full screen background image

கே.வி.ஆனந்த் இயக்கவிருந்த படத்தின் ஹீரோ நடிகர் சிம்புவா..?

கே.வி.ஆனந்த் இயக்கவிருந்த படத்தின் ஹீரோ நடிகர் சிம்புவா..?

இன்று திடீரென்று அகால மரணமடைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கவிருந்த படத்தில் தான் நடிக்கவிருந்ததாக சிம்புவே சொல்லியிருக்கிறார்.

இயக்குநர் கே.வி.ஆனந்தின் இறப்புக்காக அஞ்சலி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. அந்த அறிக்கையில்தான் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

“தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். அவருடைய ‘கோ’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படியாகிவிட்டது.

சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். “நாம் சேர்ந்து படம் பண்ணலாம்” எனச் சொல்லியிருந்தேன்.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார்… அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு..” என்று சிம்பு தன்னுடைய அஞ்சலியைப் பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய திரைப்படம் ‘காப்பான்’. இந்தப் படம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதியன்று வெளியானது. ‘லைகா நிறுவனம்’ தயாரித்திருந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் குவிக்கவில்லையென்றாலும்.. நஷ்டமாகாமல் தப்பித்தது.

தனது அடுத்தப் படத்திற்கான கதையை 2020-ம் ஆண்டில் இருந்து எழுதத் தொடங்கிய கே.வி.ஆனந்த் நடுவில் வந்த கொரோனா முதல் அலையால் அதனைத் தொடர முடியாமல் இருந்தார்.

அதன் பிறகு கொரோனா கொஞ்சம் ஓய்ந்திருந்த பிறகு சென்னைக்கு அருகேயிருக்கும் தனது பண்ணை வீட்டில் தனது உதவியாளர்களுடன் இணைந்து கதை டிஸ்கஷன் செய்து ஒரு கதையைத் தயார் செய்துவிட்டார்.

அந்தக் கதைக்கேற்ற நாயகர்களையும், தயாரிப்பாளரையும் பிடிப்பதற்காகத்தான் இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் மிகவும் அலைந்து கொண்டிருந்தார். ஹீரோக்கள் அனைவருமே மிகவும் பிஸியாக இருக்க… கொரோனா பயத்தினால் பெரிய பட்ஜெட்டில் படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்களும் முன் வராமல் இருக்க.. இவருடைய பிராஜெக்ட் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது.

இந்த நிலையில்தான் கே.வி.ஆனந்தின் மரணமும் நிகழ்ந்திருக்கிறது. இப்போது சிம்பு சொல்லியிருக்கும் தகவலின்படி கே.வி.ஆனந்த் தனது அடுத்தப் படக் கதையை சிம்புவிடம்தான் சொல்லியிருப்பார் என்று தெரிகிறது. தொடர்ந்து “நேற்றுவரை என்னுடன் தொடர்பில் இருந்தவர்…” என்று சிம்பு சொல்லியிருப்பதால், கே.வி.ஆனந்த் தேர்ந்தெடுத்து வைத்திருந்த நாயகன் சிம்புதான் என்றும் தெரிகிறது.

மேலும், பிரபல மக்கள் தொடர்பாளர் ஜான் சொல்லும் ஒரு விஷயமும் கே.வி.ஆனந்த் படம் இயக்க வேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதைச் சொல்கிறது.

பாலிவுட்டில் இருந்து கோடம்பாக்கத்தில் கால் பதிக்கும் பொருட்டு ஒரு மிகப் பெரிய பட்ஜெட் பிடிக்கும் கதையுடன் வந்த ஒரு மிகப் பெரிய நிறுவனம் தமிழில் அந்தப் படத்தை இயக்குவதற்காக  இயக்குநர்களைத் தேடிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு குறித்து ஜான், கே.வி.ஆனந்திடம் போனில் பேசியபோது, “நான் இப்போதுதான் 2 வருட காலம் செலவழித்து ஒரு கதையைத் தயார் செய்து படப்பிடிப்புக்குப் போகும் அளவுக்கு தயாராக இருக்கிறேன். இப்போது புதிதாக ஒரு கதையை கேட்டு அதை உள் வாங்கி.. அதைத் திரைக்கதையாக்கி ரெடியாகவே ஒரு வருடமாகிவிடும். அதனால் அந்த பிராஜெக்ட் எனக்கு வேண்டாம்..” என்று மறுத்திருக்கிறார்.

அந்த அளவுக்கு தனது கதையின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தவரைத்தான் காலம் கருணை காட்டாமல் அழைத்துச் சென்றுவிட்டது.

இந்தக் கொரோனாவுக்கு ஒரு அழிவு காலம் வந்திடாதோ..?

 
Our Score