full screen background image

காடு – சினிமா விமர்சனம்

காடு – சினிமா விமர்சனம்

தமிழ்ச் சினிமாவில் அடுத்தடுத்து மக்கள் விழிப்புணர்வு விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் புதிய இயக்குநர்கள். நகர்ப்புறங்களில் வாகனங்கள் வெளியிடும் ஆக்சைடை சுவாசித்தே நகர மக்களில் பெரும்பாலோர் வியாதிக்காரர்களாகவே ஆகிவிட்டார்கள். இப்போது கிராமப் பகுதிகளுக்கும் இதே நிலை வந்துவிடும் போலிருக்கிறது.

ஒரு மரத்தை அழிப்பதென்பது ஒரு மனித குடும்பத்தையே அழிப்பது போலாகும் என்கிற விழிப்புணர்வை இந்த 2000-ம் ஆண்டிற்கு பின்புதான் தமிழக மக்கள் அறிந்து வருகிறார்கள். காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கோஷம் பள்ளிகளையும் தாண்டி, மாணவர்களையும் தாண்டி,  அரசுகளையும் தாண்டி, அதிகார வர்க்கத்தையும் தாண்டி இப்போதுதான் கிராமங்களை எட்டியிருக்கிறது..

அந்த விழிப்புணர்வை இந்த திரைப்படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம்.. அவருக்கு நமது வாழ்த்துகள்..!

படிப்பறிவில்லாத இளைஞர் விதார்த்.. காட்டில் இருந்து விறகுகளை வெட்டிக் கொண்டு வந்து ஊரில் இருக்கும் கடைகளுக்கும், வீடுகளுக்கும் போட்டு அதில் பிழைப்பு நடத்தி வருபவர். அதே ஊரில் டீக்கடை வைத்திருக்கும் செட்டியாரான தம்பி ராமையாவின் மகளான பள்ளி மாணவியைக் காதலித்து வருகிறார்.

அந்தக் காட்டில் இருக்கும் தேக்கு, சந்தன மரங்களைக் கடத்தி விற்க ஒரு கும்பல் ஆந்திராவில் இருந்து வருகiறது. அவர்களின் வலையில் விதார்த் சிக்க மறுக்கிறார். அதே ஊரில் இருக்கும் கருணா என்ற வாலிபர் பாரஸ்ட் ரேஞ்சர் ஆகிவிட வேண்டும் என்பதை தனது வாழ்நாள் கனவாகக் கொண்டவர். இதற்காக மேலதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பதால் என்ன செய்வது என்கிற தவிப்பில் இருக்கிறார்.

இவரும் தனது குடும்பப் பிழைப்பிற்காக காட்டில் இருந்து விறகுகளை வெட்டி வந்து விற்று வருகிறார். இவருக்கு கடத்தல் கும்பல் வலை விரிக்கிறது. இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதித்துவிட்டு அதை வைத்து ரேஞ்சர் வேலையை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் கருணா கடத்தலுக்கு சம்மதிக்கிறார்.

முதல் கடத்தலிலேயே லாரி மாட்டிக் கொள்ள.. ஒரு சென்டிமெண்ட் சீனை உருவாக்கி அதில் விதார்த்தை விழ வைத்து தனக்குப் பதிலாக விதார்த்தை ஜெயிலுக்கு அனுப்புகிறார். இந்தக் கடத்தலை கண்டுபிடித்ததற்காக கருணாவிற்கு ரேஞ்சர் டிரெயினிங் வேலை கிடைக்கிறது. நேர்மையான பாரஸ்ட் ஆபீஸரான நரேன், கருணாவை நல்லவர் என்று நம்பி அவருக்கு ரெகமண்ட் செய்து ரேஞ்சர் வேலையையும் வாங்கித் தந்துவிடுகிறார்.

அதே நேரத்தில் சிறையில் இருக்கும் விதார்த் அங்கே வரும் புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த சமுத்திரகனியைச் சந்திக்கிறார். சமுத்திரகனி உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் விதார்த்துக்குள் இருக்கும் போராட்ட உணர்வைத் தூண்டிவிடுகிறது. காடு உனக்குச் சொந்தம்.. அதில் எவனாவது கை வைத்தால் அவன் கையை வெட்டு என்கிறார் கனி. ஜெயிலுக்கு போய் வந்த விதார்த் புது மனிதனாக வெளியே வருகிறான்.

புது ரேஞ்சராக பதவியேற்றிருக்கும் கருணா கடத்தல் கும்பலுக்கு துணை போக முடிவு செய்து மலைமேல் குடியிருக்கும் மக்களை கீழேயிறக்கி துரத்தியடிக்கும் வேலையைச் செய்கிறான். இதைத் தெரிந்து கொண்ட வேலு கருணாவுடன் நேருக்கு நேராக மோதத் தயாராகிறான்.  முடிவில் என்ன நடந்தது என்பதுதான் கிளைமாக்ஸ்..!

தனது முதல் படத்திலேயே இந்த அளவுக்கு சமூக அக்கறையுடன் காடுகளை அழிக்கக் கூடாது என்கிற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கத்தை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம்.

ஆனால் சொல்ல வந்ததை இன்னமும் அழுத்தமான திரைக்கதையின் மூலமாகச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

இது போன்ற சீரியஸ் படங்களில் தவிர்க்க முடியாமல் இருக்கும் காதல், பாடல்கள் ஓகேதான்.. ஆனால் காமெடி தேவையா..? அதிலும் இதில் இடம் பெற்றிருக்கும் தம்பி ராமையா, சிங்கம் புலி காமெடிகள் அபத்தம்.. இத்தனை நீளத்திற்கு இடம் பெறும் அவைகள் படத்தின் தன்மையை கெடுக்கின்றன. கூடவே பள்ளி மாணவி மீதான காதலும்தான்.. “படிப்பை முடி. அதுக்கப்புறமா கல்யாணம் செஞ்சுக்கலாம்..” என்ற வசனத்தின் மூலம் இதை நியாயப்படுத்த முடியாது இயக்குநர் ஸார்..!

அதோடு சில கேரக்டர்களின் ஸ்கெட்ச் முழுமையாக இல்லை.. கருணாவின் கேரக்டர் முதலில் நல்லவனாகத்தான் இருக்கிறது.. தான் லஞ்சம் கொடுக்க வேண்டிய காரணத்திற்காக கடத்தல் தொழிலில் ஈடுபடுவதுவரையிலும்கூட சரிதான்.. ஆனால் அதற்கு பிறகு தனக்குப் பதிலாக நண்பன் வேலுவை கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வைப்பதும், அந்த வேலை கிடைத்தவுடன் அடுத்து அதே களவாணிகளுடன் கூட்டு சேர்வதும் அந்தக் கேரக்டரை வில்லனாகவே ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்துவிட்டது.

கருணாவின் தவறை, தவறென்று சொல்லியிருக்க வேண்டிய வேலு.. கிளைமாக்ஸில் “உங்களாலதாண்டா அவன் இப்படியானான்.. நீங்கதான் அவனை கொன்னுட்டீங்க.. நீங்க லஞ்சம் கேட்காம இருந்திருந்தால் அவன் இப்படி ஆகியிருப்பானா..?” என்றெல்லாம் பேசுவது பெரிய முரண்பாடு..! படத்தின் மிகப் பெரிய ஓட்டையே இதுதான்..! இந்த வசனத்தை வேலு பேசாமலேயே இருந்திருக்கலாம்.

 போராளியாக சிறைக்கு வருகிறார் சமுத்திரகனி. ஆனால் அவர் யார்..? அவருடைய பின்னணி என்ன..? அவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்..? அவர் எதற்காக சிறைக்குள் வந்தார்..? என்ற எந்தத் தகவலையும் சொல்லாமலேயே விட்டுவிட்டது ஏனோ..?

ஆனால் இவர் பேசுகின்ற அத்தனை பேச்சுக்களும் வெடிகுண்டு ரகம்..

“வீட்டு வாசல்ல இருந்த பூங்கா மரத்தை வெட்டிட்டு ரோசா செடியை நட்டு வைச்சு அழகு பார்த்த்து நம்ம ஆளுங்கதான்..”

“இந்தக் காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும் உன் பாட்டன், பூட்டன், முப்பாட்டன் வைச்சது.. உன்னோட குடும்பச் சொத்து.. அதை ஒருத்தன் வெட்டுனா அவனை நீ வெட்டு..”

“காட்டை அழிக்கிற மனிதனை காட்டைத் திருத்தினான்னு சொல்றோம். ஆனா தங்கள் இடத்தில் உலவும் மிருகங்களை பார்த்து, வன விலங்குகள் அட்டகாசம் பண்ணுதுன்னு சொல்றோம்.”

“புலி எங்கோ இருக்கோ அதுதான் பல்லுயிர்க் காடு. அங்கதான் அனைத்து தரப்பட்ட உயிரினங்களும் வாழ முடியும்.. இந்தியால மொத்தம் 4 பல்லுயிர் காடுகள்தான் இருக்கு. மிச்சம் இருந்த காடெல்லாம் எங்கே..? காட்டுல இருக்க வேண்டிய புலியையெல்லாம் பிடிச்சு மிருகக் காட்சி சாலைல அடைச்சு வைச்சு நாம அழகு பார்த்துக்கிட்டிருக்கோம்..”

“உலகத்தில் சமாதானம் முன் வைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அதிகாரம்தான் ஜெயிச்சிருக்கு.”

“உரிமைகளை முழுமையாக பெற ஒரே வழி  போராடி பெறுவதுதான். அப்படி பெற்ற உரிமைகள்தான் நீடிச்சு நிலைச்சு நிக்கும்..”

“நகரத்தில் பிறந்து மாநகரத்தில் படித்து பிட்சாவும் பர்கரும் தின்று வளர்ந்தவனை காட்டிலாகா அதிகாரியாகப் போட்டால் யாருக்கு என்ன பலன்..?

அரசுக்கு பணம் வருது  என்ற ஒரே காரணத்துக்காக காடு முழுக்க, தேக்கு மரமும் தைல மரமும் மட்டும் நட்டு வைச்சிருக்கீங்க. மற்ற மரங்களெல்லாம் எங்க..?”

ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு வீரியமிக்க வசனங்களை படத்தில் தெளித்திருக்கிறார் இயக்குநர். இதற்காக ஸ்பெஷலாக இன்னொரு பாராட்டு இயக்குநருக்கு..!

வேலு-கருணா என்கிற இந்தப் பெயர் தேர்வுக்காக சென்சார் எந்த பிரச்சினையும் எழுப்பாமல் இருந்ததே ஆச்சரியம்தான்.. ஆனால் பொருத்தமாகத்தான் இருக்கிறது..

வேலுவாக நடித்திருக்கும் விதார்த்துக்கு இந்தப் படம் அவருடைய கேரியரில் மிக முக்கியமான படம்.. தன்னுடைய இனத்தில் இருந்து ஒருவன் பாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்தால், அவனால் தன்னுடைய இனத்திற்கும், காட்டிற்கும் ஏதாவது நல்லது நடக்குமே என்று நினைக்கும் அந்த நல்ல எண்ணத்தோடு அவர் ஜெயிலுக்கு போக ஒப்புதல் அளிக்கும் காட்சியில் பளீச்சென்று தெரிகிறது அவரது இயல்பான நடிப்பு..

காதல் காட்சிகளில் கொஞ்சம் நெளிந்தும், கோபத்தில் சினந்தும், வெகுளியாய் பேசியும், கருணாவை முழுசாய் நம்பியும் பலவித குணாதிசயங்களை கொட்டியிருக்கிறார் விதார்த். இயக்குநரின் அருமையான இயக்கத்தின் காரணமாய் நடிகர்கள் யாரும் எந்த இடத்திலும் சோடை போகவில்லை.

சமஸ்கிருதி என்ற மலையாளப் பெண் ஹீரோயின். பள்ளி மாணவி கேரக்டருக்கு பொருத்தம்தான்.. அழகுதான்.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் புண்ணியத்தில் ரம்மியமாகத் தெரிகிறார்.  இன்னமும் நிறைய படங்களில் நடிக்க ஆசி வழங்குகிறோம்.

கருணாவாக நடித்திருக்கும் முத்துக்குமார் முத்திரை பதித்திருக்கிறார். இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் குழப்பம் காரணமாய் இவரை முழுமையாக ரசிக்க முடியவில்லை என்றாலும் நடிப்பில் குறைவில்லை. தம்பிராமையா, சிங்கம்புலி வழக்கம்போல.. டயலாக் டெலிவரியில் இருவருமே அகாசய சூரர்கள். இதிலும் அப்படியே.. ஆனால் அந்தக் காமெடிதான் காய்ந்து போன புரோட்ட மாதிரியிருந்ததால் வீணாகிவிட்டது..!

காடுகளில் இருந்து மரங்களை வெட்டி விறகுகளாக்கிக் கொண்டு வரும் காட்சிகளின் நீளத்தை வெட்டியிருக்கலாம். அடிக்கடி வந்து கொண்டேயிருப்பதால் கொஞ்சம் சலிப்புத் தன்மை வருகிறது.

மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவில் சிக்காமல் தவிக்கிறது காடு. அகண்ட காட்டை முடிந்த அளவுக்கு சுருட்டிக் கொடுத்திருக்கிறார்.  சிறந்த ஒளிப்பதிவில் வேறு எப்படி சொல்வது..? விதார்த்தின் சைக்கிள் ரேஸ்.. இரவு நேரத்தில் வனத்துறை அதிகாரிகள் பெஞ்சமினின் மகனையும், மருமகளையும் அழைத்துச் செல்லும் காட்சிகளில்  ஒளிப்பதிவையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்..!

இது போன்ற படங்களைத் தயாரிப்பதற்கு ஒரு தைரியமும் வேண்டும். அந்தத் தைரியத்துடன் இயக்குநருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் திருச்சி நேரு நகர் நந்து அவர்களுக்கும் நமது நன்றி..!

 காட்டுல என்ன இருக்கு..? வெறும் மரம்தானே..? வெட்டுறதுல என்ன தப்பு இருக்கு..? என்று கேட்பவர்களெல்லாம் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும். யாருடைய சொத்தை யார் அழிப்பது என்று அந்த கிராமவாசி கேட்கும் கேள்விக்கு சரியான விடை இந்த உலகத்தில் யாரிடம் இருக்கிறது..?

மரம் நமது நண்பன்.. காடு நமது ஊர் என்கிற முழுக்கம் நாடு முழுக்க ஒலிக்க வேண்டும் என்று நாம் துடித்து வரும் வேளையில் இப்படியொரு படத்தைக் கொடுத்திருக்கும் இந்தப் படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும், நன்றிகளும்..!

Our Score