full screen background image

தம்பி – சினிமா விமர்சனம்

தம்பி – சினிமா விமர்சனம்

வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளனர். கார்த்தி-ஜோதிகாவின் அப்பா, அம்மாவாக சத்யராஜூம், சீதாவும் நடித்துள்ளார்கள். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடனம் – ஷோபி, பிரசன்னா சுஜித், சண்டை இயக்கம் – சில்வா, பாடல்கள் – விவேக், கார்த்திக் நேத்தா, கலை இயக்கம் – பிரேம் நவாஸ், படத் தொகுப்பு – வி.எஸ்.விநாயக், வசனம் – கே.மணிகண்டன், இசை – கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், தயாரிப்பு – சூரஜ் சாதனா, வயாகம்18 ஸ்டுடியோஸ். நேரம் – 2 மணி 24 நிமிடங்கள்.

த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன் என எல்லா ஜானர்களிலும் படங்களை இயக்கி வெற்றி பெற்ற மலையாள இயக்குநரான ஜீத்து ஜோசப், நேரடி தமிழ்ப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

SDC Pictures நிறுவனம் இந்தப் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.

‘திரிஷ்யம்’ என்னும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் ஜீத்து ஜோசப், அதே பாணியில் இந்தப் படத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

ஒரு கொலை.. அதைத் தொடர்ந்து நடக்கும் மர்மங்கள்.. தொடர் கொலைகள்.. யார் கொலையாளி.. நிச்சயமாக ஊகிக்க முடியாத நபர் என்று படம் இடைவேளைக்கு பின்பு டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக பரபரக்கிறது.

மேட்டுப் பாளையத்தில் மிகப் பெரிய பணக்காரராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார் சத்யராஜ். இவரது மனைவி சீதா. மகள் ஜோதிகா. இவரது மகன் சரவணன் தனது 15-வது வயதிலேயே காணாமல் போய்விட்டார். அந்தத் துக்கத்தை அந்தக் குடும்பம் இப்போதும் தாங்கிக் கொண்டிருக்கிறது.

கோவாவில் பிராடுத்தனங்கள் மொத்தத்தையும் செய்து வரும் ஒரு கிரிமினல் கார்த்தி. ஒரு முறை போலீஸில் சிக்கிக் கொள்ள.. அங்கேயிருக்கும் இன்ஸ்பெக்டர் இளவரசுவின் யோசனைப்படி சத்யராஜின் காணாமல் போன மகனாகிறார் கார்த்தி.

சத்யராஜின் மேட்டுப்பாளையம் வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார் கார்த்தி. அங்கேயிருக்கும் சூழல் அவருக்குப் பிடித்திருந்தாலும் அவ்வப்போது அவருக்குள் இருக்கும் திருடன் சரவணன் கண் முழித்துக் கொள்கிறான். போதாக்குறைக்கு அக்கா ஜோதிகாவும் ஏதோ ஒரு காரணத்தால் அவருடன் நெருக்கமாகப் பழகாமல் இருக்கிறார். பாட்டியான செளகார் ஜானகிக்கு மட்டும் தனது பேரன் இவன் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஊட்டி அருகேயிருக்கும் காட்டுப் பகுதியில் ஒரு ரிசார்ட்டை அமைக்க பெரும் முதலாளி ஒருவர் நினைக்கிறார். இதற்காக அந்தப் பகுதியில் குடியிருக்கும் மலைவாழ் மக்களை அங்கேயிருந்து விரட்ட நினைக்கிறார். இதற்குத் தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்வரைக்கும் போய் போராடிக் கொண்டிருக்கிறார் சத்யராஜ்.

இந்தச் சூழலில் சத்யராஜிடம் பெரிய அளவுக்கு பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு செட்டிலாக இன்ஸ்பெக்டர் இளவரசு, ஊட்டிக்கு தேடி வந்து கார்த்தியை நச்சரிக்கிறார். அதே நேரம் கார்த்தியை கொலை செய்யவும் ஒரு குழு முயல்கிறது. வீடு தேடி வந்தும் கொலை செய்யப் பார்க்கிறார்கள்.

இந்த நேரத்தில் அந்தக் குடும்பம் காட்டிய பாசத்திலும், அன்பிலும், நேசத்திலும் தன்னுடைய ஒரிஜினலாட்டியை தொலைத்துவிடும் கார்த்தி அந்தக் குடும்பத்தில் ஒருவனாகவே ஆக நினைக்கிறார்.

அதையடுத்து தன்னைக் கொலை செய்ய முயன்றது யார் என்பதைக் கண்டறிய முனையும்போது அவருக்குத் தெரிய வருவது மிகப் பெரிய அதிர்ச்சி. அது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ் திரைக்கதை.

இயக்குநர் ஜீத்து ஜோசப்பை நம்பியே இந்தப் படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் இறங்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தனது ‘திரிஷ்யம்’ டைப் கதையை நம்பியே இயக்குநர் ஜீத்து ஜோசப்பும் களத்தில் குதித்திருக்கிறார் என்பதும் புரிகிறது.

கார்த்தி சமாளிப்பு திலகமாக சில, பல காட்சிகளில் நடித்திருந்தாலும் அது திரைக்கதைக்கு போதுமானதாக இல்லை. ஆனால் உண்மை தெரிந்தவுடன் சத்யராஜிடம் அவர் பேசும் பேச்சும், ஜோதிகாவிடம் அவர் காட்டும் பாசமும், ஜோதிகாவின் அன்புக்காக அவர் ஏங்கும் ஏக்கமும்தான் அவரது கேரக்டரை வெயிட்டாக்கியிருக்கிறது.

கோவாவில் செம ஜாலியான சரவணனாக ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் கார்த்தி, மேட்டுப்பாளையம் வந்தவுடன் திடீரென்று மெளன சாமியாராக 2 ரீல்களுக்கு வலம் வருவதும்.. திரும்பவும் இளவரசு வந்தவுடன் முதல் டிவிஸ்ட் உடைவதும் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் மனதில் தைக்கும் அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

கார்த்தியைவிடவும் நிகிலா விமலே சிறப்பாக நடித்திருக்கிறார். டாக்டருக்குப் படித்திருந்தும் காதலனுக்காக இத்தனையாண்டுகள் காத்திருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சற்று சுவை குன்றியது என்றாலும் ஸ்கிரீனில் கொஞ்சம் அழகாய் இருப்பது அவர் மட்டும்தான்..!

ஜோதிகா மிரட்டல் விழிகளாலும், உருட்டு விழிகளாலும் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். குதிரை ஏற்றத்தில் பல்பு வாங்கும் தம்பியை ஓரக் கண்ணாலேயே மிரட்டிவிட்டுப் போகும் காட்சியில் பழைய ஜோ-வை ரசிக்க முடிகிறது. இறுதிக் காட்சியில் எல்லாம் செட்டப்புதான் என்றாலும் “தம்பி என்ற ஒருவன் தனக்கு வேண்டும்…” என்று உருகும் காட்சியில் நெகிழ வைத்திருக்கிறார் ஜோ.

சத்யராஜ் பாதி நல்லவராகவும், மீதியில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இடைவேளை போர்ஷனில் மாடியில் இருந்து அவர் பார்க்கும் பார்வையே, பழைய சத்யராஜை காட்டுகிறது. ஆனாலும் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார்.

அம்மாவாக சீதா.. சில காட்சிகளே தென்படுகிறார். இளவரசு வில்லத்தனத்தை முதல்முறையாகக் காட்டியிருக்கிறார். ஜோதிகாவின் சின்ன வயது கேரக்டரில் நடித்திருக்கும் அம்மு அபிராமி, கச்சிதமாக அந்த வயதுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

செளகார் ஜானகியம்மாவுக்கு வாய் பேச முடியாத கேரக்டர் என்றாலும் தனது கண்களாலேயே கார்த்தியை பயமுறுத்துகிறார். எழுதி வைத்திருக்கும் “தன்னிலை விளக்கம் பேப்பரை போய் எடு” என்பதை கண்ணடித்துச் சொல்லும் காட்சியில், கை தட்டவும் வைக்கிறார் செளகார் அம்மா. பாராட்டுக்கள்.

மிக நீண்ட வருடங்கள் கழித்து பாலாவுக்கு பெயர் சொல்லும் கேரக்டர். தன்னிலை விளக்கத்தை அவர் சொல்லும்விதமும், அந்தக் காட்சியை படமாக்கியிருக்கும்விதமும் அவரது வார்த்தைகளை உண்மைதான் என்று உணர வைக்கிறது.

ஹரீஸ் பெரடியின் சின்ன வில்லத்தனம்தான் டிவிஸ்ட்டுகளின் முதல் புள்ளி. இதிலிருந்து கிளைமாக்ஸ்வரையிலுமான கடைசி 20 நிமிடங்கள்தான் படம் விறுவிறு.. பரபரவென்று இருக்கிறது.

குறையே சொல்ல முடியாத ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. கலை இயக்குநர் மலை வாழ் மக்களின் குடியிருப்புக்களை இப்படி பட்டவர்த்தனமாய் தெரியும்படி போட்டிருக்க வேண்டாம்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் ஒலித்தன. ஆனால் கவன ஈர்ப்பு செய்யவில்லை. பின்னணி இசை சேஸிங் காட்சியில் மட்டும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

சஸ்பென்ஸ், த்ரில்லர் படம் என்றாலே அதன் திரைக்கதையில் ஒரு வேகம் இருக்க வேண்டும். இதுதான் அதன் சூட்சுமம். இந்தப் படத்தில் முதல் பாதியை மிதமாகவும், இரண்டாம் பாதியை சற்று வேகமாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

கொஞ்சம், கொஞ்சமாக அவர் சஸ்பென்ஸை உடைத்துக் கொண்டே வருவதும்.. அதற்கேற்றாற்போல் திரைக்கதையை அமைத்திருப்பதும் பாராட்டுக்குரியது என்றாலும் ‘திரிஷ்யம்’ அளவுக்கு மனதைத் தொடவில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

முதல் பாதியை கொஞ்சம் காமெடியோடு நகர்த்தி சென்றவர்.. இரண்டாம் பாதி முழுவதையும் சஸ்பென்ஸாக கொண்டு சென்று… க்ளைமாக்ஸில் யாருமே எதிர்ப்பார்க்காத டிவிஸ்ட்டை கொடுத்து “அட” என்று சொல்ல வைத்திருக்கிறார்.

“குடும்பங்களில் அக்காமார்களெல்லாம் இன்னொரு அம்மாக்கள்…” என்னும் உண்மையைச் சொல்ல வந்த இயக்குநர், அதற்கான அழுத்தமான திரைக்கதையை அமைக்காமல் சஸ்பென்ஸ், மர்டர், திரில்லராக மாற்றியதால் அந்த உண்மை மக்களிடையே பதிவாகாமலேயே போய்விட்டது..!

இருந்தும், ஒரு திரில்லர் படத்தைப் பார்த்த திருப்தி இந்தத் ‘தம்பி’யைப் பார்த்தால் கிடைக்கும் என்பது மட்டும் உண்மை..!

Our Score