இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் கொடுக்கும் இயக்குநர்களே இல்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான்.. அதுவும் தற்போது லீடிங்கில் இருக்கும் இயக்குநர்கள்தான் வரிசையாக படம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கிய 3 படங்கள் 35 நாட்கள் இடைவெளிக்குள் அடுத்தடுத்து வெளியாகியிருப்பது அவருக்கு பெருமை சேர்க்கும் விஷயம். தமிழ்ச் சினிமாவிலும் இது புதிய சாதனைதான்..!
இவர் இயக்கத்தில் பரத் நடித்த ‘கில்லாடி’ திரைப்படம் சென்ற ஜனவரி 30-ஆம் தேதியன்று வெளியானது. இவர் இயக்கிய இன்னுமொரு படமான ‘சண்டமாருதம்’ பிப்ரவரி 20-ஆம் தேதியன்று ரிலீசானது. இதைத் தொடர்ந்து சில நாட்கள் இடைவெளிக்குள் இவர் இயக்கிய ‘ரொம்ப நல்லவன்டா நீ’ என்கிற திரைப்படம் வருகிற மார்ச் 6-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.
இது பற்றி ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், “எல்லாரும் இதையொரு பெரிய சாதனை மாதிரி கேக்குறாங்க. பேசுறாங்க. நான் பொதுவாவே ஒரு படத்தை அதிகப்பட்சம் 35 நாட்களுக்குள் முடித்துவிடுவேன். அதற்கு பின்பு போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலையெல்லாம் சேர்த்தால் எப்படியும் 60 நாட்களுக்குள் ஒரு படத்தை முடித்துக் கொடுத்து விடுவேன்.
இப்போது சமீபத்தில் வெளியான ‘கில்லாடி’ திரைப்படம் 4 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. பலவித சோதனைகளுக்கு பின்பு இப்போதுதான் ரிலீஸானது. இதேபோல ‘சண்டமாருதம்’ படமும் படம் தயாராகி நின்ற சில மாதங்களுக்கு பின்புதான் ரிலீஸுக்கு வந்தது. இந்த இடைவெளியில் இந்த ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படமும் வர்றதால அடுத்தடுத்து என்னுடைய படங்கள் திரைக்கு வந்து என்னைப் பெருமைப்படுத்தியிருக்கின்றன..” என்றார்.