“கே.பாலசந்தர் என்னைக் கண்டு கொள்ளாமல் போயிருந்தால் இந்நேரம் என் கதை முடிந்திருக்கும்..” – கமல்ஹாசன் பேச்சு..!

“கே.பாலசந்தர் என்னைக் கண்டு கொள்ளாமல் போயிருந்தால் இந்நேரம் என் கதை முடிந்திருக்கும்..” – கமல்ஹாசன் பேச்சு..!

“இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தன்னை கண்டு கொள்ளாமல் போயிருந்தால் இந்நேரம் என் கதை முடிந்திருக்கும்..” என்று உருக்கமாகப் பேசினார் நடிகர் கமல்ஹாசன்.

நேற்று மாலை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்ற ‘உத்தமவில்லன்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனது குருவான ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரை பற்றி பேசும்போது இதனைக் குறிப்பிட்டார்.

Uttama Villian Audio Launch Stills (17)

முன்னதாக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் கமல்ஹாசனுக்கு எழுதியிருந்த கடிதத்தை ஒளிபரப்பினார்கள். மேலும் உத்தமவில்லன் படத்தில் நடித்தது பற்றி கே.பி. அளித்திருந்த பேட்டிகளும்  ஒளிபரப்பானது.

மேடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் பார்த்திபன் கமல்ஹாசனை பற்றி பேசும்போது “கமல் கே.பி.யின் பாதி. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது..” என்று குறிப்பிட்டார்.

கமல்ஹாசன் பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“ஒத்திகை பார்ப்பதில் துவங்கி, படத்தின் தரத்தை எவ்வளவு தூரம் உயர்த்த வேண்டும் என்பதையெல்லாம் கே.பி. அவர்களிடம் கற்றுக் கொண்டவன் நான். என்னுடைய கலையுலக 43 வருடங்களில் அவருக்கு தனிப்பட்ட முறையில் பல முறை மரியாதை செலுத்தியிருக்கிறேன். பப்ளிக்காக இதுதான் முதல் முறை. அவர் என்னைப் போன்ற பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய, உருவாக்கிய குரு. மகா குரு.

kamal-kb-1

அவர் என்னுடைய ‘உத்தமவில்லன்’ படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதே எனக்குப் பெருமை. இங்கே இதையெல்லாம்விட பெரிய அளவுக்கான நிறைய விஷயங்களை அவரிடத்தில் இருந்து பெற்றிருக்கலாம். இப்படியெல்லாம் ஆகுமென்று நான் நினைக்கவில்லை. பின்னாடி செய்துக்கலாம் என்று  நினைத்து செய்யாமல் விட்டுவிட்டேன்.

பார்த்திபன் சொன்னதை கர்வமாக ஏற்றுக் கொள்ளாமல் எனது கடமையாக, உரிமையாக ஏற்றுக் கொள்கிறேன். அவருடைய பணியை நான் தொடர வேண்டும் என்று நான் நினைத்துக் கொள்கிறேன். இங்கே காட்டப்பட்ட கடிதம் எனக்காக அவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே எழுதி வைத்தது. இங்கே ராஜம்மா வந்திருக்கிறார்கள். கண்டிப்பாக அவருக்குத் தெரிந்திருக்கும். ‘கமலுக்குத்தாண்டி லெட்டர் எழுதிண்டிருக்கேன்’ என்று அவரிடம் கண்டிப்பாகச் சொல்லியிருப்பார். ஏன் அம்மாவை இழுக்கிறேன் என்றால் சாட்சி வேண்டும். இதுக்கெல்லாம் என்னுடைய பதில் நன்றி எனது படைப்புகள்.. இப்போது செய்வதும்.. இனிமேல் செய்வதும்.. இதனால்தான் இதை முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.

kamal-kb-rajini

கே.பி. அவர்கள் என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் நான் எங்கே இருந்திருப்பனோ என்று இந்த நூற்றாண்டை எழுதுபவரிடம்போய்தான் கேக்கணும். ஏதோ அவையடக்கத்திற்காக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். இது நிஜம்.  

சகோதரர் ரஜினியையும், என்னையும் அவர் அறிமுகப்படுத்தியிருந்தாலும்.. ரஜினியை அவர் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் எப்படியோ வேறு வழிகளில் ‘முரட்டுக்காளை’ போன்ற படங்களில் நடித்து பெரிய ஆளாக வந்திருப்பார்.

ஆனால் என் நிலைமை அப்படியல்ல. என்னை அவர் அடையாளம் கண்டு கொள்ளாமல், அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால் வேறு கமல்ஹாசன்..  வேறு வாழ்க்கை.. இந்நேரம் என் கதை முடிந்தே போயிருக்கும். அந்த நன்றியுடன்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது அவையடக்கம் அல்ல. இது நிஜம்…” என்றார் கமல்ஹாசன். 

Our Score