full screen background image

கவர்னர் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் சொன்ன பொய்..!

கவர்னர் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் சொன்ன பொய்..!

“இனிமேல் இணையத்தள சினிமா செய்தியாளர்கள் யாரையும் சினிமா தொடர்பான விழாக்களுக்கு அழைக்க வேண்டாம்…” என்று தயாரிப்பாளர் கவுன்சில் ஒருதலைபட்சமாக தீர்மானத்தை நிறைவேற்றியதை கண்டித்து இணையத்தள செய்தியாளர்கள் மட்டுமன்றி, பொதுவான சினிமா செய்தியாளர்கள் அனைவருமே சினிமா நிகழ்ச்சிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தப் போராட்டம் அமலுக்கு வந்த நேற்றைய தினமே இணையத்தள செய்திகள் எந்த அளவுக்கு தமிழ்த் திரையுலகத்துக்கு மிக முக்கியம் என்பதை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயார் உணர்த்திவிட்டார்.

நேற்று காலை தி.நகர். சர்.பி.டி.தியாகராயர் ஹாலில் நடைபெற்ற ‘நட்சத்திர மழை’ என்கிற புதிய தமிழ்த் திரைப்படத்தின் துவக்க விழாவில், தமிழக கவர்னர் ரோசையா கலந்து கொண்டு கேமிராவை முடுக்கி வைத்து படத்தைத் துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் தன்னுடைய பேச்சின் துவக்கத்திலேயே, “தமிழகத்திற்கு ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்பு ரோசையா அவர்கள் கலந்து கொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி, இந்த ‘நடத்திர மழை’ பட பூஜைதான். இதுவே இப்படத்திற்கு கிடைத்த ஒரு சிறப்பு…” என்று பேசியிருக்கிறார்.

சில நேரங்களில் பேச்சாளர்களின் வில்லங்கமான, தவறுதலான பேச்சுக்களை ‘தாட் ஸ்லிப்’ என்பார்கள். ‘தாட் ஸ்லிப்’ என்றால் இதில் ரோசையாவின் பெயருக்கு பதிலாக வேறொருவரின் பெயரையோ அல்லது அவரது ‘ஆளுநர்’ பதவிக்குப் பதிலாக வேறொரு பதவியின் பெயரையோ குறிப்பிட்டிருக்கலாம். இப்படி நடந்திருந்தால் ‘தாட் ஸ்லிப்’ என்று சொல்லி விட்டிருக்கலாம்.

ஆனால் கேயார் பேசியது உறுதியான ஒரு அர்த்தத்தில்.. அதாவது ‘ரோசையா தமிழக கவர்னரான பின்பு கலந்து கொள்ளும் முதல் சினிமா பட விழா இந்த நட்சத்திர மழை’ என்பதுதான்.. இது தாட் ஸ்லிப் அல்ல.. டோட்டல் ஸ்லிப்..

ரோசையா தமிழக கவர்னராகப் பொறுப்பேற்றது 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி.  தமிழகத்திற்கு கவர்னராக வந்ததில் இருந்து பல நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறார். சினிமா துறை சார்ந்த நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கும் ரோசையா ஏற்கெனவே வந்திருக்கிறார்.

2012 மார்ச் 23 அன்று தெலுங்கு சங்கம் சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதுகளை வழங்கியவர் கவர்னர் ரோசையாதான்..

2013 ஏப்ரல் 16-ம் தேதி மாலை வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் ‘நாரதன்’ திரைப்படத்தின் பூஜையை ரோசையாதான் நடத்தி வைத்தார்.

2013, ஜூன் 27-ம் தேதி கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்  நடைபெற்ற ‘இளமைப் பயணம்’ என்கிற புதிய தமிழ்ப் படத்தின் பூஜையை ரோசையாதான் நடத்தி வைத்தார்.

2013 செப்டம்பர் 23-ம் தேதியன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் விழாவிலும் கவர்னர் ரோசையா கலந்து கொண்டார்.

2014 ஏப்ரல் 14-ம் தேதியன்று பீனிக்ஸ் மாலில் ‘லக்ஸி’ என்ற பெயருடைய சினிமா தியேட்டர்களை ரோசையாதான் திறந்து வைத்தார்.

2014 ஆகஸ்ட் 3-ம் தேதியன்று கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஏவி.எம்.ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் வழங்கியவர் கவர்னர் ரோசையாதான்.

இப்படி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் பலவற்றில் ஏற்கெனவே கவர்னர் ரோசையா கலந்து கொண்டிருந்தும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார். ‘கவர்னர் கலந்து கொள்ளும் முதல் சினிமா விழா இதுதான்’ என்று ஆணித்தரமாகக் கூறியதை மேடை புகழ்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியவி்லலை..!

இது அவரது எத்தனாவது நிகழ்ச்சி என்பதை இணையத்தை திறந்து பார்த்தாலே தெரிந்துவிடப் போகிறது.. இத்தனை இணையத்தளங்கள்.. நொடியில் தகவலைக் கொட்டும் தகவல் களஞ்சியங்கள் இருந்தும்… ஒரு சங்கத்தின் தலைவரே இப்படி கவர்னர் முன்னிலையிலேயே சொதப்புகிறார் என்றால் மற்றவர்கள் இனிமேல் எப்படியிருப்பார்கள்..?

கவர்னர் ரோசையா இதைக் கேட்டு கேயாரை பற்றி என்ன நினைத்திருப்பார்..? தன்னுடைய நிகழ்ச்சிகள் பற்றி கூட தெரியாதவரா, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார் என்றெல்லாம் சிந்தித்திருக்க மாட்டாரா..? இதனால் யாருக்கு அசிங்கம்..?

இந்த லட்சணத்தில் இணையத்தள செய்தியாளர்கள் தமிழ்ச் சினிமா துறைக்கு வேண்டவே வேண்டாமாம்.. இவர்.. இங்கே.. இத்தனை இடங்களில் வந்திருக்கிறார்.. சென்றிருக்கிறார் என்பதை ஒரு நொடியில் பார்க்கும் வண்ணம் இணையத்தில் இத்தனை இடங்களில் பதிவேற்றி வைத்திருக்கும் நிலையிலேயே இப்படியென்றால்.. இனி இணையத்தள செய்தியாளர்களே இல்லாமல் திரைத்துறை என்ன லட்சணத்தில் செயல்படும்..? பார்ப்போம்..!

Our Score