உலக நாயகன் கமல்ஹாசன் தனது ‘உத்தமவில்லன்’ திரைப்படத்தின் ஆடியோவை நேற்றைக்கு நடந்த விழாவில் மிக வித்தியாசமாக வெளியிட்டார்.
வழக்கமாக இசைத்தட்டு வடிவில் செய்யப்பட்ட பெரிய போஸ்டரை கலர் பேப்பர்களை வைத்து மறைத்திருப்பார்கள். கூடவே ரிப்பன் கட்டியிருப்பார்கள். வெளியிடுபவர்கள் அந்த ரிப்பனை கத்தரித்துவிட்டு.. கலர் பேப்பரை நீக்கிவிட்டு எப்போதும் தலைகீழாகவே இருக்கும் அந்த இசைத்தட்டினை மீடியாக்களுக்கு காட்டுவார்கள். இதுதான் எப்போதும் நடப்பது. நேற்றைக்கும் இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்தோம்.
கடைசி நேரத்தில் அந்த வட்ட வடிவ இசைத் தட்டு போஸ்டரையும் மேடைக்குக் கொண்டு வந்தார்கள். அப்போது திடீரென்று கமல்ஹாசன் அதை திரும்பக் கொண்டு போகச் சொன்னார். கமல்ஹாசன் ஏதோ புதிதாக பேசப் போகிறார் என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் லிங்குசாமியும் போஸ்டரை கையில் வைத்திருந்த பெண்ணை மேடைக்கு ஓரமாகப் போகச் சொல்லிவிட்டு “கொஞ்சம் அங்கேயே நில்லும்மா..” என்றார். ஆனால் கமல்ஹாசன் அதையும் தடுத்து.. “வேணவே வேணாம்மா.. நீ போயிரும்மா..” என்றார்.
லிங்குசாமி புரியாமல் விழிக்க.. “இப்போ எல்லாரும் செய்ற மாதிரி இசைத்தட்டை வெளியிடணும்னு நான் நினைக்கலை.. கொஞ்சம் வித்தியாசமா செய்வோமேன்னு நினைச்சிருக்கேன். இப்போ இந்த இசையை யார் வெளியிடுறாங்கன்னு ஸ்கிரீன்ல பாருங்க..” என்று சொல்லிவிட்டு செல்போனில் யாருக்கோ டயல் செய்தார். கூட்டம் கரவொலி எழுப்ப.. அவர்களை அடக்கிய கமல்.. “ச்சும்மா இருங்க. நான் இப்போ இங்கதான் இருக்கேன்றது அவங்களுக்குத் தெரியாது. தெரியக் கூடாது..” என்றார். கூட்டம் அமைதிக்குத் திரும்பியது.
4-வது ரிங்கில் மறுமுனையில் போன் எடுக்கப்பட்டது.. “டாடி இங்கதான் இருக்கேன்..” என்றது குரல். “மொதல்ல கேமிராவை ஆன் பண்ணு..” என்றார் கமல்ஹாசன். பட்டென்று ஸ்கிரீனில் பிரசன்னமானார் ஸ்ருதி கமல்ஹாசன்.
“அப்பா.. இன்னிக்கு உங்க படத்தோட ஆடியோ லான்ச்தானே..?” என்றார் ஸ்ருதி. “ஆமாம்.. நான் அங்கதான் இருக்கேன்..” என்றார் கமல்.
ஸ்ருதிக்கு கமல் பேசியது சரியாகக் காதில் விழவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். “ஆமாம். நானும் அந்த பங்ஷன்லதான் இருக்கேன். பாட்டை இப்போ ரிலீஸ் பண்ணப் போறோம். நான் உனக்கு இந்த சாங்ஸ் எல்லாத்தையும் அனுப்பியிருக்கேன். பாரு..” என்றார் கமல். ஸ்ருதி முதலில் புரியாமல் முழித்து பின்பு “எங்க..?” என்றார்.. “உனக்கு அனுப்பியிருக்கேன். மெயில்ல பாரு..” என்றார் கமல். ஸ்ருதி தன் ஸ்கிரீனை பார்த்துவிட்டு “ஆங்.. வந்திருச்சுப்பா..” என்றார் சந்தோஷத்துடன். “என்னுடைய படத்தின் பாடல்களை நான் வெளியிடுகிறேன். நீ பெற்றுக் கொள்கிறாய்..” என்று தூய தமிழில் அழுத்தம் திருத்தமாக சப்தமாக கமல் சொல்ல.. முதலில் புரியாமல் விழித்து பின்பு அர்த்தம் தெளிந்நு சந்தோஷத்துடன் “தேங்க்ஸ்ப்பா..” என்றார் ஸ்ருதி. கைதட்டல் கூரையைப் பிய்க்க.. கடைசியாக ஸ்ருதி எதையோ சொல்ல வர.. “ஐயோ.. அதெல்லாம் இங்க வேணாம். மீடியால்லாம் இருக்காங்க..” என்று சொல்லி பட்டென்று போனை ஆஃப் செய்தார் கமல்ஹாசன். இதற்கும் ஒரு ஜோரான கைதட்டல் கிடைத்த்து. கடைசியாக, “நான் பெற்ற பிள்ளை.. நான் வெளியிட்ட பாடல்களை பெற்றுக் கொண்டது..” என்று கமல் சொல்ல அரங்கத்தில் உற்சாகம் கரைபுரண்டோடியது.
இதன் பின்பு சம்பிரதாயத்துக்கு அந்த வட்ட வடிவ இசைத்தட்டையும் வந்திருந்த அனைத்து முக்கிய பிரமுகர்களையும் மேடையேற்றி அவர்கள் மத்தியில் வெளியிட்டார்கள். கூடவே ஆடியோ சிடியையும் வெளியிட்டார் கமல்.