full screen background image

“கே.பி.கிட்ட வேலை பார்த்தது நான் செஞ்ச புண்ணியம்..” – 26 வருட கால உதவியாளர் மோகனின் பெருமிதம்..!

“கே.பி.கிட்ட வேலை பார்த்தது நான் செஞ்ச புண்ணியம்..” – 26 வருட கால உதவியாளர் மோகனின் பெருமிதம்..!

கடந்த 26 ஆண்டுகளாக இயக்குநர் கே.பாலசந்தரின் உதவியாளராக இருந்த என்.மோகன், கே.பி-வுடனான தன் நினைவுகளை இன்றைய ஆனந்தவிகடனில் பகிர்ந்திருக்கிறார். 

”மதுரையில டிஸ்ட்ரிபியூட்டர் முருகேசன் அண்ணாச்சிகிட்ட வேலைக்கு இருந்தேன். அப்ப டைரக்டரோட படங்களை மதுரையில அண்ணாச்சிதான் ரிலீஸ் பண்ணுவார்.  மதுரைக்கு டைரக்டர் வந்தா, நியூஸ் பேப்பரும், காபியுமா தினமும் காலையில நாங்கதான் முதல்ல சந்திப்போம். பரபரனு வேலை பார்க்கிற என்னைப் பார்த்துட்டு, ‘மோகன் மாதிரி ஒரு பய இருந்தா, எனக்கு கவலையே இல்லை… முருகேசன்’னு அண்ணாச்சிகிட்ட டைரக்டர் சொல்ல, ‘மோகன் மாதிரி என்ன… மோகனையே அழைச்சுட்டுப் போங்க’னு அனுப்பிவெச்சார்.

1989-ல் ‘நீ பாதி நான் பாதி’ ஷூட்டிங் டைம்ல கம்பெனிக்கு மேனேஜர், சாருக்கு அசிஸ்டென்டா சேர்ந்தேன். சினிமா, சீரியல், மேடை நாடகம்னு மூணுக்கும் அவர்கிட்ட வேலை பார்த்த ஒரே மேனேஜர் நான்தான். எனக்கு இந்த உலகமே அவர்தான்.

நான் இல்லைனா, அவருக்கு வேலை ஓடாது. ஏன்னா, அவரோட பெர்ஃபெக்ஷனுக்குப் பழகுறது பெரிய சவால். ‘மேஜர் சந்திரகாந்த்’ல வந்த மேஜர் சந்திரகாந்த் அவரேதான். எந்த வேலையும் கச்சிதமா நடக்கணும். ‘நொண்டிச் சாக்கு சொல்லாதே’ம்பார். என்கிட்ட சொல்லிட்டா கட்டித் தூக்கிட்டு வந்துடுவேன்னு அவருக்குத் தெரியும். ‘எங்கடா அது?’னு பொதுவாத்தான் கேட்பார். அந்த அது, எதுனு புரிஞ்சுக்கிட்டு ‘இதுவா சார்?’னு கொண்டு போய்க் கொடுப்பேன். உடனே என்னைப் பார்த்துப் பெருமையா சிரிப்பார். யாரையும் மரியாதைக் குறைவா நடத்திட்டா, அவருக்குப் பொறுக்காது. ‘டேய்… சின்னக் குழந்தையோ, பெரியவங்களோ அப்படிப் பேசக் கூடாது’னு திருத்துவார்.

எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணவே இல்லை. பல காரணம் சொல்லி மறுத்துட்டே வந்தேன். அப்போ எங்க டைரக்டர் எனக்கு ஒரு லெட்டர் எழுதினார். ரொம்பத் தற்புகழ்ச்சியா இருக்குமேனு அதை நான் யாருக்கும் காட்டலை. ‘அன்புள்ள மோகன். இது ஒரு நற்சாட்சிப் பத்திரம் அல்ல. என் மனதில் உன்னைப் பற்றி என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதை வெளிப்படுத்துவதுதான் இதன் நோக்கம்’னு நிறையப் பாராட்டிட்டு, ‘எனக்கு நீ செவிசாய்க்காதது ஒரே ஒரு விஷயத்தில்தான். மிக விரைவில் திருமணம் செய்து கொள்வாய் என நம்புகிறேன்’னு எழுதியிருந்தார். அந்த ஒரு லெட்டர் போதும் சார் எனக்கு. உடனே கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.

தன் மருமகள் கீதாம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்த்து லதாவை எனக்குக் கட்டிவெச்சார். ‘மோகன் 20 வருஷமா என்கிட்ட இருக்கான். என் பையன் மாதிரி. என்கிட்ட ஒரு மணி நேரம்கூட எவனாலயும் வேலை பார்க்க முடியாது. ஆனா, இவன் இத்தனை வருஷமா இருக்கான்னா, எப்படிப்பட்டவன்னு யோசிச்சுக்கங்க. தைரியமா பொண்ணு கொடுங்க’னு எங்க டைரக்டரோட  சொல்லுக்காக பொண்ணு கொடுத்தார் என் மாமனார். எங்க டைரக்டர் குடும்பம்தான் கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தினாங்க.

என் ஆத்தா நிறைய சினிமா பார்க்கும்கிறதைத் தவிர, சினிமாவுக்கும் எனக்கும் வேற எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனா, நான் செஞ்ச புண்ணியம் டைரக்டர் பக்கத்துலயே இருக்கிற பாக்கியம் கிடைச்சது. பாரதிராஜா சார் பார்க்கிறப்பல்லாம், ‘யோவ்… அவர் பக்கத்துலயே இருக்குற, நீ கொடுத்து வெச்சவன்யா’ம்பார். வாலி சார், ‘வாய்யா கே.பி-யின் நிழலே’ம்பார். இப்படியான அவரோட நினைவுகளோடயே வாழ்ந்துட்டா போதும்.

அவ்வளவுதான்!”

Our Score