full screen background image

‘தில் ராஜா’ படம் மூலமாகத் தமிழுக்கு வரும் கமர்ஷியல் ஹீரோ விஜய் சத்யா!

‘தில் ராஜா’ படம் மூலமாகத் தமிழுக்கு வரும் கமர்ஷியல் ஹீரோ விஜய் சத்யா!

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோக்கள் பட்டியலில் சேரும் ஆசையுடன் அதற்கான முழு தகுதியுடன் களத்தில் குதித்துள்ளார் புதுமுக நடிகரான விஜய் சத்யா.

‘தில் ராஜா’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் விஜய் சத்யா. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஷெரின் நடித்துள்ளார். மேலும் கே.பி.ஒய். பாலாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அம்ரீஷ் இசையமைக்க.. சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநரான ஏ.வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த தில் ராஜா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்தும், தனது திரையுலகப் பயணத்தின் துவக்கம் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பகிர்ந்து கொண்டார் நடிகர் விஜய் சத்யா.

இந்தச் சந்திப்பில் அவர் பேசும்போது, “இயக்குநர் A,வெங்கடேஷ் ஸார், பல வெற்றிகளை பார்த்தவர். நான் வெற்றிக்காக காத்துக் கொண்டிருப்பவன். அதனால் வெங்கடேஷ் சாரிடம் நான் முற்றிலும் சரணடைந்துவிட்டேன். அவர் சொல்வதை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

நான் இந்த ‘தில் ராஜா’ படத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவனாக நடித்திருக்கிறேன். எதிர்பாராமல் நடக்கும் ஒரு மோதலால், நம்மை எதிர்த்தவர்கள் நம்மைவிட பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் என்னவாகும்…?  அவர்களால் நாயகனுக்கும், அவனது குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை முழுக்க, முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக மட்டுமின்றி சஸ்பென்ஸ், திரில்லர் பாணியிலும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நடிகை ஷெரின் இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருப்பது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பலம்தான். அவர் ஏற்கனவே பெரிய, பெரிய ஹீரோக்களுடன் நடித்தவர். சமீபத்தில் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமும் மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார். அதனால் அவர் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்குக் கிடைத்த பிளஸ்தான்.

எனக்கு பெரிய ஹீரோயின்தான் வேண்டும் என்று நான் கேட்கவில்லை, இயக்குநர்தான் ஷெரினை தேர்வு செய்தார். ஆனால், ஷெரினின் திரையுலக செண்டிமெண்ட் ஒன்று உள்ளது. அவருடன் ஜோடி சேரும் அறிமுக நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஆளாக வருவார்களாம். அந்த சென்டிமெண்ட் இந்தப் படத்திலும் பலிக்குமானால் எனக்கும் சந்தோஷம்தான்.

கே.பி.ஒய். பாலா காமெடியில் கலக்கியிருக்கிறார். அவரது டைமிங் சென்ஸ் காமெடி இந்தப் படத்தில் சரியாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கு பாலாவின் காமெடி காட்சிகள் பிடிக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சாரும் இந்தப் படத்தில் ஒரு வில்லனாக அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கிறார்.

அம்ரீஷ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதோடு, அதை படமாக்கிய விதத்தையும் பலர் பாராட்டி வருகிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளருக்கும் நிச்சயமாக நல்லதொரு எதிர்காலம் உண்டு. 

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சாரின் படங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஒரு ஹீரோவின் முழு திறமையை வெளிப்படுத்தும் அனைத்து அம்சங்களும் அவர் படத்தில் இருக்கும். அப்படித்தான் இந்த படத்திலும் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.

இத்திரைப்படம் குடும்பமாக பார்க்க கூடிய கமர்ஷியல் கதையாக இருந்தாலும், அதில் ஆக்‌ஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகளும் பாராட்டும்படி இருக்கும். இந்தப் படத்தின் மீது அப்படி எனக்கொரு பெரிய நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் இந்த ‘தில் ராஜா’ படம் தமிழ் சினிமாவில் எனக்கான ஒரு இடத்தைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்..” என்றார் உறுதியான நம்பிக்கையுடன்..!

Our Score