இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பற்றி அவரது பிரதம சீடான இயக்குநர் வஸந்த், ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கிறார்.
வஸந்த் தன் பேட்டியில், ”கடலூரில் நான் ஒண்ணாம் கிளாஸ் படிக்கும்போது, விடுமுறையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போ ஒரு ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க என்னைக் கூட்டிப் போனார்கள். அந்தப் படத்தின் இயக்குநர் பாலசந்தர் சார்.
ஷூட்டிங் பிரேக்கில் அவருடன் என் உறவினர்கள் சேர்ந்து நின்று போட்டோ எடுத்தபோது, சிறுவன் என என்னை விட்டுவிட்டார்கள். அதைக் கவனித்த பாலசந்தர் சார் ‘அவன் என்ன பாவம் பண்ணினான்?’ எனக் கூப்பிட்டு என் கையைப் பிடித்து, தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார். அன்று பிடித்த கையின் பந்தம், அவருடைய கடைசி மூச்சுவரை எனக்குக் கிடைத்தது. கற்றுக் கொடுப்பதில் அவர் கறார் ஆசிரியர்; தட்டிக் கொடுப்பதில் நல்ல நண்பன்.
நான் எடுத்த ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ தேசிய விருது பெற்ற படம். அது தாத்தாவுக்கும் பேரனுக்குமான கதை. தன்னைவிட தன் பேரன் புத்திசாலித்தனமா மீன் பிடிக்கிறானே என்பதைப் பொறுக்க முடியாமல் அவன் கன்னத்தில் தாத்தா அறைந்துவிடுவார். அந்தப் படத்தைப் பார்த்த கே.பி. சார், ‘அந்தத் தாத்தாவோட பொசிஷன்லதான்டா நானும் இருக்கேன். உன்னோட ‘கேளடி கண்மணி’, ‘ஆசை’, ‘ரிதம்’ பார்த்தப்ப உன்னை அறையலை. அவ்வளவுதான்’ என்றார். இப்படிப் பாராட்டுவதில் வஞ்சனை வைக்க மாட்டார்.
சா.கந்தசாமியின் ‘விசாரணை கமிஷன்’ நாவலை சாகித்ய அகாடமிக்காக எடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு மணிரத்னம், பாலுமகேந்திரா இருவரும் நிறையப் பாராட்டினார்கள். ஆனால் இவரோ, ‘அந்த ரோலிங் டைட்டில்ல சற்க்குணம்னு போட்டிருக்க. அந்த ‘க்’ வராதுடா’ என்றார். குற்றம் குறைகளை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது..!” என்று கூறியிருக்கிறார்.









