full screen background image

ஹீரோ – சினிமா விமர்சனம்

ஹீரோ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை K.J.R. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கிறார்.

படத்தில் சிவகார்த்திகேயன், ‘ஆக்சன் கிங்’ அர்ஜீன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர், ஷாம், அழகம் பெருமாள், இவானா என்னும் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – வி.செல்வகுமார், சண்டை இயக்குநர் – திலீப் சுப்பராயன்,  வசனம் – எம்.ஆர்.பொன் பார்தித்திபன், ஆண்டனி பாக்யராஜ், சவரிமுத்து, ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக்,  பாடல்கள் – பா.விஜய், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், சதீஷ்,  ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங், உடைகள் – பெருமாள் செல்வம், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, வி.எஃப்.எக்ஸ் – சிவா டிஜிட்டல் ஆர்ட்ஸ் லார்வென் ஸ்டுடியோ, மைண்ட் சென் நிறுவனங்கள், புகைப்படம் – ஜி.ஆனந்த், ஒப்பனை – கணபதி, விளம்பர வடிவமைப்பு – சிவக்குமார், நிர்வாகத் தயாரிப்பு – டி.எழுமலையான், தயாரிப்பு மேற்பார்வை – பி.எஸ்.கணேஷ், DIT – சுதாகர், DI – Knack Studios, இயக்கம் – பி.எஸ்.மித்ரன். நேரம் : 2 மணி 44 நிமிடங்கள்.

மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தகுதி பார்ப்பதும், தரம் பிரிப்பதும் தவறு. அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையிருக்கும். அந்தத் திறமையை வெளிக்கொணர வேண்டும் என்பதை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

‘சக்தி’ என்னும் சிவகார்த்திகேயன் பள்ளிப் படிப்பு படிக்கும்போதே ‘சக்திமானின்’ தீவிர ரசிகர். “தான் என்ன செய்தாலும் சக்திமான் வந்து  தன்னைக் காப்பாற்றுவார்” என்ற குருட்டு நம்பிக்கை உடையவர்.

இந்த நம்பிக்கையை அவனுடைய பள்ளித் தோழர்களும், வகுப்பு ஆசிரியையும் கண்டிக்கிறார். ஆனாலும் தனது நம்பிக்கையை இழக்காத சக்தி அதைச் செய்து காட்ட விரும்பி பள்ளி கட்டிடத்தில் இருந்து கீழே விழுகிறார். அப்போது ‘சக்திமான்’ காப்பாற்ற வராமல் மரம், செடி, கொடிகள் தடுத்ததால் கை முறிவோடு தப்பித்துக் கொள்கிறார். இதன் பின் அவரது அப்பாவின் அறிவுரைப்படி “யாரும் இங்க சூப்பர் ஹீரோல்லாம் இல்ல.. நம்மை நாமதான் காப்பாத்திக்கணும்..” என்பதை உணர்கிறார்.

ப்ளஸ் டூவில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெறுகிறான் சக்தி. அந்த நேரத்தில் அவனது தந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது. இதற்காக தனது பிளஸ் டூ சான்றிதழை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகுகிறான் சக்தி.

இதனால் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்ட சக்தி இது போன்று போலியான சர்டிபிகேட்டுக்களை அச்சடித்து விற்கும் கிரிமினல் வேலையைத் தொடர்கிறான். இந்தத் தொழிலில் இவனுக்குத் துணையாக நிற்கிறார் ரோபோ சங்கர்.

சக்தியின் வீட்டருகே வசிக்கும் இவானாவை தனது சொந்தத் தங்கையாக பாவிக்கிறான் சக்தி. இவளுக்கு ஏரோநாட்டிக்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசை. இவள் பிளஸ் டூ படிக்கும்போதே உப்பு நீரில் ஓடும் என்ஜினை கண்டறிகிறாள். இதற்கு மூல காரணமாக இருப்பது சில காரணங்களினால் மறைந்து வாழும் அர்ஜூன்.

போலி சான்றிதழ்களை அச்சிட்டுக் கொடுத்தும், கல்லூரிகளுக்கு மறைமுகமாக நன்கொடைகளை வசூலித்துக் கொடுத்தும் பிழைப்பு நடத்தி வரும் சக்தி, இவானாவின் ஏரோநாட்டிக்ஸ் கனவை நிறைவேற்ற பல கல்லூரிகளுக்குச் சென்று சீட் கேட்கிறான். ஆனால் யாரும் பணமில்லாமல் சீட் தர மறுக்கிறார்கள்.

இப்போதுதான் பணத்தை மட்டுமே பிரதானமாக நினைக்கும் கல்லூரி முதலாளிகளின் உண்மை நிலையை அறிந்து கொள்கிறான் சக்தி. இவானாவின் கண்டுபிடிப்பை உலகத்தின் முன் காட்டி அதன் மூலம் இவானாவுக்கு சீட் வாங்கித் தர முயற்சிக்கிறான் சக்தி.

உப்புத் தண்ணீரில் ஓடும் என்ஜின் என்றவுடன் புதிய ஆராய்ச்சியாளர்களைத் தேடும் கல்லூரி கனவான்களிடையே பரபரப்பு ஏற்பட.. அதில் ஒரு கல்லூரியில் இவானாவுக்கு சீட் கிடைக்கிறது. ஆனால் அடுத்த நாளே இவானா அறிவுத் திருட்டு பற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அசிங்கப்பட்டு நிற்கிறாள்.

இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறாள் இவானா. தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை முயற்சியால் இவானா உயிரிழக்க.. இப்போதுதான் சக்திக்கு தன்னைச் சுற்றிய சமூகம் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் மோசமான சூழல் புரிகிறது.

தனது தங்கையின் சாவுக்குக் காரணமான சதி வலையை வீசிய கார்ப்பரேட் முதலாளி அபய் தியோலை பழி வாங்க நினைக்கிறார். இதே அபய் தியோல் அர்ஜூனையும் கொலை செய்யத் துடிக்க.. ஒரு சந்தர்ப்பத்தில் சக்தியை, அர்ஜூன் காப்பாற்றுகிறார். இருவரும் இணைந்து அபய் தியோலின் கார்ப்பரேட் சக்திக்கு எதிராக போர்க் கொடி தூக்குகிறார்கள். இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ கொடுத்த வெற்றியினால் கருத்து சொல்லும் கதையம்சம் கொண்ட படங்களில்தான் நடிக்கப் போவதாகக் கங்கணம் கட்டிவிட்டார் சிவகார்த்திகேயன். இந்தப் படமும் அப்படியே..!

சிவாவுக்கு சிறப்பான நடிப்புக்காக ஸ்கோப் எதுவும் இல்லை. ஆனால் இருக்கின்ற காட்சிகளிலெல்லாம் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார். திரைக்கதைதான் முக்கியம் என்பதால் நடிகர், நடிகையரின் நடிப்பை ‘சற்றே தள்ளியிரும் பிள்ளாய்’ என்று தள்ளி வைத்திருக்கிறார் இயக்குநர் மித்ரன். இதனால் சிவாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

படத்தின் துவக்கத்தில் சில காட்சிகளில் சிவாவே சிரிக்க வைத்திருக்கிறார். ரோபோ ஷங்கர் கூட்டணியை வைத்தும் எதுவும் செய்யாமல்விட்டுவிட்டார் இயக்குநர். உருக்கத்தைக் கொடுக்க வேண்டிய காட்சிகளில் சிறப்பான நடிப்பை வழங்கவிடாமல் கத்தரி போட்டுவிட்டதால், சிவாவுக்கு அந்த வேலையும் மிச்சமாகிவிட்டது.

கல்யாணிக்கு இது முதல் தமிழ்த் திரைப்படம். அழகாக இருந்தாலும் சில கோணங்களில் அவரது அம்மாவான லிஸியை ஞாபகப்படுத்துகிறார். துவக்கத்தில் இவருடைய கவுன்சிலிங் ரொம்பவே சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறது. இருந்தும் படத்தின் பிற்பாதியில் காணாமலேயே ஆகிவிட்டார். கடைசி நேரத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார். நடிப்புக்கென்றே ஸ்கோப் உள்ள வேறு படத்தில் நடித்து தனது திறமையைக் காட்ட வேண்டியதுதான்.

‘ஆக்சன் கிங்’ அர்ஜூன்தான் படத்தில் உண்மையாகவே நடித்திருப்பவர். சீரியஸான அவரது ஒவ்வொரு ஆக்சனும்தான் படத்தின் தன்மையைச் சொல்லாமல் சொல்கிறது. என்ஜினை திருடிச் சென்று காட்டிவிட்டதை அறிந்தவுடன் அர்ஜூன் செய்யும் அதிரடிதான் படத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

அர்ஜூன் தனது கதையை ரத்தினச் சுருக்கமாகச் சொன்னாலும் மாணவர்களுக்கு இவர் சொல்லும் அறிவுரை உலகத்தில் இருக்கும் அத்தனை மாணவர்களுக்கும் பொருத்தமானதுதான்…!

இவானா தனது லட்சியத்தை அடைய நினைத்து எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அவரது கனவு நினைவாக வேண்டும் என்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏற்படும் கொடுமையும், அவருடைய மரணமும்தான் படத்தின் மையக் கரு. அதனை மிகச் சரியாகவே திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர். இவானா ஹாட்ஸ் அப்.

பாலிவுட் ஸ்டார் தர்மேந்திராவின் தியோல் குடும்பத்தைச் சேர்ந்த அபய் தியோல்  வில்லனாக வேடமேற்றிருக்கிறார். அதிகமான ஈர்ப்பு இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் என்னென்ன கொடுமைகளைச் செய்கின்றன. நாட்டின் வளர்ச்சியை அவைகள் தங்களுடையதாக எப்படி மாற்றிக் கொள்கின்றன என்பதையெல்லாம் அவர் வாயால் வரவழைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இவருக்குப் பலமாக கிடைத்திருப்பது இவரது கணீர் குரல். பின்னணி குரல் கொடுத்தவருக்கு பாராட்டுக்கள்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் கிரேடிங்கில் என்ன தகராறு என்று தெரியவில்லை. படத்தின் பிற்பாதியில் அனைத்து கேரக்டர்களின் உடம்பிலும் தாறுமாறாக புளூ லைன் ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படி இதனை மிஸ் செய்தார்கள் என்றே தெரியவில்லை. மற்றபடி இந்த மெகா பட்ஜெட் படத்துக்கு ஏற்றபடியான ஒளிப்பதிவைத்தான் தந்திருக்கிறார் ஜார்ஜ்.

பின்னணி இசையில்தான் பெயர் சொல்கிறார் யுவன். பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் முணுமுணுக்க வைக்கவில்லை என்பது ஒரு குறைதான். படத் தொகுப்பாளர் ரூபன் இன்னும் கொஞ்சம் கண் முழித்து காட்சிகளை வெட்டி வீசியிருக்கலாம்.

இவானாவின் மரணத்தை ஒரேயொரு வசனம் மூலமாக “பல்ஸ் இல்ல ஸார்” என்று பட்டென்று சொல்லி முடித்ததுபோல் அனைத்துக் காட்சிகளையும் ரத்தினச் சுருக்கமாக ஆக்கியிருந்தால் படம் இன்னமும் கிரிப்பாக இருந்திருக்கும். இப்போது இருக்கும் இரண்டே முக்கால் மணி நேரம் என்பது அதிகமான பொறுமையைச் சோதித்துவிட்டது.

படத்தில் மிக முக்கியமான பணியைச் செய்திருப்பவர்கள் படத்திற்கு வசனம் எழுதிய எழுத்தாளர்கள். அத்தனை வசனங்களும் இன்றைய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிக, மிக தேவையானவை.

“ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் திறமை இருக்கும். அதைக் கண்டு பிடிக்கறதுதான் கல்வி.

உங்க பிள்ளைகளோட ரஃப் நோட்டை பாருங்க. அதுலதான் உங்க பிள்ளைகளோட திறமை என்னன்னு தெரியும்..

தன்னோட சொந்த அம்மா, அப்பாகிட்டயே தன் திறமைகளை வெளிப்படுத்தத் தயங்கற ஒரு சமுதாயம் இருப்பது இந்தியால மட்டும்தான்.

நம்ம எஜூகேஷன் சிஸ்டமே திறமைசாலிகளை உருவாக்கலை. நல்ல வேலையாட்களைத்தான் உருவாக்குது..

வெறுமனே மாணவர்களின் சர்பிடிகேட்டை மட்டுமே பார்க்காதீங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும். அதைப் பாருங்க.

நீட்ட வேண்டியதை நீட்டுனா நீட்டு, கீட்டு எல்லாம் கெட் அவுட்டுதான்..”

இது போன்று படம் முழுவதிலும் தற்போதைய கல்வி முறையை முற்றிலும் மாறுபட்டதாக ஆக்க வேண்டிய கட்டாயம் இருப்பதைச் சொல்லிக் காட்டியிருக்கிறார்கள் வசனகர்த்தாக்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் 4 திரைப்படங்களில் சொல்ல வேண்டிய கதையை இந்த ஒரே திரைப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

போலி சான்றிதழ்கள் அச்சடிப்பு.. கேபிடேஷன் பீஸ் கொள்ளை.. கல்வி கார்ப்பரேட் மயமாகுதல்.. மாஸ்க் முகமூடி அணிந்து நல்லது செய்யும் நாயகன் என்று நான்குவித திரைக்கதைகளையும் ஒட்டு மொத்தமாய் திணித்திருப்பதால் இடைவேளைக்கு பின்பான திரைக்கதையில் பெரும் அயர்ச்சி ஏற்படுகிறது.

இந்தப் படத்திற்கு சூப்பர் ஹீரோ கேரக்டர் ஸ்கெட்ச் எதற்கு என்று தெரியவில்லை. அதெல்லாம் ராபின் ஹூட் கதைகளில் மட்டுமே எடுபடும். மாஸ்க் அணிந்து சண்டை போடும் காட்சிகளெல்லாம் இந்தக் கதைக்குத் தேவையே இல்லை.

இதேபோல் தான் இதுநாள்வரையிலும் போலி சான்றிதழ் அச்சடித்துக் கொடுத்தது தவறு என்பதை நாயகன் உணரும் காட்சியோ அல்லது அது தொடர்பான குற்றவுணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியையோ வைக்காமல் போனதுதான் ‘சக்தி’ என்ற கேரக்டர் மீதான ஈர்ப்பு வராமல் போனதற்குக் காரணம். நல்லவேளையாக அருகில் இருந்த அர்ஜூன் அத்தனை பேரையும் இழுத்துவிட்டதால் படம் தப்பித்தது.

படத்தின் இறுதியில் புதிய, புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய கருவிகளை, விஷயங்களை கண்டுபிடித்த கண்டு பிடிப்பாளர்களை பட்டியல் போட்டுக் காட்டியது சிறப்பான விஷயம்.

இந்தச் சிறப்பான திறமைசாலிகளை பாராட்டி, ஊக்குவிப்பதோடு அந்தக் கண்டுபிடிப்புகளை முறைப்படி செயல்படுத்தி அந்தத் துறையை வளர்ச்சியடைய வைக்க வேண்டியது அரசுகளின் கடமை. அதை இத்திரைப்படம் சுட்டிக் காட்டியுள்ளது. அரசுகளின் காதுகளுக்கு இது போய்ச் சேருமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..!

மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமன்றி கல்வியாளர்களும், ஆட்சியாளர்களும்கூட அவசியம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்..!

இந்த ஹீரோ நிச்சயமாக ஹீரோதான்..!

Our Score