இப்படியொரு அறிமுகம் வேறெந்த நடிகைக்கும் கிடைத்திருக்காது என்று உறுதியாகச் சொல்லலாம். ‘அனேகன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகை அமீரா தஸ்தர். வழக்கம்போல தமிழ் தெரியாது.
பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழில் பேசியவர்களின் பேச்சுக்களுக்கு என்ன ரியாக்ட் கொடுப்பதென்றே தெரியாமல் மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தார் அமீரா.
தன்னுடைய பேச்சின்போது படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.வி.ஆனந்த் நாயகிகளான அமீரா மற்றும் ஐஸ்வர்யா தேவன் இருவரையும் பற்றி பேச மறந்து தன் பேச்சை முடித்துவிட்டார்.
பின்பு படத்தின் பி.ஆர்.ஓ. நிகில் முருகன் அதை ஞாபகப்படுத்த மீண்டும் மைக்கை பிடித்த கே.வி.ஆனந்த், “ஹீரோயின்களை பத்தி பேசுறதுக்கு மறந்துட்டேன்.. இந்த அமீரா தஸ்தர் பார்க்குறதுக்குத்தான் ஒரு லூஸு மாதிரி இருப்பார்..” என்று ஆரம்பிக்க எதிர்பாராத இந்த ‘திடீர் அறிமுக’த்தால் கூட்டம் கலகலத்தது.
தன் பெயரை இயக்குநர் உச்சரித்ததால் தன்னைப் பற்றித்தான் ஏதோ சொல்லியிருக்கிறார் என்று நினைத்து அமீரா குழப்பத்தில் இருக்க.. அருகில் இருந்த நடிகர்கள் தனுஷும், கார்த்திக்கும் கூட்டணி போட்டு சிரித்தார்கள். பாவம் அமீரா தஸ்தர்.. பரிதாபமாக முழித்தார்.
மீண்டும் சுதாரித்துக் கொண்ட இயக்குநர் கே.வி.ஆனந்த், “அமீரா பார்க்குறதுக்குத்தான் அப்படியிருப்பார். ஆனால் நிஜத்தில் அப்படியில்லை. ஆனால் அவருடைய தோற்றம் லூசு மாதிரி இருந்ததால்தான் அவரை இந்த கேரக்டருக்கு நான் தேர்வு செய்தேன். காரணம், இப்படத்தில் அவருடைய கேரக்டர் அப்படி..! படம் பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்.. படத்துல மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நிறைய படங்களில் நடித்த அனுபவசாலி போல டேக் அதிகம் எடுக்காமல் நடித்துக் கொடுத்தார்..” என்றார் ஆனந்த்.
இயக்குநர் கே.வி.ஆனந்த் பேசி முடித்தவுடன் நடிகர் தனுஷ், இயக்குநர் ஆனந்த் சொன்னதை அமீராவிடம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்ல, முதலில் திடுக்கிட்ட நாயகி அமீரா பின்பு சிரித்துக் கொண்டார்..!
இதையே பெரிய ஹீரோயின்களை பார்த்து சொல்ல முடியுமா..? அறிமுக ஹீரோயின்னா இதையெல்லாம் தாங்கித்தான் ஆகணும்..!