இன்று காலையில் சென்னையில் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்தின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், “மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்தின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்..” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், “நான் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன். என்னால் இதை நம்பவே முடியவில்லை. எனது மனம் வலிக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளரான என் நண்பரை நான் இழந்துவிட்டேன். அவர் ஒரு மிகச் சிறந்த திறமையான இயக்குநரும்கூட. இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கே.வி.ஆனந்தின் குருவான ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள செய்தியில், “இது இவ்வளவு சீக்கிரம் இது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீ என்றென்றும் என்னில் பாதியாக இருக்கிறாய்.. சென்று வா..” என்று குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில்,
“வருந்துகிறேன் நண்பா..!
திரையில்
ஒளி கொண்டு
சிலை செதுக்கினாய்!
‘வாஜி வாஜி’ பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என் எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்..!
இதோ
உனக்கான இரங்கல் பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்..?
விதவையான கேமரா
கேவிக் கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்..!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ…!
என்று குறுிப்பிட்டுள்ளார்.
மேலும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகர்கள் சூர்யா, சிம்பு, தனுஷ், அருண் விஜய், சிபி சத்யராஜ், விக்ரம் பிரபு, நிவின் பாலி, டொவினோ தாமஸ், அசோக் செல்வன், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், நடிகைகள் அதுல்யா ரவி, பார்வதி நாயர், வேதிகா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், ஜெ.ஜெ.பிரடெரிக், கதிர், ஹரி மற்றும் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் கே.வி.ஆனந்திற்கு இரங்கல் செய்தியைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இயக்குநர் கே.வி.ஆனந்தின் உயிர் பிரிந்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடல் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
தமிழக அரசின் நோய்த் தொற்று வழிகாட்டுதல் முறைப்படி அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற்றது.
முன்னதாக மருத்துவமனையில் இருந்து கே.வி.ஆனந்தின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு 5 நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்தது.
அங்கே அவருடைய உடலுக்கு அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு அங்கேயிருந்து பெசண்ட் நகர் மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கே திரையுலகத்தினர் பலரும் திரண்டு வந்திருந்து கே.வி.ஆனந்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். கடைசியாக நோய்த் தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.