‘லிங்கா’ பட வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு..!

‘லிங்கா’ பட வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு..!

‘லிங்கா’ படத்துக்கெதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் “லிங்கா’ படத்தின் கதை தன்னுடைய ‘முல்லைவனம் 999’ என்கிற படத்தின் கதையைத் திருடி எடுக்கப்படுகிறது. எனவே அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும்..” என்று கோரி  மனு செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்துவிட்டனர். இதற்குப் பிறகு மேலும் ஒரு மனுவை ரவிரத்தினம் தாக்கல் செய்திருந்தார்.

நேற்று அந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ரவிரத்தினம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், வி.ரமேஷ் ஆகியோர், “முல்லைவனம் 999’ கதையும், ‘லிங்கா’ கதையும் ஒன்றுதான். மனுதாரரின் கதை திருடப்பட்டுள்ளது. மனுதாரரின் கதையும், ‘லிங்கா’ படக் கதையும் ஒன்றுதானா என்பதை உண்மை அறியும் குழு மூலம் விசாரித்து போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த், படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் சஞ்சய் ராமசாமி, சண்முகராஜா சேதுபதி ஆகியோர், “மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. ‘லிங்கா’ படத்தின் கதை திருடப்படவில்லை. மனுதாரர் ரவிரத்தினம்  தனது கதையை பதிவு செய்யவில்லை. இது போன்ற சூழ்நிலையில் மனுதாரர் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர முடியாது. ஆனால், ‘லிங்கா’ படத்தின் கதை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்…” என்றனர்.

விசாரணையின்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், மதுரை போலீஸ் கமிஷனரின் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், “மனுதாரரின் புகார் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை…” என்று கூறப்பட்டு இருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Our Score