இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது, “நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம்..” என்றார்.
பாடலாசிரியர் ஜி.கே.பி. பேசும்போது, “என்னை வெளிக்காட்டுவதை எப்போதுமே நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான இது போன்ற படத்திற்கு பாடல்கள் எழுதுவது சவாலாக இருந்தது.
இசையமைப்பாளர் சுமோ எனக்கு ஒரு நோட்ஸ் அனுப்பியிருந்தார். பொதுவாகவே நான் பாடல்கள் எழுதுவதாக இருந்தால் மிகவும் ஆழமாக சிந்தித்து நேரம் எடுத்து எழுதுவேன். ஆனால், அந்த இசையைக் கேட்டவுடன் பாடல் வரிகள் சரளமாக வந்தது. அதை நேரடியாக பாலாஜிக்கு அனுப்பினேன். அதைக் கேட்ட பாலாஜி, ‘நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்’ என்றார். மேலும், இப்படத்திற்கு ஏற்றவாறு கதையை இணைக்கும்விதமாகவும் இருக்கும்…” என்றார்.
நடிகர் கோகுல் பேசும்போது, “இப்படத்தில் ‘ஐதன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நெருப்பின் மீது ஆர்வம் கொண்ட மனிதனாக நடித்திருக்கிறேன். நானும் என் பாத்திரத்தை ரசித்து செய்திருக்கிறேன். படம் பார்ப்பவர்களும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்…” என்றார்.
கதாநாயகன் சந்தோஷ் பேசும்போது, “இப்படம் அனைவரிடமும் சென்றடைந்திருக்கிறது. இப்படத்தில் ஏதோ இருக்கிறது என்று பலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்றால்போல், ஏமாற்றம் தரும் படமாக நிச்சயம் இருக்காது.
இயக்குநர் பாலாஜியை எனக்கு இரண்டு வருடங்களாக தெரியும். அவர் சிறிய கதையாக இருந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் ஆராய்ந்து எழுதுவார். இந்தக் கதையைச் சொல்லும்போதே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ‘இப்படம் தனி நாயகன் படமாக இல்லாமல் 5 முக்கியமான பாத்திரங்கள் இருக்கும்’ என்றார். ‘கதைதான் ஹீரோ. ஆகையால் நான் இப்படத்தில் நடிக்கிறேன்’ என்று கூறினேன். காற்றுக்கு எல்லை இல்லை என்பது போல், என்னுடைய வாழ்க்கையும் எல்லை இல்லாமல் இருக்கும்படியான ஒரு கதாபாத்திரம் என்னுடையது.
இந்தக் குழுவினருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் இப்படத்தை எடுத்தோம். எங்களின் நட்பு வருங்காலங்களிலும் தொடரும். மேலும், வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவார்கள். அப்படித்தான் அனைவரும் உழைத்திருக்கிறோம். இப்படம் எங்கள் அனைவருக்கும் திருப்புமுனையாக அமையும்…” என்றார்.
நடிகர் சீமான் பேசும்போது, “நான் தமிழ்ச் சினிமாவில் சிறு, சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இப்படத்திற்காக ஆடிஷன் எடுக்கும்போது இயக்குநர் கூறியதை செய்தேன். பிறகு, எனது உடலமைப்பைப் பார்த்தார். உடனே நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள் என்றார்.
இந்தப் படத்திற்காக நாங்கள் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறோம். வசனங்கள், சிரிப்பது, முகபாவனை என்று அனைத்தையும் அவரே நடித்துக் காட்டி சொல்லிக் கொடுப்பார் இயக்குநர் பாலாஜி…” என்றார்.
இசையமைப்பாளர் சுமோ பேசும்போது, “இந்த வருடத்தில் நான் இசையமைக்கும் மூன்றாவது படம் இது. உமாவும், சௌந்தரும் சிறந்த பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்..” என்றார்.
சண்டை பயிற்சியாளர் ‘பில்லா’ ஜெகந்நாதன் பேசும்போது, “படப்பிடிப்பிற்கு இடம் பார்க்க சென்ற இடத்தில் இயக்குநர் பாலாஜி காட்சிகளை விவரித்தார். ஆனால், மிகவும் குழப்பமாக இருந்தது. பிறகு, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரையும் கேட்டு தெளிவு பெற்று எடுத்தோம்.
ஒரு கார் விபத்துக் காட்சியைப் படமாக்குவதற்கு என்ன தேவையோ, என்ன செலவாகுமோ கேளுங்கள் என்று கூறினார். ஆகையால், அதை வித்தியாசமாக எடுக்க நினைத்தோம். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ரேம்ப் இல்லாமல் கார் விபத்துக் காட்சியைப் படமாக்கினோம். இந்தக் காட்சிக்கு அதிகமாக மெனக்கெட்டது ஒளிப்பதிவாளர்தான். நான் நினைத்த மாதிரி அந்தக் காட்சியைப் படமாக்கியதில் மகிழ்ச்சி…” என்றார்.
இயக்குநர் பாலாஜி வைரமுத்து பேசும்போது, “இப்படம் எடுப்பதற்கு முதல் காரணம் எனது அப்பாதான். என் வாழ்வில் உணர்ச்சிகரமான தருணமிது. என்னிடமிருந்த கதைகளில் இந்த கதையைத்தான் முதலில் படமாக்க வேண்டுமென்று நினைத்தேன்.
‘பஞ்சராக்ஷரம்’ என்றால் ‘சிவன்’ என்றுதான் அர்த்தம். இப்படத்தில் சிவனை உணரலாம். மேலும், பொதுவாக எல்லோரும் ஒரு தவறு நடந்துவிடக் கூடாது என்று நினைப்போம். நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நாம் செல்லும்போது விபத்து நடக்கக்கூடாது என்று நினைப்பதற்கும், நல்லபடியாகச் சென்று சேர வேண்டுமென்று நினைப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது.
ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், சரியாக கணித்து சொல்பவர்கள் குறைவு. நாம் எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கும். இப்படம், சிறு சிறு நேர்மறையான எண்ணங்கள் மாறும்போது என்ன நடக்கும் என்பதைக் கூறும்.
சனா நீரைப் பற்றி கூறும் பாத்திரம், மதுஷாலினி காற்றைப் பற்றி கூறும் எழுத்தாளர் பாத்திரம். இப்படி ஐவரும் ஒன்றாக இணையும்போது, அவர்களிடம் ‘பஞ்சராக்ஷரம்’ என்ற புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகம் எதிர்காலத்தைப் பற்றி கூறும். அது அவர்களிடம் கிடைத்த பின் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘பஞ்சராக்ஷரம்’ திரைப்படம்.
யுவராஜ் ‘ஜாக்சன் துரை’யில் பணியாற்றினார். இப்போது, ஆர்யாவுடன் ‘டெடி’ படத்திற்கு பணியாற்றுகிறார். அவர் இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
சண்டை பயிற்சி இயக்குநர் நகைச்சுவையாகப் பழகக் கூடியவர். சீமானின் பாத்திரம்தான் சுவாரஸ்யமான கதாபாத்திரம். என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி…” என்றார்.