full screen background image

பிரபல திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் திடீர் மாரடைப்பால் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் திடீர் மாரடைப்பால் காலமானார்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குர் மற்றும் ஒளிப்பதிவாளரான  கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 54.

ஒரு பத்திரிகை புகைப்படக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி.ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநராக மாறியவர்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த், மோகன்லால், ஷோபனா நடிப்பில் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய தேன்மாவின் கொம்பத்து’ மலையாள படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளரானார்.

தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இந்த முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

‘காதல் தேசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பணியைத் துவக்கிய கே.வி.ஆனந்த், இதன் பின்னர் ‘நேருக்கு நேர்’, ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘செல்லமே’, ‘சிவாஜி’ உள்ளிட்ட  பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

பிரித்வி ராஜ், ்ரீகாந்த் நடித்த ‘கனா கண்டேன்’ படம்தான் இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம். இதைத் தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார். மேலும் ‘கோ’, ‘அனேகன்’, ‘கவண்’ ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார்.

மற்றும் ஒரு நடிகராக ‘மீரா’, ‘சிவாஜி’, ‘மாற்றான்’, ‘கவண்’ ஆகிய படங்களில் சில காட்சிகளில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் தயாரிப்பில் பல்வேறு இயக்குநர்கள் இணைந்து உருவாக்கி வரும் ஒரு வெப்சீரிஸையும் கே.வி.ஆனந்த் இயக்குவதாக இருந்தது. ஆனால் தனது புதிய படத்திற்கான வேலைகளை துவக்கியதால் அந்த பிராஜெக்ட்டில் இருந்து விலகிவிட்டார் கே.வி.ஆனந்த்.

கடந்த சில மாதங்களாக தனது அடுத்தப் படத்தின் கதையை உருவாக்கும் பொருட்டு சென்னையை அடுத்த தனது பண்ணைத் தோட்டத்தில் தனது உதவியாளர்களுடன் தீவிரமாக கதை டிஸ்கஷன் செய்து வந்தார் கே.வி.ஆனந்த். கொரோனா பாதிப்பு அதிகமானால் அதை ஒத்தி வைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.

கடந்த 24-ம் தேதியன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக தானே காரை ஓட்டிக் கொண்டுபோய் மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. அன்றிலிருந்து அவர் அங்கே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதே நேரம் அவருடைய மனைவி, மகள்களுக்கும் கொரோனோ தொற்று இருப்பது உறுதியாகிவிட அவர்கள் தங்களது வீட்டில் இருந்தே தங்களைக் கவனித்துக் கொண்டார்களாம்.

கே.வி.ஆனந்த் கடந்த 24-ம் தேதி முதல் மியாட் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட கடும் மாரடைப்பால் அவர் மரணமடைந்துவிட்டார்.

தமிழ்த் திரையுலகம் சமீப காலங்களில் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்து வருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம், அடுத்து இயக்குநர் கே.வி.ஆனந்தை இழந்திருக்கிறது.

கே.வி,ஆனந்த்தின் இந்தத் திடீர் மறைவினால் தமிழ்த் திரையுலகம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Our Score