பிரபல நடிகை பத்மபிரியாவுக்கு இன்று மும்பையில் திருமணம் நடந்துள்ளது.
2005-ம் ஆண்டு ‘தவமாய் தவமிருந்து’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான பத்மபிரியா அதன் பின் ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’, ‘இரும்புக் குதிரை முரட்டு சிங்கம்’, ‘தங்க மீன்கள்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ‘பிரம்மன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட 48 திரைப்படங்களில் நடித்தவர் பத்மபிரியா. சிறந்த நடிகைக்கான தேசிய விருதின் தேர்வாளர்களின் பரிசினை பெற்றவர். 3 முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றிருக்கிறார். 2 முறை சிறந்த இரண்டாவது ஹீரோயினுக்கான விருதினை கேரள அரசிடமிருந்து பெற்றிருக்கிறார். ‘மிருகம்’ தமிழ்ப் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதினையும் பெற்றிருக்கிறார்.
34 வயதான பத்மபிரியா இன்று மும்பையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் தனது நீண்ட நாள் காதலரான ஜாஸ்மின் என்பவரை திருமணம் செய்துள்ளார். இத்திருமணத்தில் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
ஜாஸ்மினும், பத்மபிரியாவும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் டிகிரி படித்தபோது அறிமுகமாகி பின்பு காதலர்களாக மாறியிருக்கிறார்கள். மணமகன் ஜாஸ்மின் ஐஐடியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு அமெரிக்காவில் பொது நிர்வாகம் பற்றிய படிப்பில் மாஸ்டர் டிகிரி வாங்கியவர். தற்போது அமெரிக்காவில் மசாசூட்ஸ் நகரில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
மணமக்களுக்கு நமது அன்பான வாழ்த்துகள்..!