ரெட்டவாலு – சினிமா விமர்சனம்

ரெட்டவாலு – சினிமா விமர்சனம்

சில திரைப்படங்கள் நல்ல கதை, திரைக்கதை, இயக்கம் இருந்தும் அதையும் தாண்டிய ஏதோவொன்று இல்லாததால் நம் கவனத்தைக் கவராமல் போய்விடும்.. இந்தப் படம் அப்படி போகக் கூடாது..!

அகில். இப்போது இளைஞன். சிறு வயதில் வீட்டிலேயே தன் கண் எதிரிலேயே தண்ணியடித்து, சிகரெட் குடித்து வாழ்ந்து காட்டிய அப்பாவினால் தன் வாழ்க்கையைத் தொலைத்தவன். சிறு வயதில் அந்த வயதுக்கே உரிய சேட்டைகளை செய்யும்போது அதை புரிந்து கொள்ளாமல், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தால்தான் இவன் உருப்படுவான் என்று சொல்லி பொய்யான ஒரு போலீஸ் கேஸில் அகிலை அங்கே கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள்.

அந்தப் பள்ளியில் வளர்ந்த சிறுவர்களுடன் சேர்ந்து மேலும் கெட்டுக் குட்டிச் சுவராய் போய் வெளியில் வருகிறான் அகில். இப்போது அவனது முழு நேர தொழிலும் திருட்டுதான். தன் வீட்டிற்கே வந்து தனது அப்பனையே கட்டிப் போட்டு முட்டி போட வைத்து டார்ச்சர் செய்கிறான். தன்னுடைய வாழ்க்கையை அவர்தான் அழித்தார் என்று குற்றம் சாட்டுகிறான். இவனுக்கு ஒரு அண்ணனும், தங்கையும்கூட உண்டு..

ஒரு திருட்டு வழக்கில் போலீஸ் தேடும்போது தனது வீட்டில் வந்து கலாட்டா செய்கிறான் அகில். அப்போது அவனது அண்ணன் இவனை அடித்து, உதைத்து போலீஸிடம் ஒப்படைக்கிறான். போலீஸ் விசாரணையில் கூட்டாளிகளையும் காட்டிக் கொடுக்கிறான். கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் திடீரென்று கூட்டாளிகளோடு தப்பிக்க முயல.. மற்றவர்கள் பிடிபட்டு இவன் மட்டும் தப்பித்துக் கொள்கிறான்.

கொள்ளையடித்த பணம், நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு எங்கயாவது போவோம் என்று சொல்லி போகும்போது பேருந்தில் ஜோ மல்லூரி மயங்கி விழுந்திருப்பதை பார்த்து அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான். ஜோ மல்லூரி இவன் ஒரு அனாதை என்பதை மட்டும் கேட்டுவிட்டு அவனை தன்னுடன் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

கிராமத்தில் ஜோ மல்லூரிக்கு பெரும் பிரச்சினையிருக்கிறது. அவரது ஒரே மகளை தம்பி ராமையா 20 வருடங்களுக்கு முன்பாக இழுத்துக்கிட்டு ஓடி திருமணம் செய்திருப்பதால் இருவருக்கும் வாய்க்கா வரப்பு தகராறு. ஆனால் ஊருக்கே நாட்டாமை தம்பி ராமையாதான். தம்பி ராமையாவின் மகள் சரண்யா.. அகில் மேல் சரண்யா காதல் கொள்ள.. முதலில் அதை மறுக்கிறான் அகில். ஆனாலும் விடாமல் வற்புறுத்தும் சரண்யா தற்கொலைக்கு முயல.. அவளைக் காப்பாற்றும் அகில் அவளது காதலை அப்போதுதான் ஏற்றுக் கொள்கிறான்.

இவர்களது காதலை தெரிந்து கொண்ட ஜோ மல்லூரி அகிலை வீட்டைவிட்டு அனுப்ப.. தம்பி ராமையா மாமனாரை வெறுப்பேற்ற வேண்டி தனது மகளின் காதல் தெரியாமல் அகிலை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அகில் இங்கே இருப்பதை அறிந்து கொள்ளும் போலீஸ் அகிலை தேடி அங்கே வருகிறது. தம்பி ராமையாவை ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்கிறது. இப்போதுதான் அகில் பெரிய திருடன் என்றெண்ணி வருத்தப்படுகிறார்கள் ஜோ மல்லூரியும், தம்பி ராமையாவும்.

இந்த நேரத்தில் சரண்யாவை வந்து சந்திக்கும் அகில் இருவரும் ஊரைவிட்டு போகலாம் என்கிறான். அந்த நேரத்தில் ஊரே கூடி அவர்களை அடித்து உதைத்தும் ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்து தப்பித்து சென்னைக்கு செல்கிறார்கள்..

தம்பி ராமையா தனது மகளைத் தேடி சென்னைக்கு ஓடி வர.. காதலர்கள் மறைவாக வாழ்கிறார்கள். கடைசியில் என்னாகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்..!

அகிலுக்கு ஏற்ற கேரக்டர்தான்.. தனது அப்பாவை குற்றம்சாட்டி பேசுவதில் அவர் மீதான இரக்கத்தைக் கொண்டு வருவதில் கொஞ்சம் வெற்றி பெற்றிருக்கிறார். இதனாலேயே படத்தின் இறுதிவரையிலும் இவருடைய அப்பாவித்தனம் ரசிக்கப்படுகிறது..! இவரை மாதிரியான நடிகர்களுக்கு சரியான ஒரு படம் கிடைக்க வேண்டும். அது கிடைக்கின்றவரையில் இப்படி நல்ல கேரக்டர்களை பார்த்து பார்த்து நடிக்க வேண்டியதுதான்..!

காதல் படத்தில் சந்தியாவின் நண்பியாக சோடாபுட்டி கண்ணாடி அணிந்து நடித்த சரண்யா நாக் இதில் ஹீரோயின். முன்பைவிட அதிக முதிர்ச்சி உடலிலும், நடிப்பிலும் தென்படுகிறது..  தனது காதலன் திருடன் என்று தெரிந்து அவனிடமே சண்டையிட்டு பின்பு காதலால் சமாதானமாகி செல்லும் காட்சியில் ஒரு தேர்ந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார்.. வெல்டன்..!

ஜோ மல்லூரி, தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் கொஞ்சமும் மிச்சம் வைக்கவில்லை. அதிலும் தம்பி ராமையாவுக்கு இதுவும் ஒரு கோல்டன் கேட்.. அற்புதமான நடிப்பு.. தனது வில்லத்தனத்திலும், அப்பாவித்தனத்திலும் படத்திற்குப் படம் புதிது புதிதாக காட்டுகிறார். இதில் பொறுப்பான, பாசமான, தவிப்பான அப்பனாக பலவாறு நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில் இவர் பேசுகின்ற டயலாக் கச்சிதம்.. அத்தனை உருக்கம்.

கோவை சரளா வழக்கம்போல பல காட்சிகளில் படபடவென பொரிந்து தள்ளியிருக்கிறார். சில காட்சிகளில் இவரைத் தவிர இது போன்ற கேரக்டர்களுக்கு வேறு ஆள் இல்லையோ என்றும் நினைக்க வைக்கிறார்.

ஜோ மல்லூரி ஒரு கிராமத்து பொறுப்பான பெரியவர் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். நடிகை சோனாவும் ஒரு கவர்ச்சி பாத்திரத்தில் 20 நிமிடங்கள் வருகிறார். அதுவே விறுவிறுப்பாக இருக்கிறது.

செல்வகணேஷ் என்பவரின் இசை. பாடல்கள் பரவாயில்லை. கோவில் திருவிழாவில் தம்பி ராமையா சாமி வேடம் போட்டு ஆடும் ஆட்டமும், பாடலும் டபுள் ஓகே… சிட்டி பாபுவின் கேமரா கிராமத்து காட்சிகளை ரகளையாக படமாக்கியிருக்கிறது. குற்றவாளிகளை சேஸிங் செய்யும் காட்சியில் இயக்குநருக்கு மிக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் போலும்.. இதையும் சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார்கள்.

சில லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஓடும்போதே அந்த கைவிலங்கை எப்படி நொடியில் அவிழ்த்தார்கள் என்கிற உண்மையை இயக்குநர் நம்மிடம் சொல்வாரா..?

எப்போதும் அதீத சோகத்தை ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டால் சராசரி சினிமா ரசிகனால் திரைப்படத்தில் ஒன்ற முடியாது. அது இதிலும் அப்படியே நடந்துவிட்டது. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோவொரு சோகத்தைத் திணித்துக் கொண்டே போனதால் படம் அழுவாச்சி காவியமாக மாறிவிட்டது.

படத்தின் பிற்பாதி முழுவதும் மகளைத் தேடுவதும்.. காதலர்கள் பதுங்கிக் கொள்ள இடம தேடுவதுமாகவே நகர்கிறது.. ஆனாலும் கிளைமாக்ஸ் மிக அழுத்தமானது.

பெற்றவர்களை புறக்கணித்துவிட்டு ஊர் உலகம் தெரியாமல் அடுத்தவரை நம்பி பயணிப்பது எத்தனை பெரிய ஆபத்து என்பதை எத்தனையோ திரைப்படங்களில் எடுத்துச் சொல்லியும் திரும்பத் திரும்ப காதலர்கள் ஓட்டம் என்கிற செய்தி வந்து கொண்டேதான் இருக்கிறது..

சிறந்த கதைதான்.. சிறந்த திரைக்கதைதான்.. முடிந்த அளவுக்கு சிறந்த இயக்கத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தேசிகா. இதையும் தாண்டி ஏதோ தேவையாய் இருக்கிறது படம் வெற்றி பெற..! ஆனாலும் இயக்குநர் தேசிகா.. ஒரு இயக்குநராக இதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

வாழ்த்துகளும் பாராட்டுக்களும் இயக்குநர் தேசிகாவுக்கு..!

Our Score