பொங்கல் ரிலீஸிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கும்போது ஐ படத்திற்கு தடைக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அனைத்து பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அதே நிலைமைதான். கோர்ட் படியேறிவிட்டது ‘ஐ’ பட விவகாரம்..!
‘ஐ’ படத்திற்கு கடன் உதவி செய்த பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு பணம் பாக்கியிருப்பதால் தங்களுக்கு பணத்தினை செட்டில் செய்துவிட்டு பின்பு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிடக் கோரி அந்நிறுவனத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கு மனுவில், “நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘ஐ‘ படத்தை தயாரிக்க, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் நிறுவனம் எங்களிடம் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.15 கோடி கடன் வாங்கியது. அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வாங்கிய கடன் தொகையை திருப்பிக் கொடுத்த பின்னரே, இந்த படத்தை வெளியிடவேண்டும். ஆனால், கடன் தொகையை திருப்பித் தராமல், ‘ஐ‘ படத்தை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட அதன் தயாரிப்பாளர் வி.ரவிசந்திரன் திட்டமிட்டுள்ளார். இவரது நடவடிக்கை ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தற்போது அவர் வாங்கிய கடன் தொகை, வட்டியுடன் சேர்த்து ரூ.17.40 கோடி உள்ளது. எனவே, வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் வரை, ‘ஐ‘ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஐ‘ படத்தை வருகிற 30-ந் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அந்த உத்தரவில், இந்த மனுவுக்கு எதிர்மனுதாரர் வி.ரவிசந்திரன் 3 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்ட காலத்தில், இருதரப்பினரும் சமரச தீர்வு மையத்தில் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம்‘ என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
ஐகோர்ட்டு விதித்துள்ள இடைக்கால தடை பற்றி, ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, “ஐ’ படம் திட்டமிட்டபடி வருகிற 14-ம் தேதி திரைக்கு வரும். நானும், என் மீது வழக்கு தொடர்ந்தவரும் நண்பர்கள். எங்கள் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். அதனால் பொங்கல் வெளியீடாக படம் நிச்சயமாக வெளிவரும்” என்றார்.