full screen background image

பாடலுக்கு ஏற்ற புதிய காட்சிகள் – ரசிகர்களுக்கு போட்டி நடத்தும் இசைஞானி இளையராஜா

பாடலுக்கு ஏற்ற புதிய காட்சிகள் – ரசிகர்களுக்கு போட்டி நடத்தும் இசைஞானி இளையராஜா

இன்று துவக்கப்பட்டுள்ள தனது சொந்த இணையத்தளத்தில் தனது ரசிகர்களுக்காக ஒரு போட்டியினையும் அறிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

இதைப் பற்றி இன்றைய கூட்டத்தில் அவர் பேசும்போது, “இந்த இணையத்தளப் பக்கத்தில் என்னைப் பற்றிய அபூர்வ புகைப்படங்களும், செய்திகளும் இடம் பெறும். மேலும், என்னுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தும்வகையில் புதிய, புதிய போட்டிகளும், புதிய படைப்பாளிகளுக்கு சினிமாவில் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்தும்வகையிலான வாய்ப்பும் வழங்கப்படும்.

குறிப்பாக நான் தேர்வு செய்திருக்கும் ‘புத்தம் புதுக் காலை’, ‘நின்னுக்கோரி வர்ணம்’ ஆகிய இரண்டு பாடல்களுக்கு இளம் படைப்பாளிகளாக நீங்கள், உங்களுடைய திறமையைப் பயன்படுத்தி புதிய நடிகர், நடிகையரைப் பயன்படுத்தி புதிதாக படப்பிடிப்பு நடத்துங்கள். இந்தப் படக் காட்சிகளை என் பார்வைக்கு வரும் வண்ணம் இணையத் தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாடலுக்கேற்ற வகையில் காட்சிகள் பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருக்குமெனில், அவற்றுக்கு நான் பரிசளிப்பேன்.

இதேபோல் நான் எடுத்த புகைப்படங்கள் எனது இணையப் பக்கத்தில் உங்களுக்காக பகிரப்படவுள்ளன. அந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கவிதைகள் எழுதலாம். அதில் சிறந்த கவிதைகளை நான் தேர்ந்தெடுத்து பரிசளிக்கவுள்ளேன்.

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ரசிகர்கள் www.ilaiyaraajalive.com என்ற இணையத்திற்குச் சென்று மேலதிகமான விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் உங்களுடைய படைப்புகளை படப்பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்துவிடுங்கள்..” என்றும் தெரிவித்தார்.

படைப்பாளிகளே முந்துங்கள்..! இசைஞானியிடமிருந்து பரிசுகளை வெல்லுங்கள்..!

Our Score