இணையத்தள பத்திரிகையாளர்களை முற்றாகவும், பல செய்திப் பத்திரிகைகளில் பணியாற்றும் செய்தியாளர்களையும் இனிமேல் சினிமா தொடர்பான எந்த விழாக்களுக்கும் அழைப்பதில்லை என்று ‘தமிழ்த் திரைப்பட பாதுகாப்பு பேரவை’ என்ற பெயரில் உருவான திடீர் அமைப்பு தடை செய்துள்ளது நீங்கள் அறிந்ததே..
இந்த அமைப்பில் அங்கமாக வகிப்பது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், மற்றும் பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்.
நேற்று முன்தினம் கூடிய அனைத்து பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, இந்தத் தடை உத்தரவுக்கு ஒப்புதல் அளித்த சக சங்கங்களின் தலைவர்களையும் வன்மையாகக் கண்டித்திருந்தது. இவர்களையும் புறக்கணிப்போம் என்று சொல்லியிருந்தது.
இந்த நிலைமையில் நேற்று திடீரென்று பெப்சியின் தலைவர் ஜி.சிவா சில பத்திரிகையாளர்களை நேரில் அழைத்து இந்த விஷயத்தில் பெப்சி அமைப்பின் நிலையென்ன என்பதை எடுத்துரைத்தார்.
“பெப்சி அமைப்பு எப்போதும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவான நிலையில்தான் இருக்கிறது. சிலர் எடுத்திருக்கும் இந்த முடிவில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு என்னையும் அழைத்திருந்தால் நானும் வந்திருப்பனே..? எங்கள் படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்கள். ஆகையால் அந்தக் கமிட்டி எடுத்திருக்கும் பத்திரிகையாளர்களை அழைப்பதில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் பெப்சியின் கருத்து…” என்று சொல்லியிருக்கிறார் அகில இந்திய பெப்சி மற்றும் தமிழக பெப்சி சம்மேளனத்தின் தலைவரான ஜி.சிவா.
இதேபோல் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.சரத்குமாரும் இந்த விஷயத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்றும்.. தான் இதை ஏற்கவில்லை என்றும் தனது டிவி்டடர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பின்பு எதற்கு அவரவர் சங்கத்தின் சார்பில் கையெழுத்திட ஒப்புக் கொண்டார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.. இவர்களது சங்கத்தின் சார்பில் கையெழுத்திட்டது யார்..? அவர்கள் யாருடைய அனுமதியின் பேரில் கவுன்சிலுக்கு சென்று கையெழுத்தி்டடார்கள் என்றும் தெரியவில்லை.
ஆரம்பமே இப்படி குழப்பமாக இருக்கிறதே..?
எது எப்படியோ… பத்திரிகையாளர்களின் ஒட்டு மொத்த புறக்கணிப்பினால் தமிழ்த் திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை புரிந்து கொண்ட இவர்களை போல… மற்ற சங்க நிர்வாகிகளும் நிலைமையைப் புரிந்து கொண்டு பிரச்சினையை சுமூகமாக முடித்து வைக்க முன் வர வேண்டும் என்று நினைக்கிறோம்..!