‘லிங்கா’ படத்தில தாங்கள் நஷ்டமடைந்துவிட்டதாகச் சொல்லும் விநியோகஸ்தர்கள் இன்று காலை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்.
ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை வாங்கிய திருச்சி-தஞ்சை வினியோகஸ்தர் சிங்காரவேலன், திருநெல்வேலி-கன்னியாகுமரி வினியோகஸ்தர் ரூபன், வட ஆற்காடு-தென் ஆற்காடு வினியோகஸ்தர் சாய், தியேட்டர் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் ஆகியோர் சென்னை ‘பிரஸ் கிளப்’பில் நேற்று காலை பேட்டி அளித்தார்கள்.
“ரஜினிகாந்தும், கே.எஸ்.ரவிகுமாரும் சேர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், ‘லிங்கா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மாணவர்-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு உள்பட பல்வேறு காரணங்களால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை.
திருச்சி-தஞ்சையில் மட்டும் 55 தியேட்டர்களில் திரையிட்டோம். முதல்நாள் ரூ.ஒரு கோடியே 26 லட்சம் வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால், ரூ.76 லட்சம் தான் வசூல் செய்தது. அதனால், ‘லிங்கா’ படத்தை வாங்கியதில், எங்களுக்கு மொத்தம் ரூ.5½ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பை சரி செய்யும்படி, ஈராஸ் நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்கு தெரியாது என்கிறார்கள். வேந்தர் மூவீசிடம் கேட்டால், ரஜினிகாந்திடம் கேட்டு சொல்கிறோம் என்கிறார்கள். ரஜினிகாந்தை பார்த்துப் பேச கடிதம் கொடுத்தோம் பதில் இல்லை. பட அதிபர் ராக்லைன் வெங்கடேசோ, ‘‘வியாபாரத்தில் லாப-நஷ்டம் சகஜம்’’ என்கிறார்.
நாங்கள் ரஜினிகாந்திடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் யார், நாங்கள் யாரிடம் நஷ்ட ஈடு கேட்பது? என்று அடையாளம் காட்டும்படி கேட்கிறோம். அவர் கவனத்தை ஈர்க்கவே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து இருக்கிறோம். எங்களுக்காக அவர் தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்.
நாளை (சனிக்கிழமை) உண்ணாவிரதம் இருக்க போலீசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.’’
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்









