இணையம் பரந்து விரிந்து இன்றைக்கு புதிய, புதிய தொழில் நுட்ப வசதிகளோடு பயணிக்கையில், இதனை பலரும் பலவிதமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.
திரையுலக ரசிகர்கள் பலரும் தங்களது மானசீக நடிகர், நடிகையர் பற்றிய தங்களது கருத்தினை தெரிவிக்கவும், அவர்களது சாதனைகளை பரப்புரை செய்யவும் வேண்டி பல்வேறு இணையத்தள சேவைகளை சொந்தமாக உருவாக்கியும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இணையத்தளம், வலைத்தளம், முகநூல், டிவிட்டர் என்று பலவிதங்களிலும் பல பிரபலங்களுக்கு பக்கங்களை உருவாக்கி அவர்களைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டும், கருத்துக்களைப் பகிர்ந்தும் வருகிறார்கள் ரசிகப் பெருமக்கள்.
அந்த வரிசையில் இசைஞானி இளையராஜாவும் தப்பவில்லை. உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களின் இதயத்தில் என்றென்றும் முடிசூடா மன்னராக வீற்றிருக்கும் இசைஞானி இளையராஜா பெயரில் முகநூலிலேயே 50-க்கும் மேற்பட்ட பக்கங்கள் இருக்கின்றன. அதேபோல் வலைத்தளங்களில் 20-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் அவரது புகழ் பாடுகின்றன.
இவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரியான செய்திகள் வெளியாகி பல புதிய பார்வையாளர்களை சற்று குழப்பமாக்கி வந்தாலும், பரவலாக இவைகள் இசைஞானி இளையராஜாவுக்கு பெருமை சேர்க்கும்விதமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. இன்னும் சில கருத்துக் கோர்வை தளங்களில் மிக ஆழமாக, நுணுக்கமாக இசைஞானியின் இசை பற்றி விவாதிக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காக இசைஞானியே தன் பெயரில் ஒரு இணையத்தளத்தை உருவாக்கியிருக்கிறார். இதன் துவக்க விழா இன்று மாலை சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் இசைஞானி இளையராஜா பேசும்போது, “இதுவரைக்கும் இணையத் தளங்களில் என்னுடைய பெயரில் பல்வேறு வலைப்பூ பக்கங்கள் தொடங்கப்பட்டு ரசிகர்கள் அதில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இவையனைத்தும் என் கவனத்திற்கு வராமல் அதிகாரப்பூர்வமற்றவகையில் செயல்பட்டு வருகின்றன என்பதோடு இந்தப் பக்கங்கள் மூலம் என்னுடைய ரசிகர்களை தவறாகத் திசை திருப்பும் வேலையிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தடுக்கும் நோக்கத்துடனும், பெரும்பாலான ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் என்னுடைய நேரடிப் பார்வையில் இயங்கும்வகையில் ஒரு இணையப் பக்கத்தை இன்றிலிருந்து தொடங்குகிறேன்.
www.ilaiyaraajalive.com என்ற இணைய முகவரியில்தான் இனிமேல் நானும், எனது ரசிகர்களும் பேசிக் கொள்ளப் போகிறோம்.
இதேபோல யூ டியூப்பில் www.youtube.com/ilayaraajaofficial (Managed by TrendLoud) வழியாக என்னுடைய அரிய வீடியோ இணைப்புகளை நீங்கள் கண்டுகளிக்கலாம். இனிமேல் என் அதிகாரப்பூர்வமான இணையத் தொடர்புகள் இவைகள்தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் இணையத்தில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கும் எனது ரசிகர்கள் என்னுடன் ஒரே பாதையில் இணைந்து பயணிக்கலாம்..” என்றார்.
இனியென்ன..? தினமும் இதனை ரெப்ரெஷ் செய்வதுதான் இசைஞானியின் ரசிகர்களின் தலையாய கடமையாக இருக்கப் போகிறது..!