங்களில் ரொம்பவும் அழகாக காண்பிக்கப்பட்டிருக்கிறார். பாடல் காட்சிகளில் மிக அழகான நளினமாக அவருடைய தோற்றம் இருக்கிறது. அவருடைய அறிமுக கட்சியை ஒரு அசத்தலான ஒரு ஓவியம் என்றே சொல்லலாம்.

அவருடைய நடிப்பும் இந்த படத்தில் முக்கியம். படத்தின் பிற்பகுதியில் படத்தை அதிகம் தாங்கிப் பிடித்திருப்பது அவர்தான். “குடிக்காதன்னு சொல்லல.. ஆனா கொஞ்சம், கொஞ்சமா நிறுத்திடு. என்னிக்கு குடிக்க வேண்டாம்ன்னு தோணுதோ.. அன்னைக்கு நிறுத்திவிடு” என்று இந்தக் காலத்து இளைஞிகளுக்கு தேவையான அளவுக்கு பொருத்தமான ஒரு வசனத்தை இந்தப் படத்தில் பேசி தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார்.

இரு தரப்பு பெற்றோர்களாக நடித்தவர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள் அதிலும் தன்னுடைய மகனை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கும் ஹீரோவின் அப்பாவும், மகனை எப்போதும் எதுவும் சொல்லாமல் காப்பாற்றிக் கொண்டேயிருக்கும் ஹீரோவின் அம்மா அனுபமா குமாரும்  மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ரெபாவின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜாவின் கோபமான குணத்தையும் காட்டிவிட்டு, கடைசியாக போனில் மகளிடம் பேச முடியாமல் தவித்து நிற்கும் காட்சியில் மனதைத் தொடுகிறார். இவருடைய அழுகையை வைத்து “அப்பா” என்று மகள் ரெபா கண்டுபிடிக்கின்ற அந்தக் காட்சியும், இயக்குநரின் இயக்கத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

ஹீரோவின் நண்பனாக நடித்தவரும், மற்றவர்களும் மிகச் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்

படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ஒளிப்பதிவுதான். மீடியம் பட்ஜெட் படம் என்றாலும் ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லாமல் அட்டகாசமாக படமாக்கி இருக்கிறார்கள். பாடல் காட்சிகளிலும், நாயகனின் அரசு குடியிருப்பு வீடு, அதன் சுற்றுச் சூழல் பகுதிகளை எல்லாம் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். கூடவே நாயகியையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.

பாடல்கள் திரையில் ஒலித்திருக்கின்றன. ஆனால், அவைகள் நம்முடைய செவிகளுக்குள் நுழையவில்லை. பின்னணி இசையை கொஞ்சம் அடக்கமாக வாசித்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

படத்தில் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பாக கலர் தொகுப்பாளரும் கச்சிதமாக தன்னுடைய வேலையை செய்திருக்கிறார்.

படத்தின் முடிவில் மருத்துவமனையில் இருந்து ஓடி வந்து தன்னுடைய கணவரின் கல்லறையை பார்ப்பதோடு படத்தை முடித்து இருந்தால், நிச்சயமாக இந்தப் படம் நமக்கு ஒரு நல்ல ஃபீலிங்கை கொடுத்திருக்கும்.

ஆனால் அதற்குப் பின்பும் தேவையில்லாமல் ஒரு பாடல் கட்சியை வைத்து கொஞ்ச நஞ்சமிருந்த நம்முடைய பீலிங்கையெல்லாம் அடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டார் இயக்குநர். அதற்காக இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறோம்.

காதல், திருமணம், குடும்பத்தினர் எதிர்ப்பு, பிரிவு, குடும்ப வாழ்க்கை, அதற்கு பின்பு அவருடைய காதல் என்னவாகும்? அப்பொழுதும் அவர்களது காதல் அதேபோல் இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

இதுவும் அது மாதிரியான ஒரு திரைப்படங்களில் ஒன்றுதான். ஆனால், சோகமான முடிவை வைத்தால்தான் படம் ஜெயிக்கும் என்று எந்த மகாத்மா சொல்லிக் கொடுத்தாரென்று தெரியவில்லை..! இப்படியொரு சோகத்துடன் படத்தை முடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் வழமையான காதல் கதை படங்களில் தனியே கவனிக்க வைத்திருக்கிறது..!

RATING : 3 / 5

Our Score