full screen background image

“எல்லா வகை படங்களையும் இயக்குவதுதான் இயக்குநருக்கான தகுதி..” – Q ஹிந்தி படத்தின் இயக்குநர் சஞ்சீவ்குப்தா பேட்டி

“எல்லா வகை படங்களையும் இயக்குவதுதான் இயக்குநருக்கான தகுதி..” – Q ஹிந்தி படத்தின் இயக்குநர் சஞ்சீவ்குப்தா பேட்டி

சினிமாவில் தனியார் அமைப்புகள் தரும் விருதுகள் கேலிக்கூத்தாகும் இக்காலத்தில் சில விருதுகளுக்கு மட்டும்தான் மிகப் பெரிய மதிப்பும், மரியாதையும் இருக்கிறது.

இந்திய அரசு தரும் தேசிய விருதுக்கு நிகராக இந்திய சினிமாவே மதிக்கும் விருது கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது.

முதல் படத்தை இயக்கும் முயற்சியில், படப்பிடிப்பு தளத்திலேயே விபத்தில் தன் மகனை பறி கொடுத்த பிரபல நடிகர் கொல்லப்புடி மாருதிராவ் விதைத்த விதை இது.

இன்று இந்திய சினிமாவில் மூலை முடுக்கெல்லாம் தேடி அறிமுக இயக்குனர்களில் திறமைசாலியை அடையாளம் கண்டு அவருக்கு வழங்கப்படுகிறது. இத்தனை சிறப்புமிக்க கொல்லப்புடி விருதை 2008-ல் அமீர்கான் ’தாரே ஜமீன் பார்’ படத்துக்காக வாங்கியபோது கண்ணீர் விட்டு அழுதது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இந்த மதிப்புமிக்க விருதை பெற்றவர் ஹிந்தி திரையுலக அறிமுக இயக்குனர் சஞ்சீவ் குப்தா. வரும் டிசம்பரில் திரைக்கு வரவிருக்கும் அவரது ‘க்யூ’ படம் ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் திரைப்பட விழாக்களில் விருது வென்றிருக்கிறது.

IMG_1007

விருதுகளை குவித்துவரும் இந்தப் படத்துக்கு மணிமகுடமாக நமது தமிழ்நாட்டு கொல்லப்புடி ஸ்ரீனிவாசா விருதும் கிடைத்திருக்கிறது. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் ஒரு பெண்ணை பற்றிய மிக இயல்பான படம்தான் க்யூ. 

இந்த விருது பெற்றது பற்றியும், திரையுகம் பற்றியும் சஞ்சீவ் குப்தா நம்மிடம் பேசினார்.

Director Sanjeev Gupta Photo

“எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணம் இது. அறிமுக இயக்குனருக்கு மட்டுமே இந்த விருது கிடைக்கும் என்ற நிலையில் நான் வாங்கியிருக்கிறேன். 27  அறிமுக இயக்குனர்கள் என்னுடன் போட்டியில் இருந்ததாக சொன்னார்கள்.

தேசிய விருதுக்குக்கூட விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இந்த விருதுக்கு யாரும் விண்ணப்பிக்கவும் தேவையில்லை. திறமையானவர்களை அவர்களே தேடி அடையாளம் கண்டு கொள்கின்றனர்.  கடுமையான போட்டிக்கு பிறகுதான் நான் வென்றிருக்கிறேன். இது தேசிய விருதுக்கு சமம். சினிமாவை நேசிக்கும் எவருக்கும் இந்த விருது ஒரு கனவாக, லட்சியமாக இருக்கும்.”

க்யூ படம் எடுக்க 4 ஆண்டுகள் சிரமப்பட்டீர்களாமே..?

2006-ல் நான் எனது கல்லூரி படிப்பை முடித்தேன். அப்போதே இனிமேல் சினிமாதான் என் வாழ்க்கை என்று முடிவெடுத்துவிட்டேன். அதில் இருந்தே சிரமங்கள் தொடங்கிவிட்டன. கமர்ஷியல் படங்களை விடுத்து இயல்பான படங்கள் எடுக்கத்தான் எனக்குள் ஆசை. படத்தின் சப்ஜெக்ட் என்ன கேட்கிறதோ, அதை மட்டும்தான் தர வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம் வெறும் 96 நிமிடங்கள்தான். ஒரு ஃப்ரேம்கூட கதைக்கு தேவையில்லாமல் இருக்காது.

இந்தப் படத்திற்கு இத்தனை விருதுகளையும், பாராட்டுக்களையும் எதிர்பார்த்தீர்களா..?

இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை வித்தியாசமாக செய்கிறோம் என்று மட்டும் நம்பினேன். இப்போது பாலிவுட்டில் எல்லோரும் பாரபட்சமில்லாமல் புகழ்வது எனக்கு கூச்சமாக இருக்கிறது. எடுக்கும்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம், இப்போது பறந்துபோய்விட்டது.

அறிமுக இயக்குனர்களுக்கு அறிவுரை..?

உங்களுக்கென்று ஒரு நல்ல டீமை உருவாக்கி கொள்ளுங்கள். அது அமைந்தால் நீங்கள் எந்த சூழ்நிலையிலும் படம் இயக்கலாம். யாருக்காகவும் எதற்காகவும் எந்த விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதீர்கள்.  மற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள்.

ஆனால் இந்திய சினிமா இன்னமும் ஸ்டார்களின் பின்னால்தானே ஓடுகிறது..?

அது மனிதர்களை பொறுத்தது. பெரிய படங்கள் என்ற நிலையில் பெரிய ஸ்டார்கள் இருப்பது அவசியமாயிற்றே..? நாம்தான் நமக்கான பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தயாரிப்பாளர் வழிக்கு நீங்கள் செல்வதா.. அல்லது உங்கள் வழிக்கு தயாரிப்பாளரை கொண்டு வருவதா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

திரையுலகில் உங்களுடைய ரோல் மாடல் யார்…?

சத்யஜித்ரே. சினிமா கற்க விரும்புபவர்கள் தவிர்க்கவே கூடாத பெர்சனாலிட்டி.

தென் இந்திய சினிமாக்கள் பற்றி..?

ஐ லவ் ஆல். ரொம்ப வித்தியாசமான முயற்சிகள் இங்கே இருக்கு. அதை ஆடியன்ஸும் ஏத்துக்கிறாங்க… பீட்சா, ட்ராஃபிக் மாதிரியான படங்கள் என்னை கவர்ந்தவை.

அடுத்தது..?

ஒரு படத்துக்கான எழுத்துப் பணிகள் சென்று கொண்டிருக்கிறது. குறும் படங்கள் இயக்கவும் திட்டங்கள் இருக்கிறது.

எதிர்காலத்தில் கமர்ஷியல் படங்கள்..?

வாய்ப்பே இல்லை என சொல்லிவிட முடியாது. ஒரு இயக்குநராக எல்லா வகை படங்களும் எடுக்கத்தான் ஆசை. அதுதானே சிறந்த இயக்குநருக்கான தகுதி..?

Our Score